Published:Updated:

சூர்யாவுடன் `வாடிவாசல்', சூரியுடன் `அஜ்னபி'... எந்தப் படத்தை முதலில் இயக்குகிறார் வெற்றிமாறன்?

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

வெற்றிமாறனின் அடுத்தடுத்தப்படங்கள் என்ன என்கிற கேள்வியும், முதலில் எந்தப்படத்தை அவர் இயக்குகிறார் என்கிற குழப்பங்களும் கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.

அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளுடன் எதை முதலில் எடுப்பது, எதில் இரண்டாவது இறங்குவது என்கிற பரபரப்பில் இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். தயாரிப்பாளர் ரோனி ஸ்குருவாலாவுக்காக இயக்குநர்கள் கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து ஒரு ஆந்தலாஜி படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஆணவக்கொலை பற்றியது இந்த ஆந்தாலஜி. ஒவ்வொரு இயக்குநரும் 30 நிமிடங்களுக்கு தங்களுடைய ஸ்டைலில் கதை சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆந்தாலஜி அக்டோபர் மாதம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகயிருக்கிறது.

வாடிவாசல்
வாடிவாசல்

இதற்கிடையே வெற்றிமாறனின் அடுத்தடுத்தப்படங்கள் என்ன என்கிற கேள்வியும், முதலில் எந்தப்படத்தை அவர் இயக்குகிறார் என்கிற குழப்பங்களும் கோலிவுட்டில் எழுந்திருக்கிறது. முதலில் நடிகர் சூரியை வைத்து 'அஜ்னபி' நாவலை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். மீரான் மைதீன் எழுதிய இந்த நாவல் இந்தியாவில் இருந்து சின்ன சின்ன வேலைகளுக்காக, பெரிய கடன்களோடு அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்களைப் பற்றியது.

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, சூரி நாயகனாக நடிக்க படத்தை துபாயில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவால் இந்தப் படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி துபாயில் தொடங்கமுடியாமல் போனது. மீண்டும் சூழல் சரியாகி, படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்பதிலும் இன்னும் எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. ஆனால், துபாய்க்குச் சென்றுதான் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

அதனால், இப்போதைய சூழலில் சூரி படம் தாமதமாகும் எனத் தெரிகிறது. ஆனால், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் எடுத்துக்கொடுத்துவிட்டுத்தான் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு வெற்றிமாறன் போவார் என்கிறார்கள். இந்தப் படத்துக்கான கதை, நடிகர்கள் குறித்த விவாதங்கள் நடந்துவருகிறது.

சூர்யாவின் 'வாடிவாசல்' அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு