
இயக்குநர் விஜய் மில்டன் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து படமொன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது `கொலைகாரன்' ரிலீஸானது. இதில் நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, விஜய் மில்டன் எடுக்கவிருக்கும் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை 'இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். படத்துக்கு 'மழை பிடிக்காத மனிதன்' எனப் பெயரிப்பட்டுள்ளது. படம் பெயர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவும் இருக்கிறது.

தற்போது விஜய் மில்டன் கன்னட மொழியில் படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிய இருக்கிறது. இதற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் கோவா, டையூ-டாமன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளிவருகிறது.