சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “நாலடியார் பத்தி வீடியோ போடப்போறேன்!”

திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யா

பொதுவா செக்ஸ் குறித்த நிகழ்ச்சின்னா ஆண்கள்தான் அதிகமா போன் பண்ணிப் பேசுவாங்க. ஆனா, என் ஷோவில் பெரும்பாலும் பெண்கள்தான் போன் பண்ணிப் பேசுவாங்க

‘`சமையல் மந்திரம் மாதிரியான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கெனத் தனித் துணிவு வேண்டும். ஏற்கெனவே நான் போல்டான பொண்ணுதான். அந்த நிகழ்ச்சி என்னை இன்னும் தைரியமா மாத்துச்சு. என்கிட்ட பேசுறதுக்கே பல ஆண்கள் பயப்படுவாங்க... அந்த அளவுக்கு அவங்க கேட்குற கேள்விக்கு என் பதில் இருக்கும்!’’ என்றவாறு தன் பயணம் குறித்துப் பேச ஆரம்பித்தார் திவ்யா. தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘வேலைக்காரன்’ தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆங்கர் to ஆக்டர்: “நாலடியார் பத்தி வீடியோ போடப்போறேன்!”

``சினிமாவிலிருந்து ஆங்கரிங்குக்கு வந்ததற்கான காரணம்..?’’

“ ‘மன்னாரு’ என்கிற படத்தின் மூலமா வெள்ளித்திரைக்குள் நுழைந்தேன். அந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்துத் தொடர்ந்து சினிமா, சீரியல்னு வாய்ப்புகள் வந்துச்சு. நிறைய வரலாற்றுத் தொடர்களில் நடிச்சேன். அப்பதான் ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சிக்கு ஆங்கரிங்கிற்காகக் கேட்டாங்க. அவங்க என்கிட்ட கேட்கும்போது அந்த ஷோ பற்றி எனக்குத் தெரியாது. அக்ரிமென்ட் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்தபிறகு அந்த ஷோ குறித்து என் நண்பர்களிடம் பேசும்போது, ‘அந்த ஷோவுக்கா ஆங்கரிங் பண்ணப் போற?’ன்னு கேட்டாங்க. பிறகு, அந்த ஷோவைப் பார்த்தப்பதான் அது செக்ஸ் குறித்த நிகழ்ச்சின்னு தெரிஞ்சது. நடிக்கும்போது கிடைக்காத பிரபலம் ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சி மூலமா கிடைச்சது. அந்த ஷோ மூலமா நான் பலருக்கும் பரிச்சயம் ஆனேன்.

ஆங்கர் to ஆக்டர்: “நாலடியார் பத்தி வீடியோ போடப்போறேன்!”

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க மனபலம் அவசியம்னு தெரிஞ்சுகிட்டேன். என்னைச் சுற்றிப் பல விமர்சனங்கள் வந்தாலும் என் அம்மா, அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. நாம என்ன தப்பா பண்றோம்... செக்ஸ் தொடர்பா பேசுறது நல்ல விஷயம் தானே? இன்னைக்கு பள்ளிகளில் குழந்தைங்களுக்கு செக்ஸ் எஜுகேஷன் கொடுக்கணும்னு சொல்லிட்டு இருக்கிறோம். அதனால, இது ஒரு ஷோ தான் என்பதில் நான் ரொம்பத் தெளிவா இருந்தேன். என்கூட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அம்மா வந்திருக்காங்க. நாலு சுவருக்குள்ளே பேசுறதை அவங்களும் பார்த்திருக்காங்க. அங்கே யாரும் தவறான கண்ணோட்டத்தில் என்னை அணுக மாட்டாங்க. அப்படித் தவறான கண்ணோட்டத்தில் என்கிட்ட பேசுறவங்களை எப்படி ஹேண்டில் பண்ணணும் என்பதும் எனக்குத் தெரியும்.

பொதுவா செக்ஸ் குறித்த நிகழ்ச்சின்னா ஆண்கள்தான் அதிகமா போன் பண்ணிப் பேசுவாங்க. ஆனா, என் ஷோவில் பெரும்பாலும் பெண்கள்தான் போன் பண்ணிப் பேசுவாங்க. இந்த மாதிரியான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி ஆண்கள் மத்தியில் இடம்பிடிக்கிறது சுலபம். ஆனா, பொண்ணுங்க மனதில் இடம் பிடிச்சுப் பலரது பாராட்டையும் பெற்றிருக்கேன்.”

ஆங்கர் to ஆக்டர்: “நாலடியார் பத்தி வீடியோ போடப்போறேன்!”

``மறுபடி நடிக்க வந்ததற்கான காரணம்..?’’

“நாம ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறோம்னா அதைத் தவிர்த்து நமக்கு எதுவும் தெரியாதுன்னு பலரும் நினைப்பாங்க. ஆனா, அப்படியில்லை. நடிக்கிறது, நடனம் ஆடுறதுன்னு என் திறமையையும் வெளிக்காட்டணும்னு விரும்பினேன். அதனால சீரியல், சினிமான்னு வர்ற வாய்ப்புகளை ஏத்துக்கிட்டேன். இப்ப விஜய் டி.வி-யில் ‘வேலைக்காரன்’ தொடரில் வில்லியா நடிச்சிட்டிருக்கேன். ஆரம்பத்தில் வேலைக்காரி ரோல்னு சொன்னப்ப கொஞ்சம் தயங்கினேன். இந்தத் தொடரில் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் வேலைக்கார ரோலில்தான் நடிக்கிறாங்க என்பதாலும், என் ரோல் சேலஞ்சிங்காக இருந்ததால ஓகே சொல்லிட்டேன். இப்ப ‘கனகா’ கேரக்டர் மூலமா பலருக்கும் என் முகம் பரிச்சயமாகிடுச்சு.

‘தினம் ஒரு திருக்குறள்’ என்கிற தலைப்பில் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ போட்டுட்டிருக்கேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அதைத் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். எனக்கு கொரோனா வந்த சமயம்கூட தவறாம வீடியோ போட்டேன். தொடர்ந்து ‘நாலடியார்’ குறித்து வீடியோ போடணும்னு நினைச்சிருக்கேன். அதே மாதிரி சினிமா, சீரியல் ரெண்டிலும் நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கணும்!”