Published:Updated:

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ, ரஜினியின் முதல் வில்லன்… நடிகர் ஶ்ரீகாந்த் மறைந்தார்!

ஶ்ரீகாந்த் - ஜெயலலிதா - 'வெண்ணிற ஆடை'
News
ஶ்ரீகாந்த் - ஜெயலலிதா - 'வெண்ணிற ஆடை'

‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில், கண்டிப்பான காவல் அதிகாரியான தன் தந்தையை எதிர்த்து நிற்கும் ‘ஜெகன்’ என்கிற பாத்திரம், ஸ்ரீகாந்த்துக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஆனால், எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை என்பது ஆச்சரியமான செய்தி.

‘அக்கினிப் பிரவேசம்’ – 1966-ம் ஆண்டு ஜெயகாந்தன் எழுதி, ஆனந்த விகடனில் வெளியான இந்த முத்திரைக்கதை அப்போது மிகப் பெரிய அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. பின்னர் நாவலாக விரிவாக்கப்பட்ட இந்தப் படைப்பு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் சினிமாவாக மாறியது. இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘பிரபு’ என்னும் பாத்திரம் மிகச் சிக்கலான தன்மை கொண்டது. ஓர் அப்பாவியான இளம் பெண்ணை சீரழித்து விடும் பிரபுவை முழுக்க முழுக்க வில்லன் என்று முத்திரை குத்தி விட முடியாது. அப்படியொரு நுட்பத்தை இந்தப் பாத்திரத்தில் இழைத்து வைத்திருந்தார் ஜெயகாந்தன்.

‘பிரபு’ என்கிற இந்த அசாதரணமான பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு ஒரு திறமையான நடிகர் தேவை. ஜெயகாந்தனின் நண்பரான நடிகர் ஸ்ரீகாந்த், இந்தப் பாத்திரத்தை ஏற்று ‘பிரபு’வுக்கு முழு நியாயத்தை அளித்தார். இதில் நாயகியாக நடித்த திறமையான நடிகையான லட்சுமிக்கு ஈடு கொடுத்து அசத்தியிருந்தார் ஸ்ரீகாந்த். ஜெயகாந்தனின் இன்னொரு நாவலும் திரைப்படமாக வந்தது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்கிற அந்தத் திரைப்படத்திலும் ‘ரங்கா’ என்கிற எழுத்தாளர் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் ஸ்ரீகாந்த்.

ஶ்ரீகாந்த்
ஶ்ரீகாந்த்

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். ‘வெங்கட்ராமன்’ என்கிற இயற்பெயரைக் கொண்டவரான இவர், இயக்குநர் பாலச்சந்தர் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘மேஜர் சந்திரகாந்த்’ என்னும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய பாத்திரத்தின் பெயர் ‘ஸ்ரீகாந்த்’. பிறகு இதுவே இவரின் நிலைத்த அடையாளமாக அமைந்து விட்டது.

மேடை நாடகங்களின் மூலம் பிரபலமாகிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், இயக்குநர் ஸ்ரீதரின் கண்ணில் பட்டு ‘வெண்ணிற ஆடை’ (1965) என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதில் நாயகியாக அறிமுகம் ஆனவர் ஜெயலலிதா. ஆக… ஜெயலலிதாவுடன் நடித்த முதல் கதாநாயகன் என்கிற பெருமை ஸ்ரீகாந்த்துக்கு உண்டு. முதல் திரைப்படம் மட்டுமல்லாமல், ஜெயலலிதா திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்த கடைசி காலக்கட்டம் வரை அவருடன் இணைந்து பயணம் செய்தார் ஸ்ரீகாந்த்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்டைலான தோற்றம், அலட்டல் இல்லாத மிதமான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு போன்றவை ஸ்ரீகாந்த்தை தனித்து அடையாளம் காட்டின. ஏறத்தாழ 50 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த், பின்பு முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற சக ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயங்கவில்லை.

சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் கவனத்திற்கு உரியதாக மாறின. குறிப்பாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில், கண்டிப்பான காவல் அதிகாரியான தன் தந்தையை எதிர்த்து நிற்கும் ‘ஜெகன்’ என்கிற பாத்திரம், ஸ்ரீகாந்த்துக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்தக் காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக ஸ்ரீகாந்த் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை என்பது ஆச்சரியமான செய்தி.

ஶ்ரீகாந்த் - ஜெயலலிதா
ஶ்ரீகாந்த் - ஜெயலலிதா

இதற்குப் பிறகான காலக்கட்டத்தில் சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற இளம் நடிகர்களின் படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ரஜினி முதன் முதலில் ஹீரோவாக நடித்த ‘பைரவி’ திரைப்படத்தின் எதிர்நாயகன் ஸ்ரீகாந்த்தான்.

வில்லன், குணச்சித்திரம் மட்டுமல்ல, நகைச்சுவை நடிப்பிலும் ஸ்ரீகாந்த்தால் பிரகாசிக்க முடியும் என்பதற்கு ‘காசேதான் கடவுளடா’, ‘பாமா விஜயம்’, ‘காசி யாத்திரை’ போன்ற திரைப்படங்கள் உதாரணமாக அமைந்தன. இவர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த ‘திக்கற்ற பார்வதி’ (1974) என்கிற திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. தன்னை முன்நிறுத்திக் கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இல்லாத ஸ்ரீகாந்த், பிறகு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதோடு தன்னைச் சுருக்கிக் கொண்டார்.

மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், தனது 81 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். அவருக்கு அஞ்சலி.