Published:Updated:

விஜய்யின் குட்டி ஸ்டோரியும், விஜய்சேதுபதியின் `முட்டை' ஸ்டோரியும்! `மாஸ்டர்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் 'மாஸ்டர்' எப்படியிருக்கிறது? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

கூல் கல்லூரி வாத்தி, திடீரென கூர்நோக்கு இல்ல வாத்தியாகி வில்லன்களை எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதே 'மாஸ்டர்' படத்தின் குட்டி ஸ்டோரி. ஆனால், இந்த குட்டி ஸ்டோரியை லோகேஷ் கனகராஜ் 3 மணி நேர மிக நீண்ட ஸ்டோரியாக்கியிருக்கிறார்.

விசிலடிக்க வைக்கும் 'வாத்தி'யாக விஜய். 'சச்சின்' காலத்து அதே ஸ்லிம், அதே இளமை என விஜய்யின் ஃபிட்னஸ் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. வழக்கமான துள்ளல் நகைச்சுவை உடல்மொழியைத் தவிர்த்துக் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் தன்னால் முடிந்த அளவு நியாயம் சேர்த்திருக்கிறார். "அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்" என்ற விஜய்சேதுபதியின் வசனத்தைப் போலப் படம் முடிந்தும் அவரின் தாக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால், எமோஷனல் காட்சிகளில் `விஜய்ணா' இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்!

மாஸ்டர்
மாஸ்டர்

பவானியாக விஜய் சேதுபதி தன் வழக்கமான நக்கல் கலந்த நடிப்பைப் பின்பற்றியே மிரட்டியிருக்கிறார். அது வில்லன் பாத்திரத்துக்கும் செமையாக செட் ஆகிறது. 'இரும்புக் கை மாயாவி'யாக ஒவ்வொருவரையும் பலி வாங்கும்போதும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறார். "2 நிமிஷம் டைம் தரேன்" என அவர் ஒவ்வொருமுறை சொல்லும்போதும், விஜய்கே 'ஐ யம் வெயிட்டிங்' சொல்லும்போதும் கைத்தட்டலில் தியேட்டர் அதிர்கிறது. படத்தில் விஜய் பல கதைகள் சொன்னாலும், விஜய் சேதுபதி சொல்லும் நெருப்புக்கோழி கதை யதார்த்தத்தைப் பட்டெனப் புரிய வைக்கிறது.

மாளவிகா மோகனனுக்குப் படத்தில் காதலிக்க நேரம் இல்லை. அதனால், அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. ஆண்ட்ரியா தொடங்கி, அழகம்பெருமாள், நாசர், சாந்தனு, கௌரி கிஷன், ஶ்ரீமன், சேத்தன், ரமேஷ் திலக், தீனா, ரம்யா எனப் படத்தில் பல தெரிந்த முகங்கள். ஆனால், 'நானும் விஜய் படத்தில் இருக்கேன்' என வந்து வெறுமனே அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். துணை கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், சிறுவன் பூவையர், இளவயது விஜய் சேதுபதியாக வரும் மாஸ்டர் மகேந்திரன் போன்றவர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றனர்.

மாஸ்டர்
மாஸ்டர்

விஜய் சேதுபதியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றே தெரியாமல் விஜய் சேதுபதியின் கழுத்தில் பேனா வைத்தபடியே விஜய் பேசும் காட்சி செம சிறப்பு. உணர்ச்சிவசத்தால் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சமூகம் எப்படித் தொடர் குற்றவாளிகளாக மாற்றுகிறது எனவும், குடிக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் லோகேஷ் பேசியிருப்பதற்குப் பாராட்டுகள்.

விஜய்க்காக மாஸ் சீன்கள் இருந்தாலும், வில்லன் விஜய் சேதுபதிக்கும் சமபலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் வில்லன் பவானியின் படமாகத்தான் கதையே தொடங்குகிறது. அதேபோல் சண்டைக் காட்சிகளை வழக்கம்போல் அத்தனை சிரத்தையுடன் படமாக்கியிருக்கிறார். பஸ், மெட்ரோ ரயில், க்ளைமேக்ஸ் மாமிச குடோன் சண்டை என அத்தனையிலும் 'ஸ்டன்ட்' சில்வாவின் உழைப்புத் தெரிகிறது. ஆனால், இவ்வளவு மெனக்கெட்டவர்கள் அந்த லாரி சேஸிங் - வில் அம்பு சீனையும் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை, நாகர்கோயில் எனக் கதை எந்த இடத்தில் நடக்கிறது என்பதே பெரும் குழப்பமாக இருக்கிறது. அதேபோல் படத்தில் தேவையில்லாமல் ஏகப்பட்ட கல்லூரிக் காட்சிகள். விஜய் படத்தில் லாஜிக்கையெல்லாம் பார்க்கக்கூடாது என்றாலும், லோகேஷுக்காக லாஜிக் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கூர்நோக்கு இல்லம் என்றால் கானா பாடும் சிறுவர்கள், சர்ட்டிஃபிகேட்டில் இருந்து சாதியையும், மதத்தையும் தூக்கிவிட்டால் சாதி, மதம் ஒழிந்துவிடும் என்கிற இயக்குநரின் புரிதல் குறைபாடுகள் படத்தில் ஆங்காங்கே வெளிப்படுகின்றன.

மாஸ்டர்
மாஸ்டர்

அரசினர் கூர்நோக்கு இல்லம், விஜய்யின் அந்த கிளாசிக் கார், சண்டைக்காட்சிகள் போன்றவற்றில் கலை இயக்குநர் சதீஷ்குமாரின் உழைப்புத் தெரிகிறது. அனிருத்தின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். 'குட்டி ஸ்டோரி' தாளம்போட வைத்தால் 'வாத்தி கம்மிங்', 'வாத்தி ரைடு' போன்றவை பரபர டெம்போவைக் கூட்டுகின்றன. இன்னமும் ஒரு 20 நிமிடத்தை எடிட்டர் பிலோமின் ராஜ் குறைத்திருக்கலாம்.

விஜய் படத்தில் கதைக்கான முக்கியத்துவத்தைவிடவும், பேக்கேஜிங்தான் முக்கியம் என்கிற முடிவை இயக்குநர்கள் எடுத்துவிட்டதுபோல் தெரிகிறது. `சிங்க' பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக ஆண்ட்ரியாவை வைத்து அம்பு விடவைப்பது, நண்பா - நண்பிக்களைக் கவரவேண்டும் என்பதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டு விஜய் சுற்றிவருவது, சிறுவர் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்பதற்காகச் சிறுவனின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக் கதைக்குத் தேவையில்லாமல் சில போலியான விஷயங்களைச் சேர்க்கும்போதுதான் படம் ஒட்டாமல் போகிறது.

மாஸ்டர்
மாஸ்டர்
படத்தின் நீளத்தைக் குறைத்து, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருந்தால் `மாஸ்டர்' இன்னும் மாஸாக இருந்திருக்கும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு