சினிமா
Published:Updated:

வெந்து தணிந்தது காடு - சினிமா விமர்சனம்

சித்தி இத்னானி - சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தி இத்னானி - சிம்பு

ஸ்டைல், நகரத்து உடல்மொழி, பேச்சுவழக்கு என அனைத்தையும் விடுத்து அசல் கிராமத்து மனிதராகவே களம் கண்டிருக்கிறார் சிம்பு

வெந்து தணிந்தது காடு - சினிமா விமர்சனம்

ஏழை ஹீரோ பிழைக்க வழிதேடி மும்பை சென்று, தட்டுத்தடுமாறி வன்முறைப் பாதைக்குத் திரும்பி கேங்ஸ்டர் ஆகும் பல்லாண்டுக் கால டான் டெம்ப்ளேட்டில் சிம்புவை நுழைத்தால் அதுதான் ‘வெந்து தணிந்தது காடு.'

திருநெல்வேலியின் வறண்ட முள்ளுக்காட்டில் ரத்தமும் ரணமுமாய் வாழ்க்கை கழிகிறது முத்து(சிம்பு)க்கு. ஒருகட்டத்தில் உள்ளூர் வம்பு அவரைத் துரத்த, பாதுகாப்பு கருதி அவரை மும்பைக்கு ரயிலேற்றிவிடுகிறார் அம்மா ராதிகா. பரபரப்பான மும்பையின் சந்து ஒன்றில் பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்கிறார் சிம்பு. ஆனால் ‘பரோட்டாக் கடை' என்பது வெளித்தோற்றத்திற்கு மட்டுமே என கொஞ்ச நாள்களில் அவருக்குத் தெரியவருகிறது. இந்த உண்மை தெரியவரும் நேரம் அவருக்கே தெரியாமல் அவர் வன்முறை வலையில் சிக்க, திரும்பி வரவே முடியாத அந்த ஒற்றைவழிப்பாதை அவரை எங்கெல்லாம் இழுத்துப் போய் நிறுத்துகிறது என்பதுதான் மீதிக்கதை.

ஸ்டைல், நகரத்து உடல்மொழி, பேச்சுவழக்கு என அனைத்தையும் விடுத்து அசல் கிராமத்து மனிதராகவே களம் கண்டிருக்கிறார் சிம்பு. சினிமாத்தனமான ஹீரோயிசம் இல்லாத, சிற்றூரைச் சேர்ந்த எளிய இளைஞனாக வரும் முதல்பாதி சிம்புவைப் பார்க்கவே அவ்வளவு புதிதாய் இருக்கிறது. வெந்து தணிந்த காட்டின் ஒற்றைப் பெரிய ஆலமரம் சிம்புதான். நாயகி சித்தி இத்னானி சில காட்சிகளில் நன்றாக நடித்தாலும் வசன உச்சரிப்பில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்.

நீரஜ் மாதவ், சில காட்சிகளே என்றாலும் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். ராதிகாவின் அனுபவத்தில் அவர் சார்ந்த காட்சிகள் நன்றாக எடுபடுகின்றன. அப்புக்குட்டி, சரவணன், ரிச்சர்ட், சித்திக் என ஏராளம் பேர் கேங்ஸ்டர் சினிமாவிற்கான இலக்கணத்தோடு தோன்றி கவனிக்க வைக்கிறார்கள்.

தேவைப்படும்போது தென்றலாய், ரத்தம் தெறிக்கும் வெறியாட்டத்தின்போது பேய்மழையாய் இந்தக் காட்டை மொத்தமாய் அரவணைக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பார்த்துப் பழகிய களம் என்றாலும் முதல்பாதி தீர்க்கமாய் நம்மை ஈர்ப்பதற்கு அவரின் இசையும் ஜெயமோகனின் எழுத்தும் முக்கிய காரணம். அதேநேரத்தில் பாத்திரங்களின் தன்மையை மீறிய கவித்துவ வசனங்கள் துருத்துகின்றன. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கேற்றவாறு பயணித்து பலம் கூட்டுகிறது.

நிதானமாய் நேரமெடுத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோளிலும் ஏறிப் பயணிக்கிறது முதல்பாதித் திரைக்கதை. அதுவே படத்தை நாம் ரசிப்பதற்கும், அது கடத்தும் உணர்வுகளை உள்வாங்குவதற்கும் காரணமாகிவிடுகிறது. எவ்வளவு இயல்பாய் முதல்பாதி நகர்ந்ததோ, அதற்கும் சேர்த்து இலக்கற்றுப் பாய்கிறது இரண்டாம் பாதித் திரைக்கதை. வெகு சுலபமாக யூகிக்க முடிந்த காட்சியமைப்புகள், பலவீனமான காதல் காட்சிகள் கொண்டு நிறைத்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். படமே ஒரு புள்ளியில் முடிந்துவிட்டபோதிலும் இரண்டாம் பாகத்திற்காக நீளும் க்ளைமாக்ஸ்(கள்?) சலிப்பு.

வெந்து தணிந்தது காடு - சினிமா விமர்சனம்

முத்துவின் முதல்பாதி எழுச்சி அளவிற்கு கெளதமின் இரண்டாம்பாதித் திரைக்கதையிலும் எழுச்சி நிகழ்ந்திருந்தால் ‘வெந்து தணிந்த காடு' இன்னும் ஈர்த்திருக்கும்.