Published:Updated:

நிஜமாகவே `கோடியில் ஒருவன்'தானா? விஜய் ஆண்டனியின் அரசியல் அவதாரம் எப்படி? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

கோடியில் ஒருவன் - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Kodiyil Oruvan

'மெட்ரோ' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் 'கோடியில் ஒருவன்'. விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் அம்மா சென்டிமென்ட் படமாக வெளிவந்திருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது?

நிஜமாகவே `கோடியில் ஒருவன்'தானா? விஜய் ஆண்டனியின் அரசியல் அவதாரம் எப்படி? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

'மெட்ரோ' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் 'கோடியில் ஒருவன்'. விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் அம்மா சென்டிமென்ட் படமாக வெளிவந்திருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது?

Published:Updated:
கோடியில் ஒருவன் - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Kodiyil Oruvan
தாய் கண்ட கனவை மகன் நிறைவேற்றும் மற்றுமொரு தமிழ்ப்படம் 'கோடியில் ஒருவன்'

'ஒரு தாயின் சபதம்' தொடங்கி 'கே.ஜி.எஃப்' வரை நாம் பார்த்திருக்கும் பல படங்களின் அதே ஒன்லைன்தான். தேனி அருகே கோம்பை பகுதியில் தொடங்குகிறது கதை. அந்தப் பகுதி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர்தான் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழ, விசுவாசமாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் தன்னிடம் வேலைபார்க்கும் பெண் ஒருவரை (திவ்யா பிரபா) களமிறங்குகிறார் அந்தப் பகுதி ஆளும்கட்சிப் பிரமுகர் ('பூ' ராம்). அந்தப் பெண் வெற்றி கண்டு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நிற்கிறார். ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கறை படிந்த கரைவேட்டிகள் சும்மா விடுவார்களா? 'நேர்மைன்னா எங்களுக்கு அலர்ஜி' என்று கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அவரை தீர்த்துகட்ட முடிவெடுக்கின்றனர். நூலிழையில் தப்பித்து அவர் பெற்றெடுக்கும் மகன்தான் கதை நாயகன். தன்னால் செய்ய முடியாததை தன் மகன் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அரசியலால் காயம்பட்ட அவர் அதற்கு ஐஏஎஸ்தான் ஒரே வழி என நம்புகிறார். தாயின் கனவை நிறைவேற்ற சென்னை புறப்படும் நாயகன் வெற்றிவாகை சூடினானா என்பதே கதை!

விஜய் ஆண்டனி | கோடியில் ஒருவன்
விஜய் ஆண்டனி | கோடியில் ஒருவன்

படத்தின் முதல் 15 நிமிடங்கள் பக்கா மாஸ் படத்திற்கான ஓப்பனிங். இப்படியான நல்ல டேக்-ஆஃப் இருந்தும் அதன் பிறகு தட்டுதடுமாடுகிறது படம். பழக்கப்பட்ட கதை என்பது கூட ஓகே, காட்சியமைப்புகளுமே பல வருடங்களுக்கு முன்பு வந்த படமோ என யோசிக்க வைப்பதுதான் படத்தின் பெரும் சிக்கல். 'பிச்சைக்காரன்' அம்மா சென்டிமென்ட், 'திமிரு புடிச்சவன்' சிறார்களை நல்வழிப்படுத்தும் அத்தியாயம் என விஜய் ஆண்டனியின் பழைய படங்களே கண்முன் வந்துபோகின்றன. கவுன்சிலருக்கு இத்தனை அதிகாரமா, அவரை சந்திக்க கவர்னர் வருவாரா என ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. அதிலும் கிளைமாக்ஸ் மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக நம் காதில் 234 முழத்துக்குப் பூ சுற்றுகிறார்கள். (என்னவென்று சொல்ல மாட்டோம்... சஸ்பென்ஸ்🤫)

விஜய் ஆண்டனி | கோடியில் ஒருவன்
விஜய் ஆண்டனி | கோடியில் ஒருவன்

நேர்மை, ஒழுக்கம், அறிவு என எந்த இக்கட்டான சூழலிலும் தான் கொண்ட நெறி வழுவாத கோடியில் ஒருவராக விஜய் ஆண்டனி. ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களுடன் நேர்மையும் ஓடும் (படத்திலேயே சொல்றாங்க பாஸ்!) விஜயராகவனாக நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். டியூஷன் மாஸ்டராக ஏரியா சிறார்களைத் திருத்தும் சாந்த முகம் செட் ஆகும் அளவுக்கு அரசியல் அதிரடி முகம் செட் ஆகவில்லை விஜய் ஆண்டனிக்கு. மாஸ் ஆக்ஷன் காட்சிகளிலும், நீளமான வசனங்கள் பேசும் போதும் திணறுகிறார். பார்த்து பண்ணுங்க ப்ரோ!

கோடியில் ஒருவன் - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Kodiyil Oruvan
கோடியில் ஒருவன் - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்! | Kodiyil Oruvan

நாயகனின் உதவும் உள்ளம் கண்டு காதல் கொள்ளும் நாயகியாக ஆத்மிகா. விஜய் ஆண்டனியுடன் கிட்டத்தட்ட முழு படமும் பயணிக்கிறார். ஆனால், நடிப்பு?! ('அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்ருங்க!'). அவர் மீது விஜய் ஆண்டனிக்கு என்ன மாதிரியான உணர்வு இருக்கிறது என்பது கடைசிவரை புரியவில்லை. மாறாக விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருக்கும் மலையாள நடிகை திவ்ய பிரபா கவர்கிறார். படத்தின் முதல் சில காட்சிகளைத் தாங்கிப்பிடிப்பது அவர்தான்.

'பூ' ராம், சூப்பர் சுப்புராயன், 'பாகுபலி' பிரபாகரன், 'கே.ஜி.எஃப்' ராமச்சந்திர ராஜு என ஏகப்பட்ட வில்லன்கள். இதில் இரண்டாவது பாதியில் என்ட்ரி கொடுக்கும் 'கே.ஜி.எஃப்' வில்லன் ராமச்சந்திர ராஜு மட்டுமே கொஞ்சம் டெரர் காட்டுகிறார். ஆனால், அவருமே கடைசியில் ஹீரோ புகழ் பாடவே பயன்பட்டிருக்கிறார்.

ராமச்சந்திர ராஜு | Kodiyil Oruvan
ராமச்சந்திர ராஜு | Kodiyil Oruvan

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பல பாடல்கள் வந்துபோகின்றன. எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் இதை ஓரளவு ஈடுகட்டுகிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஹவுசிங் போர்டு கட்டடங்களில்தான் நடக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு கதாபாத்திரமாகவே அதைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு!

ஒரு டெம்ப்ளேட் மாஸ் மசாலா படத்துக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும் கதை. ஆனால், சுமாரான திரைக்கதை, சொதப்பல் நடிப்பு, கிளிஷே வசனங்களால் வழக்கமான ஒருவனாகவே தெரிகிறான் இந்தக் 'கோடியில் ஒருவன்'!