Published:Updated:

"பாலாவின் 'வர்மா' டீஸருக்கும், கிரிசய்யாவின் 'ஆதித்யா வர்மா' டீஸருக்கும் என்ன வித்தியாசம்?!" #AdithyaVarma

இங்கே ரீமேக் செய்யப்படும் மற்ற எல்லாப் படங்களுக்கும் நேர்ந்த, நேர்கிற சிக்கல்தான் 'வர்மா'வுக்கும் நேர்ந்தது. அது, நகலில் அசலைத் தேடுவது.

கடுங்கோபம், வசைச் சொற்கள், முரட்டுத்தனம், புகைப் பழக்கம், மது பாட்டில்கள்.. என 'அர்ஜுன் ரெட்டி'க்கு இருந்த அடையாளங்கள் ஏராளம். தெலுங்கு சினிமாவின் மறுமலர்ச்சி யுகத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. முன்கோபமுள்ள ஒருவனின் வாழ்க்கையை எந்த அளவுக்கு உண்மையாகத் திரையில் காட்டமுடியுமோ, அப்படிக் காட்டிய படம் அது.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

அதை இந்தியில் 'கபீர் சிங்' என ரீமேக் செய்தபோதும், அதே அளவுக்குப் படம் 'ராவாக' இருக்கிறது என்பதை அதன் முன்னோட்டமே காட்டிவிட்டது. தற்போது அதன் தமிழாக்கமான 'ஆதித்யா வர்மா'வின் டீஸரும் வந்துவிட்டது, அதே வீரியத்துடன்!.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், கடந்தமுறை பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா'வின் டீஸரைக் கண்டு முகம் சுளித்த ரசிகர்களும், இம்முறை ஆதித்யா வர்மாவாக நடித்துள்ள துருவ் விக்ரமை முகம் சிரித்தபடி வரவேற்றுள்ளனர். அப்படி பாலா செய்யாத எதை 'ஆதித்யா வர்மா'வை இயக்கியுள்ள கிரிசய்யா செய்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு படம் என்பது அதன் கதையோ, நடிப்பவர்களின் திறமையோ, பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்களின் வேலைப்பாடுகளோ அல்ல. ஒரு படம் என்பது அதன் நோக்கமும், அதனால் அதைக் காண்பவர் மனதில் ஏற்படும் தாக்கமும்தான். இந்த நோக்கத்தைச் சுற்றிதான், கதை, திரைக்கதை, நடிப்பு, தொழில்நுட்பம் எல்லாம் அமைந்திருக்கவேண்டும். ஏற்கெனவே மக்கள் பலமுறை திரையில், இணையத்தில், மீம்ஸில் என எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் 'அர்ஜுன் ரெட்டி'யை, அவன் வாழ்க்கை முறையை, அவன் கோபத்தை என அவன் கதையின் மொத்த நோக்கத்தையும் உள்வாங்கிய ஒரு திரை ரசனைச் சமூகத்தினூடேதான் 'வர்மா'வின் டீஸர் வெளியானது.

அர்ஜூன் ரெட்டி
அர்ஜூன் ரெட்டி

அவர்கள் அந்த முன்னோட்டத்தை முழுவதுமாக விமர்சித்ததற்குக் காரணம், அர்ஜுன் ஏற்படுத்திய தாக்கத்தை 'வர்மா' ஏற்படுத்தாமல் போனதுதான். இம்முறை, 'ஆதித்யா வர்மா' அந்தக் குறையைத் தீர்த்துவிட்டான் என்றும் சொல்லலாம்.

உதாரணமாக, அர்ஜுன் தனது வாழ்க்கையை ஒரு ஸ்டைலிஷான முறையில் வாழ்பவன். தனக்குக் காயம் ஏற்படும்போது அதில் மதுவை ஊற்றி முதலுதவி செய்துகொள்வது, தன் காதலியைச் சீண்டியவனை அடித்துப் புரட்டி எடுத்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் பகிர்ந்து சமரசம் செய்துகொள்வது என அர்ஜுனின் போக்கு அந்நியமாக இருந்தாலும், பார்ப்பவருக்கு, முன்னெப்போதுமில்லாத ஒரு அனுபவத்தைத் தந்தது. அதைக் கபீர் சிங்கிடமும் காணமுடிந்தது.

வர்மா
வர்மா

ஆனால், வர்மாவிடம் அந்தப் பண்புகள் குறைந்தே காணப்பட்டன. சமூக வலைத்தளங்களில் பலர், 'என்னடா இவன சைக்கோ மாதிரி காட்டியிருக்காங்க' என்றெல்லாம் கருத்தை எழுதியிருந்தார்கள். ஏனென்றால், அவ்வளவு முன்கோபியாக இருந்தாலும், அர்ஜுன் ரெட்டியை யாருமே ஒரு மனநோயாளியாகப் பார்க்கவில்லை. அங்குதான் நோக்கம் சிதைந்தது.

சாகித் கபூர் நடித்துள்ள 'கபீர் சிங்' படத்தை, 'அர்ஜுன் ரெட்டி'யை இயக்கிய சந்தீப் ரெட்டியே இயக்கியிருந்தார் என்பது அதற்கான கூடுதல் பலம். அதனால், பாலா எடுத்த 'வர்மா'வை ஓரம்கட்டிவிட்டு, 'ஆதித்யா வர்மா'வாக இரண்டாவது முறை முழுமையாகத் தமிழாக்கம் செய்யும்போது விக்ரமும், படத்தின் தயாரிப்பாளர்களும் கவனமாக சந்தீப்பின் இணை இயக்குநரான கிரிசய்யாவை ரீமேக் செய்ய நியமித்தனர்.

அர்ஜுன் ரெட்டியின் உடல் மொழியை, கோபத்தை, குரலில் வெளிப்படும் பேராண்மையை... என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து 'ஆதித்யா வர்மா'வின் கதாபாத்திரத்தைச் செதுக்கியிருக்கிறார். எப்போதுமே கெட்ட வார்த்தைகளைத் தமிழில் பேசுவதைவிட, வேறொரு மொழியில் பேசினால் அதில் இருக்கும் வீரியம் குறைவாகவே இருக்கும் என்பது தமிழர்களின் மன இயல்பு. அதனால்தான் என்னவோ, அர்ஜுன் ரெட்டி கெட்ட வார்த்தையை இந்தியில் பேசும் சிக்னேச்சர் வசனமொன்றை அப்படியே தமிழிலும் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பாத்திரப் படைப்பை இதுபோன்றே முன்னோட்டம் முழுக்க மீட்டுருவாக்கம் செய்துள்ளார், கிரிசய்யா.

ஆனால், 'வர்மா'வில் கதாநாயகனின் ஹேர் ஸ்டைல் தொடங்கி, முக பாவனைகள், உடல் மொழி, மனப் பிறழ்வு என எல்லாமே அர்ஜுன் ரெட்டியிலிருந்து மிகத் தொலைவாகவும், அந்நியமாகவும் இருந்தன. உதாரணத்துக்கு, காதல் தோல்வியில் இருக்கும் அர்ஜுன் எல்லாவற்றிலும் வெறுப்பை மட்டுமே காட்டிக்கொண்டிருப்பான். அப்படியிருக்கும்போது ஒருநாள், அவன் வீட்டுப் பணிப்பெண், தான் மது அருந்தும் கோப்பையைத் தெரியாமல் தட்டிவிட்டு உடைத்ததற்காக வீட்டைவிட்டுத் துரத்தி விரட்டுவான். அந்தக் காட்சியில், அந்தக் கேரக்டரின் நடிப்பை ஒரு குறுகிய கட்டுப்பாட்டுக்குள் வெளிக்காட்டினால்தான் சரியாக இருக்கும். கொஞ்சம் அதிகரித்தாலும், ஹீரோ மனநோயாளியைப்போலத் தெரிந்துவிடுவான். குறைந்தாலோ, காமெடியாகிவிடும். இந்த நுணுக்கங்களையெல்லாம் கச்சிதமாக 'ஆதித்யா வர்மா' மீது பொருத்தியிருக்கிறார், கிரிசய்யா.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

சிலருக்கு இந்தப் படத்தில் துருவ் நடித்ததுதான் பிரச்னை என்ற கருத்தும் இருந்தது. அப்படிப் பார்த்தால், இப்போது வெளியாகியிருக்கும் டீஸரில் துருவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும், அடர் தாடியுடன் அவர் மருத்துவராக வரும் சில காட்சிகளில் அப்படியே அவருடைய தந்தையான விக்ரமைத் தோற்றத்தில், நடிப்பிலும் நினைவுபடுத்துகிறார் என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.

காதல் தோல்வியால் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி, தாடி வளர்த்து, வளர்ப்பு நாயின் துணையோடு வாழும் ஒருவனின் நவீன காலத்து தேவதாஸ் கதைதான், 'அர்ஜுன் ரெட்டி'. ஆனால், இந்தப் படத்தின் சிறப்பம்பசம் அதன் முதன்மைக் கதாபாத்திரத்தின் வடிவமைப்புதான். அதைப் பார்த்துவிட்டு, 'வர்மா'வைப் பார்ப்பவர்கள் அதில் அர்ஜுன் ரெட்டியைத் தேடுவது இயல்புதான். ஒருவேளை 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரு படமே இதற்கு முன் வெளியாகாத ஒரு சூழலில், இப்படிப்பட்ட ஒரு முரடனின் கதையைப் பாலா இயக்கியிருந்தால், அது ஒரு வெற்றிப் படமாக, குறிப்பாக ஒரு 'பாலா படமாக' வெளியாகிப் புகழ் பெற்றிருக்கும் வாய்ப்புகள்கூட இருந்திருக்கலாம். என்ன செய்ய, 'அர்ஜுன் ரெட்டி'தான் வந்துவிட்டதே.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

இங்கே ரீமேக் செய்யப்படும் மற்ற எல்லாப் படங்களுக்கும் நேர்ந்த, நேர்கிற சிக்கல்தான் 'வர்மா'வுக்கும் நேர்ந்தது. நகலில் அசலைத் தேடுவது. அதனால்தான், அப்படியே நகலான 'கபீர் சிங்'கும், 'ஆதித்யா வர்மா'வும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு