Published:Updated:

``நான் சிரமப்படலைனா `பிச்சைக்காரன்’ மாதிரியான படம் வந்திருக்காது..!’’ - விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

`தமிழரசன்’, `காக்கி’, `அக்னிச் சிறகுகள்’ ஆகிய படங்களைப் பற்றி விஜய் ஆண்டனியின் பேட்டி.

`தமிழரசன்’, `காக்கி’, `அக்னிச் சிறகுகள்’ என ஒரே நேரத்தில் பல படங்கள்... பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்தித்துப் பேசினோம்.

``இதுவரைக்கும் நீங்க நடித்த படங்களிலேயே `அக்னிச் சிறகுகள்’ படத்திற்குத்தான் வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்திருக்கு. இந்த அனுபவம் எப்படி இருந்தது?"

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

``நான் நடித்து, வெளிநாட்டில் ஷூட் செய்த முதல்படம், `அக்னிச் சிறகுகள்'தான். என்னோட படங்களை நானே தயாரிச்சப்பகூட வெளிநாட்டுல ஷூட்டிங் வெச்சது இல்லை. வேற தயாரிப்பு நிறுவனம் நம்மளை ரஷ்யா, சுவிட்சர்லாந்துனு வெளிநாட்டுக்கு அழைச்சுட்டுப் போறாங்க; `வேற லெவல்ல இருக்கும் போல'னு நினைச்சிதான் ஃபாரினுக்குப் போனேன். அங்க போனதுக்கு அப்பறம்தான், பனியில வாழ்றது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. சென்னை வெயில் எல்லாம் பெரிய கொடுப்பினை. நம்ம ஊரோட கிளைமேட்தான் நாம வாழ்றதுக்கு வசதியானதுனு, சுவிட்சர்லாந்துக்குப் போய் கத்துக்கிட்டேன். இயக்குநர் நவீனோட படத்தில் நடிச்சது ரொம்பவே நல்ல அனுபவமா இருந்தது. சீக்கிரமாவே நாங்க நண்பர்களாகிட்டோம். எங்களுக்குள்ள நல்ல புரிதல் வந்திருக்கு. ஹாலிவுட் படங்களின் தரத்தில் ஒரு தமிழ்ப் படமா இது இருக்கும்.’’

``செகண்டு இன்னிங்ஸில் ரொம்பவே பிஸியா இருக்கிற அருண் விஜய்யோடு நடித்ததைப் பற்றி சொல்லுங்க..."

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

``அவரும் நானும்தான் ரூம் மேட். ரொம்ப நல்லா பழகினோம். நானே தயாரிச்சு அதுல நானே நடிக்கும்போது, என்கூட நடிக்கிறவங்க என்னை தயாரிப்பாளராத்தான் பார்ப்பாங்க. அதனாலேயே பல பேர் அதிகமா பேசமாட்டாங்க. இந்தப் படம் முழுக்கவே நான் ஒரு நடிகனா மட்டும் இருந்ததால, மற்ற நடிகர்கள்கிட்ட அதிகமா பேச முடிஞ்சது. அப்படி, அருண் விஜய்கிட்ட அதிகமா பேசிட்டிருந்தேன். அவர் எனக்கு பல ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்தார். ஆனால், என்னாலதான் அதையெல்லாம் ஃபாலோ பண்ணமுடியல. சீக்கிரமே அவர் சொன்ன டிப்ஸை ஃபாலோ பண்ணணும்.’’

``இனிமேல் நடிப்புல மட்டும்தான் கவனம் செலுத்தப் போறீங்களா?"

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

``நடிப்பு, தயாரிப்பு, இசைனு மூணு விஷயங்களையும் சேர்த்து பண்ணும்போது ரொம்பவே சிரமமா இருந்துச்சு. சிரமப்பட்டு அதெல்லாம் நான் பண்ணலைனா, `நான்’, `பிச்சைக்காரன்’ மாதிரியான படங்கள் வந்திருக்காது. அது ஒரு ஸ்டைல் ஆஃப் வொர்க். இப்போ, நடிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்துறது இன்னொரு ஸ்டைல் ஆஃப் வொர்க். அந்த ஸ்டைல் மூலமா நல்ல படங்கள் அமைஞ்ச மாதிரி, இந்த ஸ்டைல் மூலமா நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. ரெண்டுமே ரொம்ப நல்ல அனுபவம்தான். இனிமேல், எப்போ எனக்கு இசையமைக்கணும், தயாரிக்கணும்னு தோணுதோ, அப்போ அதைப் பண்ணிடுவேன்.’’

``நடிகர் சங்கம்; தயாரிப்பாளர் சங்கம்னு ரெண்டு சங்கத்திலும் நீங்க உறுப்பினரா இருக்கீங்க. இப்போ அந்த இரண்டு சங்கங்களும் செயல்படாமல் இருப்பதை எப்படிப் பார்க்கிறீங்க?"

``ரெண்டு சங்கங்களிலும் நான் உறுப்பினராக இருந்தாலும், அதுல என் பங்களிப்பு ஓட்டு போடுறது மட்டும்தான். ஓட்டு போடும்போது, ஏற்கெனவே பதவியில இருந்தவங்க, நல்லா பண்ணியிருந்தா அவங்களுக்கு ஓட்டு போடுவேன். இல்லைனா, புதுசா தேர்தலில் நிக்கிறவங்களுக்கு ஓட்டு போடுவேன். அவ்வளவுதான் என் வேலை. மத்தபடி சங்கத்தோட செயல்பாடுகளில் கவனம் செலுத்த மாட்டேன். அது வேற மாதிரியான அரசியல்; அதுக்குள்ள நான் போக மாட்டேன். இப்போ, இந்த ரெண்டு சங்கங்களும் செயல்படாமல் இருந்தாலும், படங்கள் ரிலீஸாகிட்டுத்தானே இருக்கு. பல படங்களின் ஷூட்டிங்கும் நடந்துட்டுதானே இருக்கு.’’

விஜய் ஆண்டனியின் விரிவான பேட்டிக்கு இந்த வார ஆனந்த விகடனைப் படியுங்கள்.

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு