Published:Updated:

பாரதிராஜாவுடன் சூரி... வெற்றிமாறன் இயக்கத்தில் ஜெயமோகனின் 'துணைவன்'! #VikatanExclusive

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 8-ம் தேதி சத்தியமங்கலத்தில் தொடங்குகிறது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனே தயாரித்து, இயக்குகிறார்.

கொரோனாவால் தள்ளிப்போன 'சூரி' ப்ராஜெக்ட்டை மீண்டும் கையில் எடுத்துவிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், கதை, கதைக்களம் எல்லாமே வேறு.

முதலில் சூரி ஹீரோவாக நடிக்க முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதையை அடிப்படையாக்கொண்டு படம் எடுப்பதாக இருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், கதை விவாதத்தில் சில சந்தேகங்கள் வர 'அஜ்னபி' நாவலை அடிப்படையாகக்கொண்டு படம் இயக்குவதென முடிவெடுத்தார். மீரான் மைதீன் எழுதிய இந்நாவல் இந்தியாவில் இருந்து அரபுநாடுகளுக்கு வேலைக்குச்செல்லும் இளைஞர்களைப் பற்றியது. இதற்காக துபாயில் படப்பிடிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மார்ச்சில் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில்தான் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

சூரி
சூரி

இப்போது, கொரோனா நோயின் தீவிரம் சற்று குறைந்திருக்கும் நிலையில் வெற்றிமாறன் தனது அடுத்தப்படத்தை தொடங்குகிறார். சூரிதான் கதையின் நாயகன். ஆனால், கதை வேறு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான 'துணைவன்' சிறுகதையைத்தான் இப்போது படமாக எடுக்கிறார் வெற்றிமாறன். இதில் சூரியோடு இயக்குநர் பாரதிராஜாவும் மிக முக்கியமான கேரெக்டரில் நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 8-ம் தேதி சத்தியமங்கலத்தில் தொடங்குகிறது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனே தயாரித்து, இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. 'விசாரணை' படத்தைப்போன்றே இப்படமும் வெற்றிமாறனின் படவரிசையில் மிக முக்கியமான இடத்தைப்பிடிக்கும் என்கிறார்கள்.

படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதுதான் சஸ்பென்ஸ். வெற்றிமாறனோடு இதுவரை கூட்டணி சேராத மிகப்பெரிய இசையமைப்பாளர்தான் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்!

அடுத்த கட்டுரைக்கு