சினிமா
தொடர்கள்
Published:Updated:

வீட்ல விசேஷம் - சினிமா விமர்சனம்

வீட்ல விசேஷம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்ல விசேஷம் - சினிமா விமர்சனம்

ரிட்டயர்மென்ட்டை நெருங்கும் செய்வதறியாத குடும்பத் தலைவராக சத்யராஜ் அப்பாவியாகவே வலம் வந்து சிரிப்பை அள்ளுகிறார்.

திருமண வயதில் மகன் இருக்கும்போது, தாய் மீண்டும் கர்ப்பமானால் என்னவெல்லாம் கலாட்டாக்கள் நிகழும் என்பதை காமெடியாகச் சொல்கிறது ‘வீட்ல விசேஷம்.'

ஸ்கூல் வாத்தியாரான ஆர்ஜே.பாலாஜிக்கு அதே ஸ்கூலின் கரெஸ்பாண்டென்ட் அபர்ணா பால முரளியுடன் காதல். தன் காதல் எபிசோடை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அந்த ஜோடி முற்படுகையில், ஆர்.ஜே பாலாஜியின் வீட்டில் நிலைமை தலைகீழாகிறது. காதல் குறையாத அன்னியோன்யத்துடன் இருக்கும் அப்பா சத்யராஜ் - அம்மா ஊர்வசி ஜோடி, மீண்டும் பெற்றோர்களாகப் போகிறார்கள் என்ற செய்தி ஆர்.ஜே பாலாஜிக்கும் அவரின் தம்பிக்கும் பேரதிர்ச்சியாக வந்து விழுகிறது. காலம் கடந்த கர்ப்பம் தவறானது இல்லை என்பதை அந்தக் குடும்பம் உணர்ந்ததா, ஆர்.ஜே பாலாஜியின் காதல் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

வீட்ல விசேஷம் - சினிமா விமர்சனம்

இந்தியில் வெற்றிபெற்ற `பதாய் ஹோ' படத்தைக் கொங்கு மண்ணிற்கு ஷிஃப்ட் செய்து சிற்சில மாற்றங்களுடன் களமிறக்கியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே.சரவணன். நாயகன் இளங்கோவாக ஆர்.ஜே பாலாஜி தன் வருங்கால மாமியாருடன் நீளமான சென்டிமென்ட் வசனம் பேசிவிட்டு ‘டச்வுட்' என்று சதாய்ப்பது அவரின் பர்சனல் டச். ஆனால், பல இடங்களில் அவரின் ஆங்கரிங் பாணியிலான வாய்ஸ் மாடுலேஷனே தொடர்வது மைனஸ்! அனைவரையும் ஓவர்டேக் செய்வது ஊர்வசிதான். மலையாளக் குடும்பத்தில் ஒரே ‘தமிழ்ப்பெண்ணாக' அவரின் முகபாவங்கள் அட்டகாசம். கணவர் சத்யராஜை அடக்கி ஆண்டு டீல் செய்யும் இடங்களும், ஆர்.ஜே பாலாஜியுடனான அவரின் சென்டிமென்ட் காட்சிகளும் இருவேறு துருவங்கள். இரண்டையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். மாமியாராக வரும் மறைந்த நடிகை கே.பி.ஏ.சி.இலலிதா தன் மருமகளுக்காகப் பரிந்துபேசும் காட்சியில் கிளாப்ஸை அள்ளுகிறார்.

ரிட்டயர்மென்ட்டை நெருங்கும் செய்வதறியாத குடும்பத் தலைவராக சத்யராஜ் அப்பாவியாகவே வலம் வந்து சிரிப்பை அள்ளுகிறார். மகனின் சீண்டல் வார்த்தைகளால் தூண்டப்பட்டு கொதித்து அறையும் காட்சியிலும் மனைவியை நேசிக்கும் அம்மாவின் உண்மை முகம் அறிந்து கலங்குமிடத்திலும் தன்னை அழுத்தமாக நிரூபிக்கிறார். இரண்டொரு இடங்களில் மட்டுமே அபர்ணா பாலமுரளிக்கு நடிக்கும் வாய்ப்பு. கிரிஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசை, பலமான சென்டிமென்ட் காட்சி களுக்கு வலுச்சேர்க்காமல் சம்பிரதாய அட்டெண்டன்ஸ் மட்டுமே போடுகிறது.

வீட்ல விசேஷம் - சினிமா விமர்சனம்

கர்ப்பம் என்பது முழுக்க முழுக்க தாயின் விருப்பம் சார்ந்தது, அதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை காமெடியுடன் சொல்ல முற்பட்டிருக்கும் முனைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சீரியல் பாணியில் இழுத்துக்கொண்டே சென்றதும், வசனங்கள் அதற்கு ஒத்துழைக்காமல் போனதும் சறுக்கல்.

மற்றபடி, குடும்பங்களைக் கொண்டாடும் என்டர்டெயினராக இந்த ‘வீட்ல விசேஷம்' விசேஷம்தான்.