Published:Updated:

விஜய் 65: வடபழனியில் ஷூட்டிங்… பூஜா ஹெக்டே டான்ஸுடன் தொடங்குகிறது 2வது ஷெட்யூல்!

விஜய் - நெல்சன்
விஜய் - நெல்சன்

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்டமாக ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன. லாக்டெளன் காரணமாக இதன் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வரும் ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராக, விஜய்யோ தனது அடுத்தப்படத்தின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிவிட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் #Vijay65 படத்தின் முதல் ஷெட்யூல் கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் முடிந்தநிலையில் இரண்டாவது ஷெட்யூலை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் லாக்டெளன் காரணமாக ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து லாக்டெளனில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுவருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது விஜய் - நெல்சன் கூட்டணி.

விஜய் 65
விஜய் 65

நெல்சன் இயக்கியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களை அடுத்து விஜய்யின் 65-வது படத்துக்கும் வித்தியாசமான டைட்டில் வைக்க தீவிர டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்டமாக ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன. லாக்டெளன் காரணமாக இதன் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இப்போது வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அதே சமயம் சத்தமே இல்லாமல் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வேறு ஒரு செட் அமைக்கும் வேலைகளும் நடந்து முடிந்துள்ளன.

ஆரம்பத்தில் விஜய் வரும் செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது அந்த ஐடியாவில் மாற்றம் வந்திருக்கிறது. ‘படப்பிடிப்பு நடத்தலாம்' என அறிவிப்பு வெளியான அன்றே சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அத்தனை படங்களின் ஷூட்டிங்கையும் தொடங்கிவிட வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனம் எண்ணுகிறதாம்.

 பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

விஜய்யும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும், அப்படி படப்பிடிப்பு துவங்கும் அன்று, வடபழனி செட்டிலேயே சின்ன டீமுடன் ரெண்டு வாரங்கள் வரை ஷூட்டிங்கைத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இங்கே பாடல் காட்சி ஷூட் செய்யப்பட இருக்கிறது. பூஜா ஹெக்டேவுடன் நடனமாட இருக்கிறார் விஜய்.

படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் வருடப்பிறப்புக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரைக்கு