Published:Updated:

’’ ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ ஸ்பெஷல் படம்தான்; ஆனாலும் ஓர் ஏமாற்றம் ..!" - வசந்த்

’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இயக்குநர் வசந்த்துடன் ஓர் உரையாடல்... #20YearsOfPoovellamKettuppar

'இரவா பகலா...' பாடலை இன்று கேட்டாலும் முதல் இரண்டு நொடிகளில் சோகத்தைக் கடத்திவிடும். அந்தப் பாடல் உள்பட அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே என்றும் இனியவைதாம். தங்கள் திரைப் பயணத்தின் தொடக்க காலங்களில் எப்படியாவது தத்தம் திறமையை ரசிகர்களிடம் காட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த சூர்யா, ஜோதிகா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்த படம், 'பூவெல்லாம் கேட்டுப்பார்'. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் திரைக்கு வந்த இந்தப் படம் இன்றும் அதன் புதுமை மாறாமல், நகைச்சுவை, காதல், இரு இசையமைப்பாளர்களுக்கு இடையே உள்ள முரண்கள் எனப் பல உணர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது. படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அதன் இயக்குநர் வசந்த்தைச் சந்தித்தேன்.

Vasanth
Vasanth

"பூவெல்லாம் கேட்டுப்பார் வெளியாகி 20 வருஷமாயிடுச்சுன்னு நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது. அடுத்த வருஷம் 'கேளடி கண்மணி'க்கு 30 வயசு, 'ஆசை'க்கு 25 வயசு. எவ்வளவு வேகமா ஓடிடுச்சு டைம்" எனக் கூறியபடியே வரவேற்றார்.

"காதலர்களுக்கிடையே வரும் சின்ன சின்ன சண்டையப்போ ' இரவா பகலா ' பாட்டுப்பாடித்தான் நிறைய ஆண்கள் தங்களோட காதலியை சாந்தப்படுத்தியிருப்பாங்க. அந்தப் பாட்டு உருவான தருணத்தைச் சொல்லுங்களேன்," என கேட்க அவர் சிரித்துவிட்டு, "இவ்ளோ மெச்சூர்டா, ரொம்ப ஆழமான சோகத்தக் காட்டுற அந்தப் பாட்டு போடும்போது யுவனுக்கு என்ன வயசு தெரியுமா? 17 இல்லனா 18 இருக்கும்," என ஒரு சர்ப்ரைஸ் தந்தார். மேலும் தொடர்ந்தவர், "என் மொபைல வாங்கி அதுல கேம் விளையாடிக்கிட்டு இருப்பார். அதை புடுங்கி வச்சுகிட்டு வாங்க மியூசிக் போடலாம்னு சொல்லி வேலைவாங்குவேன்," என பழைய நினைவுகளை அசைபோட்டார்.

A still from Irava Pagala
A still from Irava Pagala

"அந்த வயசுலையா அப்படி ஒரு ஆல்பம்", என மனதுக்குள் நான் நினைத்தது அவருக்குக் கேட்டுவிட, "அது யுவனுக்கே வாய்த்த திறமை. ஒரு கதை, அதுல இருக்குற உணர்வுகள். அதனுடைய ஆழம். எல்லாமே புரிஞ்சுக்கிட்டு இசையை உருவாக்குற திறமை," என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அந்தப் படம் ரெண்டு இசையமைப்பாளர்களோட வாழ்க்கையைக் காட்டும். ரெண்டு பேருக்குமே 50 அல்லது 60 வயசு இருக்கும். ஆனா அந்தப் படத்துக்கு மியூசிக் போட்ட யுவனுக்கோ 18 வயசுதான்," என வியப்புடன் அவரிடம் சொன்னேன். "அதான் யுவன்," என சிரித்துக்கொண்டே சொன்னார்.

Vasanth
Vasanth

"அந்த ரெண்டு மியூசிக் டைரக்டர்களும் யாரு," எனக் கேட்டபோது, "அது நீண்டகாலமா தமிழ் சினிமாவுல இருக்குற ஒரு மரபு. ஒரு சீனியர், அவரைத் தொடர்ந்துவர ஜூனியர், ரெண்டு பேருக்கும் நடுவுல அந்தக் காலத்துல இருந்தே இப்படி ஒரு உணர்வுப் போராட்டம் இருந்திருக்கு," எனக் கூறினார்.

" 'நேருக்கு நேர்' உங்க படம்தான். அதுல இருந்த சூர்யாவுக்கும், 'பூவெல்லாம் கேட்டுப்பார்'ல இருந்த சூர்யாவுக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?" என எங்கள் உரையாடலை நடிகர்கள் பக்கம் திருப்பினேன். "கான்ஃபிடென்ஸ் லெவல்தான். முதல் படத்துல சூர்யா நடிப்புக்குப் புதுசு. எந்த வெற்றியோ தோல்வியோ அதுவரை பார்க்கல. அதனால அப்போ இருந்த கான்ஃபிடென்ஸ் அளவு ஒரு மாதிரி இருந்தது. நான் என்ன சொன்னேனோ அத மட்டும்தான் பண்ணுவார். ஆனா ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ பண்ணும்போது சூர்யா ஒரு தேறிய நடிகர். அப்போ ஒவ்வொரு சீனுக்கும் அவர் பக்கத்துல இருந்து சில மாற்றங்கள் மட்டும் சொல்லுவேன். இப்போ காப்பான் சூர்யாவைப் பார்க்கும்போது அவர் வேற லெவல் கான்ஃபிடென்ஸோட இருக்கார்" என்றார்.

Suriya and Jyothika from the film
Suriya and Jyothika from the film

"ஜோதிகா?", என அடுத்த கேள்வி கேட்டபோது, "அவங்க ஒரு சூப்பரான பெர்ஃபார்மர். அப்போ அவ்வளவு அழகா நடிப்பாங்க. இப்போ தனி ஹீரோயினா ஒரு படம் முழுக்க நின்னு நடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாங்க. ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ல அவங்க தமிழ்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு பேசுனாங்க. டப்பிங் வாய்ஸ்தான். ஆனா இப்போ சொந்தக் குரல்ல டப்பிங் பண்ணுற அளவுக்கு அனுபவம்," என கூறினார்.

" 'பூவெல்லாம் கேட்டுப்பார்' சமயத்துலதான் அவங்க ரெண்டு பேரும் காதலிச்சதா வெளிய கிசுகிசு வந்தது?" என்றபோது, "நான் எவ்வளவு வெகுளி தெரியுமா? சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து வந்து, அவங்களோட கல்யாண பத்திரிகையை கொடுத்தப்போ, 'அப்படியாப்பா'னு கேட்டேன். எனக்கு அவங்க லவ் பண்ணுனதுலாம் தெரியாது. நீங்க சொல்லுற மாதிரி என் படத்தோட சமயத்துலதான் நட்பு, விருப்பம் அல்லது, காதல் உருவாகியிருக்கலாம். ஆனா, ரெண்டு பேருமே ரொம்ப புரொஃபஷ்னலான நடிகர்கள். அதனால செட்டுல ஒன்னும் காட்டிக்கமாட்டாங்க. அதுவும் இல்லாம நான் என் குரு பாலச்சந்தர் சார் மாதிரிதான். என் செட்டும் ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்கும். வேலைக்கு வந்தா எல்லாரும் வேலை மட்டும்தான் பார்ப்பாங்க," எனக் கூறினார்.

Vasanth
Vasanth

'கேளடி கண்மணி', 'ரிதம்', 'ஆசை', 'சத்தம் போடாதே', 'மூன்றுபேர் மூன்று காதல்' என வசந்த் இயக்கிய எல்லாப் படங்களுமே ஒருவகை ஆழமான படங்கள். அதை அடிப்படையாக வைத்து, "சீரியஸான படங்களுக்கு நடுவுல, வசந்த் ஏன் திடீர்னு ஒரு காமெடி படம் எடுத்தார்?" என இந்தப் படத்தைப் பற்றி கேட்டேன். "நான் காமெடி பண்ணனும்னு நினைச்சு பண்ணுன படம்தான் இது. ஆனா இது காமெடியா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும். இந்தப் படத்தோட காமெடிக்கு மிக முக்கியமான காரணம் கிரேஸி மோகன். நான் அவர்கூட சேர்ந்து வேலைபார்த்த ஒரே படம். நான் காதல் காட்சியெல்லாம் பார்த்துக்குறேன், நீங்க காமெடியெல்லாம் பார்த்துக்கோங்கன்னு சொல்லித்தான் ஆரம்பிச்சேன். அதுனாலதான் படமும் அப்படி வந்தது. இது மட்டுமில்லாம டெல்லி கணேஷ், வடிவேலு, கோவை சரளா, மாது பாலாஜினு இத்தன திறமைசாலிகள் இருக்கும்போது படம் அப்படித்தான இருக்கும்."

’அப்படி இருந்தாலும், படத்துக்கு ஒரு சீரியஸ் சைடு இருக்கே’, என அடுத்த கேள்வியைத் தொடுத்தேன். "அது உங்களுக்குத் திரையில அவ்வளவு நேர்த்தியா தெரியக் காரணம் ரெண்டு பேர்... நாசர், விஜயகுமார். நாசர் என் இயக்கத்துல நடிச்ச முதல் படம் இதுதான். 'கல்யாண அகதிகள்'ல அவர் அறிமுகம் ஆன சமயத்துலயே அவர தெரியும். பெரிய அனுபவமிக்க கலைஞன். விஜயகுமார் சார்கிட்ட இந்தப் படத்தப் பத்தி சொல்லி இதுதான் உங்க ரோல்னு சொன்னேன். அதுக்காக அவர்பட்ட மெனக்கெடல்கள்தான் படம் இப்படி சிறப்பா வந்ததுக்கு ஒரு காரணம். நீங்க நல்லா பார்த்தீங்கன்னா, அவர் இந்தப் படம் முழுக்க கையில் ஒரு கர்ச்சீஃப் வச்சிருப்பார். அதை அவர் புடிச்சிருக்குற விதமே ரொம்ப நேர்த்தியா இருக்கும். அவ்ளோ புரொஃபஷ்னலான ஒரு நடிகர்," என மெச்சினார்.

"பொதுவா ஒரு இயக்குநருக்கு அவங்க எடுக்குற படங்கள் எல்லாமே மனசுக்கு நெருக்கமானதாதான் இருக்கும். ஆனா இந்தப் படம் உங்க ஸ்டைலுல இருந்து கொஞ்சம் மாறி ஒரு காமெடி படமா இருந்தது. அந்த வகையில உங்களுக்கு இந்தப் படம் எவ்வளோ ஸ்பெஷல்? ரீமேக், ரீ-ரிலீஸ் பண்ணுற ஐடியா இருக்கா," என கடைசியாகக் கேட்டபோது, "இது ரொம்ப ஸ்பெஷல் தான். புது ஜானர், அதுவும் ஏ.சி ஷண்முகம் இது 'காதலிக்க நேரமில்லை' ரேஞ்சுக்கு இருக்குன்னு புகழ்ந்தாரு. இதோட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் சார், அவர் பையன் சுப்புனு எல்லாருமே படத்தைப் பார்த்து ரொம்ப திருப்தி அடஞ்சாங்க. எனக்கு அதனாலேயே படம் ரொம்ப ஸ்பெஷல். ஆனா எங்க எல்லாருக்கும் பெரிய ஏமாற்றம் என்னன்னா, படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடல. இந்தப் படத்த ரீ-ரிலீஸ் பண்ணனும்னா அப்படியே பண்ணாம சில காட்சிகள நீக்கிட்டு இப்போவுள்ள ஆடியன்ஸுக்கு ஏற்ற மாதிரி மாத்திப் பண்ணலாம். ஏன்னா ஆடியன்ஸ் இப்போ டைரக்ட் நரேஷனை விரும்புறதில்ல, நிறைய மறைக்க வேண்டியிருக்கும்," எனக் கூறி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு