Published:Updated:

‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க!’

முகென் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
முகென் ராவ்

+2 முடிச்சுட்டு காலஜ்ல சேர்ற ஒரு பையன்தான் ஹீரோ. அப்போதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில முகெனைப் பார்த்தேன். இவர் அந்தக் கதைக்கு சரியா இருப்பார்னு தோணுச்சு.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகென் ராவ், அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகிவந்தார். அப்படி அவர் நாயகனாக நடித்துத் திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம், `வேலன்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கவின் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் `சிறுத்தை' சிவாவின் உதவி இயக்குநராக `வீரம்' முதல் `அண்ணாத்த' வரை பணியாற்றியிருக்கிறார்.
‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க!’
‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க!’

`வேலன்' என்ன கதை?

``அப்பாவுடைய பகையை ஜெயிக்க காதலை இழக்கத் துணியுற மகன், மகனுடைய காதல் ஜெயிக்க பகையாளிகிட்ட தோற்கத் துணியுற அப்பா... அப்பாவுடைய பகை ஜெயிச்சதா? இல்ல, மகனுடைய காதல் ஜெயிச்சதா அப்படிங்கிறதுதான் கதை. அப்பாவா பிரபு சார் நடிச்சிருக்கார். மகனா முகென் பண்ணியிருக்கார். கல்லூரி மாணவன். பொள்ளாச்சி, பாலக்காடுதான் களம். முகெனுக்கு ஜோடியா `கென்னடி கிளப்'ல நடிச்ச மீனாட்சி நடிச்சிருக்காங்க. தவிர, தம்பி ராமையா சார், சூரி சார், ஹரீஷ் பரேடி, `ப்ராங்க்ஸ்டர்' ராகுல்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. 50 வருட தீராப் பகை, அப்பா - மகன் உறவு, காதல், நட்புன்னு எல்லாமே கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். நான் சொன்ன பட்ஜெட்டைவிட அதிகமாகவே போயிடுச்சு. ஆனா, என்னை நம்பி நான் நினைக்கிற விஷயங்களைப் பண்ண அனுமதிச்ச என் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.''

கவின்
கவின்

முகெனைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எப்படி இந்தக் கதைக்குத் தயாரானார்?

``+2 முடிச்சுட்டு காலஜ்ல சேர்ற ஒரு பையன்தான் ஹீரோ. அப்போதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில முகெனைப் பார்த்தேன். இவர் அந்தக் கதைக்கு சரியா இருப்பார்னு தோணுச்சு. அந்த பிக்பாஸ் சீசன் முடியும்போது அவர்கிட்ட கதை சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `கூத்துப்பட்டறை'யில முகெனுக்கும் மீனாட்சிக்கும் கொஞ்சம் பயிற்சி இருந்தது. விஜயன்னு ஒருத்தர் பயிற்சி கொடுத்தார். கமிட்டானவுடன் அவர்கிட்ட ஸ்கிரிப்டைக் கொடுத்துட்டேன். திரும்பத் திரும்பப் படிச்சு கதைக்கு செட்டாகிட்டார். அப்புறம், ஷூட்டிங்குக்குப் பத்து நாள்களுக்கு முன்னாடியே பொள்ளாச்சிக்குப் போய் அந்த ஊர்ல இருக்கிற மக்களோட பழகவிட்டோம். மலேசியாவுல பிறந்து வளர்ந்ததனால, அந்தக் கோவை வழக்கு செட்டாகலை. ஆனா, பொதுவான தமிழில் சூப்பரா பேசி நடிச்சிருக்கார். நடிக்கிறதுல முதல் காம்பினேஷனே சூரி சார் கூடதான். முதல் ரெண்டு மூணு ஷாட் கொஞ்சம் தயக்கமா இருந்தார். அதைப் புரிஞ்சுக்கிட்டு ரொம்ப கூலா வெச்சுக்கிட்டார், சூரி சார். ஸ்பாட்ல எப்படி டெவலப் பண்ணணும், எந்த டைமிங்ல கவுன்டர் போடணும்னு சூரி சார் முகெனுக்குச் சொல்லிக்கொடுத்தார். அதே மாதிரி, எமோஷன் சீன்ல எப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்கணும்னு பிரபு சார் சொல்லிக்கொடுத்தார். அதெல்லாம் அவருக்கு ரொம்ப உதவியா இருந்தது.''

‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க!’
‘ஹீரோவுக்கு பிரபுவும் சூரியும் கத்துக்கொடுத்தாங்க!’

டெக்னிக்கல் டீம் பத்திச் சொல்லுங்க?

``தமிழ்நாடு - கேரளா எல்லையில கதை நடக்கிறதனால ரெண்டு மொழிக்கும் ஏத்த மாதிரி இசை இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அப்படித்தான் இசையமைப்பாளர் கோபி சுந்தரை அணுகினோம். மலையாளத்துல பல படங்களுக்கு இசையமைச்சிருக்கார். தெலுங்குல இவர் இசையமைச்ச `இன்கேம் இன்கேம்' பாடல் செம வைரலாச்சு. தமிழ்ல `தோழா' படத்துக்கெல்லாம் இசையமைச்சிருந்தார். அவர்தான் இசை. சூப்பரா பண்ணிக்கொடுத்திருக்கார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ரூபன் சார்கிட்ட அசிஸ்டன்டா இருந்த சரத் இந்தப் படம் மூலமா எடிட்டரா அறிமுகமாகுறார்.''

படம் பண்ணப்போறேன்னு இயக்குநர் சிவாகிட்ட சொன்னதும் என்ன சொல்லி அனுப்பி வெச்சார்?

``போன லாக்டெளன் முடிஞ்சதும் சிவா சார்கிட்ட இந்தப் படம் கமிட்டாகியிருக்கேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டார். `உண்மையா உழை; ஒழுக்கமா இரு. இதை ரெண்டையும் பண்ணுனா, நிச்சயமா வெற்றிதான்டா'ன்னு சொன்னார். தம்பி ராமையா சார், சூரி சார் எல்லோருக்கும் போன் பண்ணி `என் அசிஸ்டென்ட் எப்படி படம் பண்றான்'னு விசாரிச்சிருக்கார். அந்த அன்புக்கு நன்றி சார்.''