Published:Updated:

230 கோடி பிசினஸ்? - மாஸ்டர் ‘வார்’! - மௌனம் கலைப்பாரா விஜய்?

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

திரைத்துறையைப் பொறுத்தவரையில் முழுவதுமாக சொந்தப் பணத்தை முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் ஃபைனான்சியர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் முதலீடு செய்கிறார்கள்

230 கோடி பிசினஸ்? - மாஸ்டர் ‘வார்’! - மௌனம் கலைப்பாரா விஜய்?

திரைத்துறையைப் பொறுத்தவரையில் முழுவதுமாக சொந்தப் பணத்தை முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் ஃபைனான்சியர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் முதலீடு செய்கிறார்கள்

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்
தமிழ்த் திரையுலகில் இன்றைய தேதியின் மாஸ்டர் பிளாஸ்டர் விஜய்தான். தன் ரசிகர்களின் ‘பல்ஸ்’ அறிந்து ‘பஞ்ச்’ பேசுவதாகட்டும்... ஆடியோ லாஞ்சில் அரசியல் சரவெடி வெடிப்பதாகட்டும்... எப்போதும் ‘என்டர்டெயினிங்’ கிங் என்றே வலம் வருகிறார் விஜய். கூடுதலாக, `விஜய்யின் படம் ரிலீஸ்’ என்றால் சர்ச்சைகளும் றெக்கை கட்ட ஆரம்பித்துவிடும்.

அப்படித்தான், விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ படமும் சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது. படப்பிடிப்பின்போதே வருமானவரித்துறை விசாரணை, சோதனை என அடுத்தடுத்த ஆசிட் டெஸ்ட்டுகளைச் சந்தித்த ‘மாஸ்டர்’, தற்போது விநியோகஸ்தர் களின் நெருக்கடிக்கும் உள்ளாகியிருப்பதாகக் கோடம்பாக்கத்தில் பரவும் தகவல் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘பிகில்’ படம் வெளிவருவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர், விஜய்யின் உறவினரும், தொழிலதிபருமான சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் விஜய் நடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. ‘செந்தூரப்பாண்டி’, ‘ரசிகன்’, ‘தேவா’ ஆகிய படங்களைத் தயாரித்த அனுபவமுள்ள சேவியர் பிரிட்டோ, 2019, அக்டோபர் 3-ம் தேதி இந்தப் புதிய படத்துக்கான பூஜையைப் போட்டார்.

‘மாநகரம்’, ‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியும் இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ‘ரெமோ’, ‘தீரன்’ படங்களுக்கு கேமராமேனாகப் பணியாற்றிய சத்யன் சூர்யன், இசையமைப்பாளர் அனிருத் என ஒரு ஸ்டார் பட்டாளமே குவிந்ததால், படத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று விநியோகஸ்தர்கள் இடையே போட்டி ஏற்பட்டது.

எங்கே தொடங்கியது சிக்கல்?

படம் பாதித் தயாரிப்பில் இருக்கும்போதே, விஜய்யின் நண்பரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவின் தலைவருமான லலித் குமாரும், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமியும் ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக இணைந்தனர்.

` ‘மாஸ்டர்’ படத்தின் மொத்த பட்ஜெட் 130 கோடி ரூபாய்’ என்கிறது திரையுல வட்டாரம். இதில் விஜய்க்கு சம்பளம் மட்டுமே 80 கோடி ரூபாயாம். இதர நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கான சம்பளம் 20 கோடி ரூபாய் என்றும், மீதி 30 கோடி ரூபாயில் படத்தைத் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் எதிர்பார்ப்பு எகிறியதால், கடந்த ஜனவரி மாதமே விநியோகஸ்தர்கள் அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர். படத்தை 230 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வது எனத் தயாரிப்பாளர் தரப்பு தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.

லலித்குமார்
லலித்குமார்

அதேசமயம், திரைப்பட வியாபாரத்தைப் பொறுத்தவரை நடிகர்களின் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட மொத்த வியாபாரத் தொகையை, தீர்மானமாக வெளியே சொல்ல மாட்டார்கள்; `230 கோடி ரூபாய் வியாபாரம்’ என்பது உத்தேசக் கணக்குதான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ஆற்காடு - வடக்கு மற்றும் தெற்கு, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களும் புக் செய்யப்பட்டன. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ‘பிகில்’ படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜய்யிடமும் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர்.

நெய்வேலியில் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் இருந்த விஜய்யைக் கையோடு சென்னைக்கு அழைத்து வந்தவர்கள், அவரது பனையூர் இல்லத்தில் வைத்து விசாரித்தனர். ஆனால், `வருமானவரித்துறை தேடிச் சென்ற எதுவும் கிடைக்கவே இல்லை’ என்கிறார்கள். அடுத்த சிக்கலாக, ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் வீடு, அலுவலகத்தை வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். 48 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடியும் வெறும் கையோடு திரும்பியது ஐ.டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெய்டு... காரணம் என்ன?

விஜய்யைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமானவரித்துறை ரெய்டுகள் குறித்து அத்துறையின் மூத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “திரைத்துறையில் முன்பெல்லாம் நடிகர்களின் சம்பளம் `கறுப்பில் இவ்வளவு’, `வெள்ளையில் இவ்வளவு’ என்று பேசப்படும். ஆனால், இப்போது ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் பெரிய அளவில் கறுப்புப் பணத்தைக் கைமாற்ற முடியாது. அதனால், சில நடிகர்கள் சொந்தப் பணத்திலேயே ஒரு டம்மி தயாரிப்பாளரை வைத்து படமெடுத்து, தாங்களே அதில் நடிக்கிறார்கள். அந்தப் படத்தை கூடுதல் விலைக்கு விற்று, மொத்த பட்ஜெட்டில்

70 சதவிகிதத்தை `சம்பளம்’ என்கிற பெயரில் ‘வெள்ளை’ப் பணமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். ‘மாஸ்டர்’ திரைப்படமும் விஜய்யின் உறவினர் பிரிட்டோவின் பெயரில் எடுக்கப்பட்டதால், சந்தேகம் ஏற்பட்டது. அதனாலேயே ரெய்டு நடத்தப்பட்டது” என்றார்.

கொரோனா கொடுத்த அடி

இவ்வளவு நெருக்கடிகளை ‘மாஸ்டர்’ சந்தித்துக்கொண்டிருக்கும்போதும், அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்கள் நடிகர் விஜய் மீதான நம்பிக்கையில் மனம் தளராமல் இருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்ததுபோல வந்தது கொரோனா தொற்று. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’ படமும் இதில் சிக்கியது.

`பெயர் வெளியிட வேண்டாம்’ என்கிற கோரிக்கையுடன் பேசிய ‘மாஸ்டர்’ பட விநியோகஸ்தர் ஒருவர், “தமிழ்த் திரையுலகில் ரஜினி, அஜித், விஜய்க்குத்தான் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கிறது. போட்ட பணத்தை ஒரே வாரத்தில் எடுத்துவிடலாம். ‘மாஸ்டர்’ படத்தில் ஸ்டார் பட்டாளங்களும் இணைந்துள்ளதால், படத்தை மினிமம் கேரன்டியில் வாங்கினோம் (படத்தின் லாபம், நஷ்டம் இரண்டுமே விநியோகஸ்தரைச் சார்ந்தவை). விஜய் மீதான நம்பிக்கையில், ‘மாஸ்டர்’ படத்தையும் அப்படித்தான் பலரும் பல கோடி ரூபாய் கொடுத்துப் பெற்றோம்.

வட்டிக்கு வாங்கித்தான் அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளோம். பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை ஆறு மாதங்களுக்கு எவ்வளவு வட்டி வந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தச் சூழலில், `படத்தை மினிமம் கேரன்டி முறையில் வெளியிட முடியாது’ என எங்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தபோது, டிஸ்ட்ரிபியூஷன் (லாபம், நஷ்டம் இரண்டுமே தயாரிப்பாளரைச் சார்ந்தவை) முறையில் படத்தை வெளியிட, தயாரிப்பாளர் தரப்பு முன்வந்துள்ளது. ஆனாலும், வட்டிதான் எங்களுக்குப் பிரச்னை. இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இப்படியே வட்டி கட்டிக்கொண்டிருக்க முடியும்?

இந்த ஆண்டு டிசம்பருக்கு முன்னதாக தியேட்டர்களைத் திறக்கும் சூழல் இல்லை. அப்படியே திறந்தாலும், கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் தியேட்டருக்கு வருவது சந்தேகம்தான். இது போன்ற சிக்கல்களால்தான் நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கிறோம்.

படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அது இனி சாத்தியமில்லை. `குறைந்தபட்சம் ஓ.டி.டி முறையிலாவது படத்தை ரிலீஸ் செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்’ என்றும் கேட்டுப் பார்த்துவிட்டோம். ‘நம்பிக்கையோடு இருங்கள்’ என்று மட்டும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்களிடம் இருந்து பதில் வருகிறது. நடிகர் விஜய் எங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறோம்.” என்றார்.

நெருக்கடி ‘மாஸ்டரு’க்கு மட்டுமல்ல!

திரையுலகம் சந்தித்துவரும் இந்த நெருக்கடி குறித்து விநியோகஸ்தர் ஜெயம் எஸ்.கே.கோபியிடம் பேசினோம். “திரைத்துறையைப் பொறுத்தவரையில் முழுவதுமாக சொந்தப் பணத்தை முதலீடு செய்பவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் ஃபைனான்சியர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் முதலீடு செய்கிறார்கள். கடந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய பல படங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே விநியோகஸ்தர் களிடமிருந்து அட்வான்ஸ் தொகை பெறப்பட்டுவிட்டது. `ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகிவிடும்; போட்ட பணத்தை எடுத்துவிடலாம்’ என நினைத்திருந்த விநியோகஸ்தர்கள் கொரோனாவால் பேரிடியைச் சந்தித்துள்ளனர்.

விஜய்
விஜய்

இப்போது தியேட்டர்களை மூடி நான்கு மாதங்களாகிவிட்டன. புதிய படங் களுக்காகக் கொடுத்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கட்ட முடியாமல் விநியோகஸ்தர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த ஆண்டு முடிவதற்குள் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் சூழல் இல்லை. மக்களும் தைரியமாக தியேட்டருக்கு வரும் சூழல் இல்லை. படம் ரிலீஸ் ஆனாலும் போட்ட பணத்தை எடுக்க முடியாது. இதனால், பல படங்களுக்கு வட்டிக்குப் பணம் வாங்கி அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர் களுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுக்கும் குணம் ரஜினிக்கு உண்டு. வெளிப்படையாகவே பலர் அவரிடம் கேட்பதும், அவர் செய்வதும் நடக்கும். அஜித்தும் இப்படிச் செய்வதுண்டு. ‘சத்யஜோதி’ தியாகராஜனுக்கு ‘விஸ்வாசம்’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளார். ‘பாபா’ பட நேரத்தில் ரஜினி கைகொடுத்தார். இதே போன்றதொரு நல்ல மனதுடன், ‘மெர்சல்’ தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிகர் விஜய் ஒரு படம் நடித்துக் கொடுக்க முன்வர வேண்டும். இப்போது ‘மாஸ்டர்’ பட விநியோகஸ்தர்களைக் கைதூக்கிவிட வேண்டிய பொறுப்பும் அவருக்கு உள்ளது” என்றார்.

“மாஸ்டருக்கு கேரன்டி!”

‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப் பாளரான லலித்குமாரிடம் பேசினோம். “நீங்கள் கூறுவதுபோல விநியோகஸ்தர் யாரும் என்னிடம் பணம் கேட்டு அணுகவில்லை. புதிதாகத் தொழிலுக்கு வந்த விநியோகஸ்தர்கள் யாருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை விற்கவில்லை. நீண்டகாலமாக இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கே படத்தைக் கொடுத்திருக்கிறோம். படம் ரிலீஸுக்கு முன்னதாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவிடுவோம். ஓ.டி.டி முறையில் படத்தை விற்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தினேன். எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதனால் ஓ.டி.டி முறையில் படத்தை வெளியிடவில்லை. இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களால் யாருக்கும் எந்த நஷ்டமும் ஏற்படாது. அதற்கு நான் கேரன்டி!” என்றார் நிதானமாக.

அடுத்தடுத்த ரெய்டு காட்சிகளுக்குப் பிறகு, நெய்வேலியில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்யைக் காண ரசிகர்கள் அலைகடலாகத் திரண்டார்கள். அப்போது வேனில் ஏறிய விஜய், ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். ‘தலைவா...’ என அவர்கள் விண்ணதிர கோஷமிட, அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த மாஸுக்காகத்தான் விநியோகஸ்தர்கள் கடன் வாங்கி,, பணத்தைக் கொட்டியுள்ளனர். விநியோகஸ்தர்களுக்கு விஜய் நம்பிக்கையூட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. மௌனம் கலைப்பாரா விஜய்?

அரசியலும் விஜய்யும்!

‘காவலன்’ திரைப்படத்திலிருந்தே விஜய்க்கு அடிமேல் அடிதான். ‘சுறா’ படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு, திரையரங்க உரிமையாளர்கள் பிரச்னை செய்யவும், சுழலில் சிக்கியது ‘காவலன்.’ அடுத்ததாக வந்த ‘துப்பாக்கி’, தலைப்பைக் காப்பியடித்ததாகப் பிரச்னையில் சிக்கித் தவித்தது. அதற்கு அடுத்து வந்த ‘தலைவா’ கேட்கவே வேண்டாம்... ‘டைம் டு லீட்’ என சப்-டைட்டில் வைத்ததற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் உருட்டியெடுத்தார் என்பது ஊருக்கே தெரியும். ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்த கொடநாடு வரை சென்று, எஸ்.ஏ.சி-யும் விஜய்யும் காத்திருந்து திரும்பியதுதான் மிச்சம். இறுதியில் சப்-டைட்டிலை எடுத்த பிறகுதான் படம் ரிலீஸானது.

அதற்குப் பிறகு நேரடியாகவே அரசியல் பஞ்ச்களைத் தன் படத்தில் வைக்கத் தொடங்கினார் விஜய். ‘கத்தி’யில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கிண்டிக் கிளறினார். அடுத்து வந்த ‘புலி’ திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. படத்தின் முதல் ஷோ ரத்தானதுதான் மிச்சம். அடுத்ததாக வந்த ‘தெறி’யில் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை.

‘மெர்சல்’ படத்தில்தான் நேரடி அரசியல் மோதல் தொடங்கியது. ஜி.எஸ்.டி சம்பந்தமாக ஒரு காட்சியை நீக்கச் சொல்லி பி.ஜே.பி-யினர் போராட்டத்தில் குதித்தனர். ‘ஜோசப் விஜய்’ என அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குறிப்பிட்டு விமர்சிக்கவும் திரையுலகம் போர்க்களமானது. ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அடுத்து வந்த ‘பிகில்’ படத்தில், ‘காவி உடையில் சிலுவை அணிந்துவிட்டார். கறிக்கடைக் கட்டையின் மீது கால் வைத்துவிட்டார்’ என ஏகப்பட்ட இடைஞ்சல்கள் விஜய்க்கு முளைத்தன. இந்தப் படத்தில் 300 கோடி ரூபாய் வருமானம் குவித்ததாகச் சொல்லப்பட்டதுதான் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது வருமானவரித்துறை விசாரணை வரை விஜய்யைக் கொண்டு சென்றது.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் அனுமதியின்றி `மாஸ்டர்’ படப்பிடிப்பு நடத்தியதாக பி.ஜே.பி-யினர் போராட்டம் நடத்தினர். நெய்வேலியில் ஷூட்டிங்கை முடித்த இறுதி நாள் அன்று செல்ஃபி எடுத்து எதிர் குரூப்பை அதகளப்படுத்தினார் விஜய். இப்போதுகூட `மாஸ்டர்’ விநியோகஸ்தர்களுக்கு வட்டிப் பிரச்னை என்று பி.ஜே.பி-யின் சசிகலா புஷ்பாவின் ஆட்கள்தான் தூண்டிவிடுவதாக விஜய் தரப்பு கருதுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அரசியல் அரிதாரத்தை விஜய் பூசிக் கொண்டுவிட்டார். இனி அவரே நினைத்தாலும், அந்தச் சாயம் அவரிடமிருந்து அழியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism