Published:Updated:

`செங்கல்பட்டில் செட்; படக்குழுவின் புதிய முயற்சி!' - 'விஜய் 64' படவேலைகள் தீவிரம்

Vijay with Lokesh Kanagaraj
Vijay with Lokesh Kanagaraj

இந்தப் படத்தின் கதை வெளியே தெரிந்துவிடக் கூடாதென்பதால், ஒரு புதிய முயற்சியையும் படக்குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

மூன்று உதவி இயக்குநர்கள் அணி, பிரமாண்ட செட் அமைப்புகள், நடிகர்கள் தேர்வு என 'விஜய் 64' படத்துக்கான ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்துவருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அக்டோபரில் தொடங்குகிறது. கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமா ஜானர் அல்லது கேம்பஸ் காமெடி டிராமா ஜானரில் இந்தப் படம் உருவாக வாய்ப்பிருக்கிறது என ஒருபுறம் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இப்போது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

`செங்கல்பட்டில் செட்; படக்குழுவின் புதிய முயற்சி!' - 'விஜய்  64' படவேலைகள் தீவிரம்

இந்தப் படத்துக்காக, விஜய் இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் என்றும், அதற்காக தனியாக ஒரு மேக்கப் டெஸ்ட்டும் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எப்போதும்போல் சென்னையில் இல்லாமல், இந்த முறை செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடத்தப்போவதாகவும், அதற்காக அங்கே ஒரு பிரமாண்ட செட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தின் கதை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், ஒரு புதிய முயற்சியையும் படக்குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, படத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர்களை வெவ்வேறு அணிகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், கதைக்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒரு அணியின் முக்கியக் கடமையாக இருக்கும். இந்த அணியில் இருப்பவர்களுக்குக்கூட கதையின் வெவ்வேறு அம்சங்கள்தான் தெரியும். இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தலைப்பு தரப்படும். அதுகுறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து, இயக்குநரிடம் விளக்க வேண்டும். அதிகபட்சம் அவர்களுக்கே இவ்வளவுதான் கதை தெரியுமாம். மற்ற அணிகளுக்கெல்லாம் படத்தின் பிற வேலைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன.

Vijay 64
Vijay 64

இயக்குநர், பிரதான நடிகர்கள், தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் படத்தின் முழுக் கதையும் தெரியாது என்கிறது படக்குழு. இதுவரை இப்படியொரு விஜய் படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் ரசிகர்களுக்கு இது ஒரு சஸ்பென்ஸாகவே இருக்கட்டும் என்பதால், இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு