Published:Updated:

விஜய்தான் நம்பர் 1?

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

அள்ளும் வசூல்... அரசியல் சர்ச்சை... அதிரடி ரெய்டு...

விஜய்தான் நம்பர் 1?

அள்ளும் வசூல்... அரசியல் சர்ச்சை... அதிரடி ரெய்டு...

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

படம்: அருண் டைட்டன்

‘`ஒரு குழந்தை உருவாக பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம், ஆனா, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது...’’ ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் மாஸ் டயலாக் இது. தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டாராக உயர்வதற்கு விஜய்க்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 1992-ம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் படியில் ஏறிய விஜய் இன்று உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.

படம் சுமார், கதை சுமார், லாஜிக்குகள் இல்லை, ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் அத்தனையையும் தாண்டி ‘பிகில்’தான் கடந்த ஆண்டின் வசூல் நம்பர் 1. ‘300 கோடி ரூபாய் வருமானம்’ என வரிமானவரித்துறையே சாட்சியம் அளித்திருக்கிறது. இது அத்தனையும் சாத்தியமானது விஜய் எனும் ஒற்றைமனிதனுக்காகத்தான். தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக, உச்சநட்சத்திரமாகப் பல ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் இருக்கும் ரஜினியின் உச்சத்தை இப்போது விஜய் தொட்டுவிட்டார் என்பதே உண்மை. ‘‘இன்று சம்பளத்திலும் சரி, சினிமா வியாபாரத்திலும் சரி, ரசிகர்களின் எண்ணிக்கையிலும் சரி, முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான்’’ என்கிறார்கள் சினிமாத்துறையின் சீனியர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1995-ம் ஆண்டு ரஜினிக்கு ‘பாட்ஷா’ படம் வெளியானது. அப்போது அவரது வயது 45. வியாபார ரீதியாக ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் ‘பாட்ஷா.’ இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் சினிமா வாழ்க்கைக்குள் அரசியல் குறுக்கீடுகள் அதிகமானது. அவரும் அரசியல் பேச ஆரம்பித்தார். ரஜினி பேசுவதெல்லாமே தலைப்புச் செய்திகளாகின. அதேபோல் விஜய்யின் 45-வது வயதில் ரிலீஸான படம் ‘பிகில்.’ விஜய்யின் சம்பளத்தை, வியாபாரத்தை, ரசிகர் செல்வாக்கை உச்சத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் படம். இப்போது ஐடி ரெய்டு மீண்டும் அவரை அரசியல் ஆட்டத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

விஜய்
விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக கோலிவுட்டுக்குள் அடியெடுத்துவைத்த விஜய்க்கு யாரும் சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துவிடவில்லை. தயாரிப்பாளர்கள் யாரும் இவரை ஹீரோவாக வைத்துப் படம் எடுக்க முன்வராத நிலையில் அப்பாவே தயாரிப்பாளரானார். ‘‘இதெல்லாம் நான் நடித்த படங்கள்’’ என விஜய்யே வெளியே சொல்லிக்கொள்ள முடியாத படங்கள்தான் அவரது திரைவாழ்க்கையின் ஆரம்பம். ‘உங்கள் விஜய்’, ‘உங்கள் விஜய்’ என ரசிகர்கள் மனதில் கட்டாயப்படுத்திப் பதியவைக்க முயன்ற எஸ்.ஏ.சி-யின் முயற்சிகள் திணிப்புகளாகவே இருந்தன. ஆனால் ‘பூவே உனக்காக’ படத்தில் இயக்குநர் விக்ரமனும் ‘காதலுக்கு மரியாதை’ படம் மூலம் ஃபாசிலும் விஜய்யின் ட்ராக்கையே மாற்றினார்கள். முதல்முறையாக ‘பூவே உனக்காக’ படத்துக்குக் குடும்பங்கள் வந்தன. ‘காதலுக்கு மரியாதை’ இளைஞர் கூட்டத்தை விஜய்க்குச் சேர்த்ததோடு, மக்கள் மனதிலும் பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது. 90-களில் வெளிவந்த விஜய் பட காதல் பாடல்கள் எல்லாம் ரேடியோ வைரல்களாகின. இயக்குநர் ரமணாவின் ‘திருமலை’ அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது. ‘கில்லி’ அவரை மிகப்பெரிய கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக மாற்றியது. ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ என அதே ரூட்டில் போனவருக்கு திடீர் சரிவு. ‘அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’ என அடுத்தடுத்த படங்கள் அத்தனையும் ஃப்ளாப்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனந்த விகடனில் விஜய்க்கு கவர் ஸ்டோரி கடிதம் வெளியானது. ‘‘மற்ற நடிகர்கள் எல்லாம் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும்போது நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. ‘வேட்டைக்காரன்’ போஸ்டருக்கும் ‘சுறா’ போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தப் பிடிவாதம் கெட் அப்பில் மட்டும்தான் இருக்கும் என நினைத்தால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?’’ என்ற கேள்வியோடு முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

ரூட்டை மாற்றினார் விஜய். ‘ஃப்ரெண்ட்ஸ்’ என ஃபீல் குட் படம் இயக்கிய சித்திக்கிடம் போனார். ‘காவலன்’ ஹிட் ஆனது. அடுத்து மோகன் ராஜாவுடன் ‘வேலாயுதம்’, ஷங்கருடன் ‘நண்பன்’, ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘துப்பாக்கி’ எனத் தனக்கான பாதை எது என்பதைப் புரிந்துகொண்டார். இன்று இயக்குநர்களின் நாயகனாக மாறியிருக்கிறார். விஜய் அளவுக்கு ஃபிட்டான நடிகர்கள், டான்ஸ் ஆடக்கூடிய ஹீரோக்கள், காமெடியிலும் கலகலக்கும் நாயகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிகக் குறைவு.

தனிக்கொடி... மக்கள் மன்றம்!

2008-ல் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ‘குருவி’ படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படம் ஷூட்டிங்கில் இருந்தபோதே விஜய்க்கும்- உதயநிதி தரப்புக்கும் உரசல் ஆரம்பித்திருக்கிறது. மே மாதம் `குருவி’ வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. உரசல் இன்னும் அடுத்த கட்டத்துக்குப் போனது. 2011 தேர்தலில் களமிறங்கப்போகிறோம் என எஸ்.ஏ.சி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச, விஜய் மக்கள் மன்றத்துக்கெனத் தனிக்கொடி ரெடியானது. 2008 ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாளில் இந்தக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்.

அடுத்து இலங்கை இறுதிப்போரில் இருந்தபோது 2009 ஏப்ரலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதற்குப்பிறகு மன்றக் கொடிகளை எல்லா மாவட்டங்களிலும் ஏற்றி, உரையாற்றும் திட்டத்தில் இருந்தார் விஜய். இதனால் இன்னும் கடுப்பானது அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. இதற்கிடையே ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாகக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. முதலில் இதற்கு அனுமதியளித்த போலீஸ், கடைசி நிமிடத்தில் பின்வாங்கியது. ‘‘நீங்கள் மேடை ஏறக்கூடாது... மீறி ஏறினால் உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை” என்று சொல்ல, கூட்டம் ரத்தானது. அடுத்து இன்னும் பெரிய அதிர்ச்சி விஜய்க்குக் காத்திருந்தது. 2011 பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த ‘காவலன்’ படத்தைத் திரையிடக்கூடாதென தியேட்டர் களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு படம் வெளியாக முடியாத சூழல் உருவானது. மிரண்டுபோனார் விஜய். சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸானதும் விஜய் செம ஹேப்பி. காரணம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஹிட் படம். தி.மு.க அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஆனந்த விகடனுக்குப் பேட்டியளித்தார் விஜய். ‘‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் இப்போது என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்’’ என்றவர் ‘‘நடிகனா கணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதை விட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சிருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை’’ என அந்தப் பேட்டியை முடித்திருந்தார் விஜய்.

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதும் தன்னுடைய மக்கள் இயக்கம் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அணில்போல உதவியதாக அறிக்கை விட்டார். இந்த அறிக்கையால் விஜய்மீது கொஞ்சம் கவனம் திருப்பினார் ஜெயலலிதா. 2013 ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மிகப்பெரிய மேடை அமைத்தார்கள். அப்போது அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட நேரம். ஒருபக்கம் ‘அம்மா அழைக்கிறார்’ என ஜெயலலிதா கட் அவுட்கள், இன்னொரு பக்கம் விஜய் நிகழ்ச்சிக்கு ‘அப்பா அழைக்கிறார்’ என எஸ்.ஏ.சி-யின் கட் அவுட்கள். இதை அப்படியே படமாக எடுத்து உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு அனுப்ப, கோபத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார் ஜெயலலிதா. உடனடியாக விழா ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த ‘தலைவா’ படத்தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை அழைத்துக் கடுமையாக எச்சரிக்க, பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தி.மு.கவால் ‘காவலன்’ படத்துக்குப் பிரச்னை வந்ததுபோல ‘தலைவா’ ரிலீஸ், அ.தி.மு.கவால் பிரச்னையைச் சந்தித்தது. அப்போது கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவை விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் சந்திக்கப்போக அங்கே காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கடைசியில் கிட்டத்தட்ட விஜய் மன்னிப்பு கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட, ‘தலைவா’ ரிலீஸானது. இப்படித் தொடர்ந்து அவர் படங்கள் ரிலீஸின்போது பிரச்னைகளைச் சந்திப்பது ‘சர்கார்’ வரை தொடர்ந்தது. ‘பிகில்’ அரசியல் ரீதியாகப் பிரச்னைகளைச் சந்திக்க வில்லையென்றாலும் ஸ்பெஷல் ஷோக்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

‘மெர்சல்’ வரை இளைய தளபதி விஜய்யாக இருந்தவர், மெர்சலில் தளபதியாக மாறினார். ‘தளபதி’ என்கிற அடைமொழி அதுவரை மு.க.ஸ்டாலினுக்கே இருந்தது. ஆனால், அதைமீறி அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘சர்கார்’ படத்தில் தளபதி என மாற்றினார் விஜய்.

விஜய் எந்தக் கட்சி?

காங்கிரஸ் ஆட்சியின்போது ராகுல் காந்தியைச் சந்தித்தது பரபரப்பைக் கிளப்பினார் விஜய். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விஜய் கேட்கிறார் எனத் தகவல் பரவி, கொஞ்ச நாளில் அடங்கியது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். அடுத்தபடியாக 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மோடியைச் சந்திக்க ஒப்புக்கொண்டார் விஜய். கோவையில் மோடி - விஜய் சந்திப்பு நடந்தது. இப்படி ஆரம்பத்தில் தி.மு.க எதிர்ப்பில் தொடங்கிய அவரது அரசியல் நிலைப்பாடு அ.தி.மு.க, காங்கிரஸ் என மாறி இப்போது பா.ஜ.க-வில் வந்து நிற்கிறது.

பா.ஜ.க எதிர்ப்புக்கு ஆரம்பப்புள்ளி வைத்தவர் ஹெச்.ராஜா. ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராக விஜய் சில வசனங்கள் பேச ‘‘இவர் ஜோசப் விஜய்... இப்படித்தான் பேசுவார்’’ என விவகாரத்தை ஹெச்.ராஜா திசைமாற்ற, மக்கள் ஆதரவு முழுக்க விஜய் பக்கம் திரும்ப, பா.ஜ.க-வை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்தார் விஜய். ‘ஜோசப் விஜய்’ என்கிற லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டது, தொடர்ந்து இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேச்சைக் கலப்பது, படங்களிலும் தன்னுடைய கிறிஸ்துவ அடையாளத்தை வெளிப்படையாகவே முன்வைப்பது என முன்பைப்போல் அமைதியாக இல்லாமல் எதிர்வினைகள் நிகழ்த்துகிறார். இந்நிலையில்தான் ஐடி ரெய்டு பஞ்சாயத்து.

ரெய்டின் பின்னணி என்ன?

இப்போது விஜய்யை முன்வைத்து வரிமானவரித்துறை நடத்திய ரெய்டை முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஜஸ்ட் லைட் தட் சொல்லிவிட்டு நகர்ந்து விட முடியாது. விஜய் தரப்பிலும் தவறுகள் இருப்பதாகவே சொல்கிறார்கள். ‘புலி’ படத்தின் போதே விஜய்யின் வருமான வரிக்கணக்குகள் சரியாக இல்லை என்று ரெய்டுகள் நடத்தப்பட்டன. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அப்போது விஜய்யின் பர்சனல் மேலாளராக இருந்த பி.டி.செல்வக்குமார். வருமானவரித்துறை விசாரணையின்போது விஜய்யைக் கைகாட்டிவிட்டார் என்கிற காரணத்தால் அவர் அப்படியே கழற்றி விடப்பட்டார். அதே போலத்தான் இப்போது ‘பிகில்’ பிரச்னையிலும் சில தவறுகள் நடந்தி ருக்கின்றன என்கிறார்கள்.

‘‘பிரபல பில்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அதை அன்புச்செழியன் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் அதன் மூலம்தான் விஜய் சம்பளம் உட்பட ‘பிகில்’ படச் செலவுகளைச் சமாளித்திருக்கிறது. அதன்பின் விஜய் சென்னையில் சில பிரதான முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறார். அதற்கான செலவை ரொக்கமாகக் கொடுத்திருக்கிறார். அந்தக் கணக்கு சரியாக இல்லை என்பதில்தான் சோதனை வலுவானது’’ என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

ஆரம்பத்தில் விஜய்க்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கப்போகின்றன என்கிற எதிர்பார்ப்பில்தான் விஜய்யைக் கட்டாயப்படுத்தி நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சென்னைக்கு அழைத்துவந்திருக்கிறது வருமானவரித்துறை. மேலிடத்துக்கும், விஜய் சிக்கப்போகிறார் எனத் தகவல் கொடுத்திருக்கி றார்கள். ஆனால் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லையென்றதும் அப்செட் ஆகியிருக்கிறது ஐடி. இருந்தாலும், தாங்கள் கைப்பற்றியிருக்கும் ஆதாரங்களால் விஜய்க்கு சிக்கல்கள் தொடரும் என்கிறார்கள். அதேசமயம் நாமே அவரை இன்னும் அதிக உயரத்துக்கு வளர்த்துவிட்டுவிடக் கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன.

இளைய தளபதி, தளபதியானதுபோல் அடுத்து அரசியல் தலைவர் ஆவாரா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

சில லட்சங்களில் ஆரம்பித்த விஜய்யின் சம்பளம் இப்போது 50 கோடி ரூபாய் என்கிறார்கள். அஜித் கடைசியாக நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சில படங்களுக்கு முன்புவரை 15 கோடி ரூபாய் சம்பளம் ப்ளஸ் தெலுங்கு உரிமை என்பதுதான் சூர்யாவின் சம்பளமாக இருந்தது. ‘அசுரன்’ வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தனது சம்பளத்தைத் தற்போது 10 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.மக்கள் ஆதரவு, எப்போதும் லைம்லைட்டில் இருப்பது - இவைதான் நம்பர் 1 நடிகரைத் தீர்மானிக்கும் விஷயங்கள். தற்போதைய சூழலில் நம்பர் 1 நடிகர் என்று யாரை நினைக்கிறீர்கள்?” என்று நாம் ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் கேட்ட கேள்விக்கு அஜீத்துக்கே ஆதரவு அதிகம். ஆனால் அஜீத் பொது இடங்களில் வருவதை முற்றிலும் தவிர்த்த நிலையில் அரசியல் சர்ச்சை, ஆடியோ ரிலீஸ் பேச்சு என எப்போதும் தொடர்ந்து பேசப்படுபவராகவே இருக்கிறார் விஜய்.

ஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர், தொடர்ந்து ‘சச்சின்’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ என விஜய்யின் ஹிட் படங்களைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுவிடம் பேசினேன். ‘‘எஸ்.ஏ.சி அவர்கள் தம்பி விஜய்க்கு ஒரு படம் பண்ணணும்னு சொன்னார். அப்போது ஆரம்பித்ததுதான் ‘சச்சின்.’ மிகப்பெரிய வெற்றிப்படமான ‘சந்திரமுகி’யுடன் வெளியானது. ‘சச்சின்’ படமும் 200 நாள்கள் ஓடி, அதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூலைக் கொடுத்த படமாக மாறியது.

எஸ்.தாணு
எஸ்.தாணு

இதற்கு அடுத்து ஒருநாள் தம்பி விஜய் என்னை போனில் அழைத்தார். ‘முருகதாஸ் வந்து கதை சொல்வார் சார். நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ எனச் சொன்னார். அந்தப் படம்தான் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் ‘துப்பாக்கி.’ விஜய்யிடம் ஒரு பழக்கம் உண்டு. போட்ட பட்ஜெட்டைவிடப் படத்துக்கான தயாரிப்புச் செலவுகள் அதிகம் போனால் அதற்கான தொகையை நான் தருகிறேன் எனத் தானே முன்வருவார். ஒரு படத்தின்போது ஒரு பெரும்தொகையை அவர் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனால், ‘படத்தின் தயாரிப்பாளர் நான்தான். நீங்கள் பணம் கொடுப்பது சரியாக இருக்காது’ என அதை வாங்கமறுத்துவிட்டு, படத்தை முடித்தோம். அப்படி தயாரிப்பாளர்களுக்கு எந்தவகையிலும் தொல்லை தந்துவிடக்கூடாது, நஷ்டம் ஏற்படுத்திவிடக்கூடாது என நினைப்பவர் விஜய். 7 வயது முதல் 70 வயதுவரையிலான ரசிகர்கள் எப்படி ரஜினிக்கு இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்க்கும் இருக்கிறார்கள். ரஜினி சார் எப்படி வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டாரோ, அதேபோல் விஜய் தம்பியும் தலைக்கு ஏற்றிக்கொள்வதில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்குப் போனதும் அந்த இடத்துக்கு ரஜினி சார் வந்தார். இப்போது ரஜினி சார் அரசியலுக்குப்போகிறார். அந்த இடத்துக்கு தம்பி விஜய் வந்துவிடுவார்’’ என்றார் தாணு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism