Published:Updated:

நடிகர், இயக்குநர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்!

விசு
விசு

விசு-வின் மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளை மட்டுமே இயக்கி அழியாத தடம் பதித்தவர் இயக்குநர் விசு. நாடக நடிகர், தயாரிப்பாளர். இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர். குடும்ப உறவுக்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை தன் படங்களில் சிறப்பாக கையாண்டு அதில் வெற்றியும் அடைந்தவர். சின்னத்திரையிலும் தன் முத்திரையை பதித்தார் விசு. அவரின் `அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

விசு
விசு

சம்சாரம் அது மின்சாரம், மன்னன், திருமதி இரு வெகுமதி, மணல் கயிறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம், இந்திய அளவில் 1986-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தங்க மயில் விருது பெற்றது. வயதுமூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

“இந்த நிலைமை மாறும்!” - விசு

சிறுநீரக பிரச்னை அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதன்காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று (22-ம் தேதி) மாலை 5.35மணி அளவில் சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். நாளை பகல் 1.30 மணியளவில் பெசண்ட் நகர் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 இயக்குநர் விசு
இயக்குநர் விசு

இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர், `என் அருமை 50 ஆண்டுகால நண்பன், நாடக திரைப்பட கதை வசனகர்தா இயக்குநர் விசு நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது எனக்கு மிகப்பெரிய இழப்பு’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு