Published:Updated:

மறக்க முடியாத மே 19... சென்னையின் இருட்டு... நிலையற்ற அந்த நாட்கள்! - வெற்றிமாறன் ஸ்பெஷல் ஷேரிங்!

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா

மே 19... தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், இயக்குநர் வெற்றிமாறனின் ஆசானுமான பாலுமகேந்திராவின் பிறந்தநாள். இந்த நாள் குறித்து வெற்றிமாறனிடம் பேசினோம்.

``மே 19... வாழ்வில் எப்போதுமே மறக்கமுடியாத நாள். அவர் இருந்தவரை இந்த நாள் அத்தனை கொண்டாட்டமும் உற்சாகமுமாக இருக்கும். என்னை நானே ரிஜுவனேட் செய்துகொள்ள உதவிய நாளும்கூட.

பாலுமகேந்திரா சார் பிறந்தநாள் என்பது எங்களுக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் ஈவென்ட். அன்று முழுக்க அவர் திட்டமாட்டார். நல்ல மூடில் பீஸ்ஃபுல்லாக இருப்பார். எங்களோட சீனியர் இயக்குநர்கள் வருவாங்க. பாலுமகேந்திரா சாரோட பணியாற்றிய கேமராமேன்ஸ் வருவாங்க. 2003-ல சாருக்கு ஸ்ட்ரோக் வந்து ஆப்பரேஷன் நடந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகில் இருந்து இயக்குநர் பாலாவும் வர ஆரம்பிச்சார். சுகா, நா.முத்துக்குமார், சீனு ராமசாமி, ராம், சுரேஷ்னு எல்லோரும் அன்னைக்கு அவர் ஆஃபீஸ்லதான் இருப்போம்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

ஒவ்வொருத்தரோடயும் பேசுறது, இன்ட்ராக்ட் பண்றதுனு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கும். சீனியர் இயக்குநர்கள், அவங்க அப்ப என்ன படம் பண்றாங்க, அதோட கதைகள்னு சொல்லுவாங்க. நான் வெளிலபோய் படங்கள் பண்ண முயற்சியெடுக்க ஆரம்பிச்ச பிறகு, நான் படமா பண்ண நினைக்கிற கதைகளைச் சொல்லுவேன். அன்றைய நாள் எங்க பாரங்களையெல்லாம் இறக்கிவெச்ச மாதிரி இருக்கும். 1997-ல் உதவி இயக்குநரா ஆனதில் இருந்து 2013 வரை அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடன்தான் இருந்திருக்கிறேன். ஒவ்வொருவரையும், நீ என்ன பண்ற... என்ன படம், யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு சார் எல்லாத்தையும் கேட்டுத்தெரிஞ்சிப்பார்.

பாலுமகேந்திரா சார் பிறந்தநாள் அன்னைக்கு, புது டிரெஸ்தான் போடுவார். கடைசி வரைக்கும் பிறந்தநாளுக்கு புது டிரெஸ் போடுறதை அவர் ஒரு வழக்கமாவே வெச்சிருந்தார். மதியம் லன்ச் அவருடன்தான். அவர் அசைவ உணவுப் பிரியர். அதனால், ஹெவி லன்ச் இருக்கும். ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப்போவார். ஹோட்டல் இல்லையென்றால் வீட்டில் இருந்து உணவு வந்துவிடும். சாப்பிட்டு முடித்ததும், `எல்லோரும் வீட்டுக்கு போங்கடா... டேக் ஆஃப் ஃபார் தி ஈவ்னிங்' எனச் சொல்லி அனுப்பிடுவார். செம சந்தோஷமா ஓடிப்போயிடுவோம்.

அவர்கிட்ட வொர்க் பண்ணும்போது, அவர்கூட நிறைய சண்டைபோடுவேன். அடிக்கடி கோச்சுக்குவேன். அப்பலாம் `நான் உங்களையெல்லாம் எப்படி றெக்கைக்குள்ளயே பொத்திப்பொத்தி வெச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியமாட்டேங்குது... வெளிய போய் சினிமா எப்படி இருக்குன்னு பார்த்தீங்கன்னாதான் தெரியும்'னு சொல்லுவார். சும்மா சினிமா டயலாக் பேசுறார்னு அப்ப நினைச்சுப்பேன்.

Balu mahendra, Dhanush
Balu mahendra, Dhanush

ஆனா, நான் இயக்குநராக முயற்சி பண்ண வெளியே போன பிறகுதான் சினிமாவோட ஒரு நிலையற்ற தன்மை எனக்குப் புரிஞ்சது. அவருடன் சண்டை போடுவேன்... விவாதிப்பேன். கோபப்படுவேன். ஆனா, மீண்டும் அடுத்த நாள் காலைல அவர் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். வெளியே வந்த பிறகு, நாளை எங்கே போகப்போறோம்கிற கேள்வியை எனக்குள்ள சந்திச்ச பிறகுதான் உலகம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது. நாளைக்கு என்ன நடக்கும்ங்கிற அந்தப் பயம்தான் `வெளியபோனா புரியும்'னு சார் சொன்னது. உதவி இயக்குநர்களாக இருந்தபோது எங்களுக்கு அவர் கொடுத்தது, அந்த பயமற்ற நிலையைத்தான்.

நான் ஏன் பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன் என்பதை `மைல்ஸ் டு கோ' தொடரிலேயே சொல்லியிருக்கிறேன். லயோலா கல்லூரிக்கு பாலுமகேந்திரா சார் சினிமா பற்றிய வொர்க்‌ஷாப் நடத்துவதற்காக வருவார். அந்த வொர்க்‌ஷாப்பை அவர் நடத்தும் விதம் மிகவும் பிடிக்கும். அவர் கதைகள் சொல்லும் விதம் பிடிக்கும். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அதன்பிறகு, ஃபாதர் ராஜநாயகம் சார் சொல்லி, அவரிடம் உதவியாளராக சேரப்போனேன்.

Balu Mahendra
Balu Mahendra
மைல்ஸ் டு கோ - 1

நான் எடுக்கும் எல்லா காட்சிகளிலுமே அவருடைய பாதிப்பு இருக்கும். ஒரு காட்சியை எப்படி கன்சீவ் செய்வது, எப்படித் தொடங்குவது, எப்படி முடிப்பது என எல்லாவற்றையும் பாலுமகேந்திரா சார் எப்படி யோசிப்பார், எப்படி யோசித்திருப்பார் என்று மனதுக்குள் நிறுத்திக்கொண்டுதான் அந்தக் காட்சிக்குள் போவேன். அதேபோல் அவரிடம் பிடித்த குணம் என்பது, தவறு செய்துவிட்டால் எவ்வளவு சிறிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டார். தான் செய்வது சரி என்று பட்டால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பார். இன்னொருவர் தவறு செய்கிறார் என்றாலோ அல்லது அது அவருக்குத் தவறாகப்படுகிறது என்றாலோ, எவ்வளவு பெரிய ஆளின் நட்பையும் இழக்கத் தயாராக இருப்பார்.

வாழ்க்கை எனக்கு செகண்ட் சான்ஸ் கொடுத்தது. அதை நானும் உங்களுக்குத் தருகிறேன் என அடிக்கடி சொல்வார். ஒரு ஆலமரம் போல அவர் இருந்தார். அதன் கிளைகளில் உட்கார்ந்து இளைப்பாறும் பறவைகளைப்போல நாங்கள் இருந்தோம். இன்று அந்த ஆலமரம் இல்லை. இளைப்பாற இடம் இல்லாத பறவைகளைப்போல எங்கேபோவதெனத் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.''

கடைசியாக வெற்றிமாறனிடம் ஒரே ஒரு கேள்வி.

``நீங்கள் ஏன் உங்களின் எல்லாப் படங்களையும் இருட்டில் இருந்து தொடங்குகிறீர்கள்..?''

``இரவோடு ஒரு நெருக்கம் எனக்கு உண்டு. சென்னையில் இருட்டில் சுற்றத்தான் பிடிக்கும். காலையில் எட்டு மணிக்கு கல்லூரி. மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும். சைதாப்பேட்டை ஒய்எம்சிஏ அருகே ரூம். மதியம் சாப்பிட்டுவிட்டு 3 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். இரவு 11 மணிக்கு நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன். அப்போதைய சென்னையின் இரவு எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு அமைதி இருக்கும். அங்கே, ஒரு டீக்கடையை இரவு இரண்டரை மணிக்கு மூடி மூன்றரை மணிக்குத்திறப்பார்கள். மூடும்போது எங்களுடையதுதான் கடைசி டீ-யாக இருக்கும். அதேபோல திறக்கும்போது எங்களுடையதுதான் முதல் டீ-யாக இருக்கும். இரவு எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்தான், நான் இரவில் இருந்து ஒவ்வொரு படத்தையும் தொடங்குகிறேன். வேறு எந்த ஸ்பெஷல் காரணமும் இல்லை.''

அடுத்த கட்டுரைக்கு