Published:Updated:

விஜய் - நெல்சன் கூட்டணி... ராஷ்மிகா மந்தனாதான் ஹீரோயினா? #Vijay65

நெல்சன் திலீப்குமார் விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் என்பதை அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவித்தது.

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவரது 65வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி பல மாதங்களாக எழுந்துவந்த நிலையில், இன்று அதற்கு அதிகாரப்பூர்வ பதில் கிடைத்திருக்கிறது. 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான், விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் என்பதை அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருக்கிறது.

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் இருந்தபோதே, விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் இயக்குநர் மகிழ் திருமேனியின் பெயர் எழுந்தநிலையில், அவர் உதயநிதியின் படத்தை முடிக்காமல் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாது என்பதால், அந்த வாய்ப்பு 'சூரரைப் போற்று' இயக்குநர் சுதா கொங்கராவுக்கு சென்றது. சுதா சொல்லிய ஒன்லைன் விஜய்க்குப் பிடித்திருந்தாலும், உடனே படத்தை ஆரம்பிக்க முடியாது என்பதால், அந்த வாய்ப்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மாறியது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

'விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் - இசையமைப்பாளர் தமன்' என இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான சமயத்தில், திடீர் திருப்பமாக இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். அதனால், இந்த படத்தின் இயக்குநராக தற்போது நெல்சன் திலீப்குமார் உறுதி செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தப் படத்திற்கு 'டார்கெட் ராஜா' என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. டிசம்பர் 31-ம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு