கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’

விக்கி கௌஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
விக்கி கௌஷல்

நான் ஆரம்பத்தில் எப்போ நடிக்க வந்தேன்? ‘பொறுப்பா படித்து நல்ல பிள்ளையாய் வெளிநாட்டுக்குப் போ!’ - இதுதான் அப்பா எப்போதும் சொல்லும் அறிவுரை

சர்தார் உதம்...’ பாலிவுட்டின் லேட்டஸ்ட் கவன ஈர்ப்பு சினிமா. ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பாகச் செல்லும் வாய்ப்பை நூலிழையில் நம் ஊர் ‘கூழாங்கல்’லிடம் தவறவிட்டிருக்கிறது. படத்தில் உதம் சிங்காக வாழ்ந்திருப்பவர், இளம் நாயகன் விக்கி கௌஷல். பாலிவுட்டின் படா ஸ்டண்ட் டைரக்டர் ஷியாம் கௌஷலின் சீமந்த புத்திரன். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய நீரஜ் கய்வானின் ‘மஸான்’ படத்தின் ஹீரோ. ராணுவ வீரனாய் அசத்திய ‘உரி’க்காக தேசிய விருது பெற்றவர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் சீடர். ‘உதவி இயக்குநர் - நடிகர்’ என எங்கோ ஆரம்பித்து, இப்போது ஆஸ்கர் வரை பேசப்படும் நபராக மாறியிருக்கிறார். அனுராக் காஷ்யப் மூலமாக அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். எளிமையாகவே உரையாடினார் விக்கி...

‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’
‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’

“உங்கள் அப்பா பிஸியான ஸ்டண்ட் மாஸ்டர்... நீங்கள் எப்படி நடிக்க வந்தீர்கள்?”

“நான் ஆரம்பத்தில் எப்போ நடிக்க வந்தேன்? ‘பொறுப்பா படித்து நல்ல பிள்ளையாய் வெளிநாட்டுக்குப் போ!’ - இதுதான் அப்பா எப்போதும் சொல்லும் அறிவுரை. இன்ஜினீயரிங் முடித்ததும் என் மேல்படிப்புக்காக எனக்குப் பதில் அவரே விண்ணப்பம் செய்தார். ஆனால், எனக்கு இயக்குநராகும் கனவு இருந்தது. ‘தேவ் டி’ படம் பார்த்து மனம் முழுக்கப் பித்தேறி, அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராய்ச் சேர முயற்சி செய்தேன். ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்திற்கு அப்பாதான் ஸ்டண்ட் மேக்கிங். ஷூட்டிங்கில்தான் அப்பா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். ‘என் பையனைக் கெடுத்தவன் நீயாடான்னு உன் அப்பா என்னை வந்து புரட்டிப் புரட்டி அடிக்கப்போறார்!’ என விளையாட்டாய் என்மீது கோபப்படுவார் அனுராக். ஆனால், அப்பா ரொம்பப் பாவம். பாலிவுட்டில் செம பிஸியாக ஆக்‌ஷன் கொரியோகிராப் பண்ணுவதால், என்னைப் பெரிதாய் கண்டுகொள்ள நேரமே இருந்ததில்லை. ஒருநாள் கோபத்தில், ‘என் கஷ்டம் என்னோடு போகட்டும். நீ இந்தத் தொழிலுக்கு வேண்டாம்!’ என்றார்.

நான் நீரஜின் ‘மஸான்’ படம் பண்ணிக்கொண்டிருப்பதைச் சொன்னபோது, ‘கடைசிவரை உதவி இயக்குநராய் காலத்தைப் போக்கிவிடாதே!’ என்று சொன்னார். நான் சிரித்தபடி, ‘ஹீரோ நான்தான்!’ என்றேன். நம்பாமல் திகைத்து நின்றார். படம் ரிலீஸானபோது அவரை ஸ்கிரீனிங்குக்கு அழைத்துச் சென்றேன். திரையை நம்பாமல் பார்த்தார். படம் முடிந்ததும் கேட்டேன். கண்கலங்கியதால் அவரால் படமே சரியாகப் பார்க்க முடியவில்லை என்றார். அடுத்த நாள் தனியாகப் போய்ப் பார்த்து, என்னை அழைத்துக் கட்டியணைத்தார். அன்று கொடுத்த அணைப்பு இன்றும் தொடர்கிறது. ஆனால், இப்போது என் படங்களின் சரியான விமர்சகர் அவர்தான்!’’

‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’
‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’

“சர்தார் உதம் ஆஸ்கர் போட்டியில் பின்தங்கியதற்கு வருத்தம் உண்டா?”

“வருத்தமடைய இதில் என்ன இருக்கிறது, இது பின்னடைவும் இல்லையே... ஒரே ஒரு படம் மட்டுமே போகமுடியும் என்கிறபோது, இரு படங்களில் ஒன்று வழிவிட்டுத்தானே ஆகவேண்டும். இது இரண்டாமிடம் பெற்றுவிட்டதால் நல்ல சினிமா இல்லை என்பதாகிவிடுமா? ஜூரிகள் ‘கூழாங்கல்’லைத் தேர்ந்தெடுக்க நிச்சயம் ஸ்பெஷல் காரணமிருக்கும். விருதுகளை மனதில் வைத்து நாங்கள் படத்தை எடுத்திருந்தால் நிச்சயம் வருந்தியிருப்போம். ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தைக் காட்சிப்படுத்தியிருந்த விதத்தை நம் ரசிகர்கள் அத்தனை ஆச்சர்யத்தோடு பேசுகிறார்கள். இன்றைய தலைமுறை மறந்த நிகழ்வை மிக டீட்டெய்லாகவும், அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியிருந்தோம். பிரிட்டிஷார்மீது வருத்தத்தை வலியப் பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர் அந்நாளின் துயரத்துக்காக இப்போது வருத்தப்பட்டார்கள். ஆனால் உதம் சிங்கின் வாழ்க்கை இங்கு பலருக்குத் தெரியாது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணையிட்ட அப்போதைய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுப் பழிதீர்த்தவர் உதம் சிங். அவரது வாழ்க்கையை இவ்வளவு அழகாக எங்கும் ஆவணப்படுத்தவில்லை. சினிமாட்டோகிராபி, எடிட்டிங், புரொடக்‌ஷன் டிசைனிங் எனப் படத்தைப் பற்றி பாசிட்டிவாகப் பல விஷயங்களை அடுக்கியபிறகுதான், ஜூரிகள் நீளத்தைக் குறையாகச் சொன்னார்கள். அவர்களின் தீர்ப்புக்குத் தலைவணங்குவது எங்கள் கடமை. இயக்குநர் ஷுஜித் சர்கார் ஜூரிகளின் முடிவை ஏற்றுக்கொண்டார். ‘கூழாங்கல்’லைப் பார்த்தார். நல்ல படம் என அவரும் சொன்னார். ஆஸ்கருக்கு இந்தியா சார்பாகப் போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பையும் பாராட்டையும் சமூக ஊடகங்களில் ‘சர்தார் உதம்’க்கு அதிக அளவில் கிடைத்திருக்கிறது. திரை விமர்சகர்கள் ‘ஆஸ்கருக்குத் தகுதியான சினிமா இது’ என எழுதுகிறார்கள். என் கரியரின் உச்சம் என்றும் பாராட்டுகிறார்கள். படத்தில் பகத் சிங்காக வரும் அமோல் பரஸாரையும் வெகுவாகப் புகழ்வது மகிழ்ச்சி. பாசிட்டிவ் விமர்சனங்கள் பெருகிவருவது எங்கள் படத்துக்கான பெரிய விருதுகள்தான்!”

‘பொன்னியின் செல்வன் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்!’

“உங்களுக்கும் கேத்ரீனா கைஃப்புக்கும் திருமணமாமே..?”

“திருமணம், காதல் போன்ற நிறைய விஷயங்களைப் பற்றி மீடியாவிடம் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ப்ளீஸ்!”

“அடுத்து என்ன படம் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“மேக்னா குல்சாரின் ‘சாம் பகதூர்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியா அறிந்துகொள்ள வேண்டிய ராணுவ அதிகாரி ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்‌ஷாவின் பயோபிக் அது. மீண்டும் ஒரு ராணுவக்கதை என்பதால் அதற்கான டயட், உடலமைப்பை உருவாக்குதல் என அதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்!’’

“தமிழ்ப்படங்கள் பார்க்கிறீர்களா?”

“நிறைய பார்க்கிறேன். அப்பா தமிழில் வந்த ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்துக்கு சண்டை வடிவமைக்கிறார். அதனால் சமீபத்தில் அவர் சொல்லி ‘மாநகரம்’ பார்த்தேன். மணிரத்னம் படங்கள் என்னோட ஃபேவரைட். அவரின் ‘பொன்னியின் செல்வனு’க்கும் அப்பாதான் சண்டை வடிவமைப்பு. வீட்டில் படத்தைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல இப்போதே பார்க்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. ‘அசுரன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்த்தேன். தனுஷ், விஜய் சேதுபதி படங்களைப் பார்க்கிறேன். சில தமிழ்ப்படங்கள் ரொம்பவே உயிர்ப்புடன் இருக்கின்றன.”