Published:Updated:

`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 2

பார்த்திபன்

பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் இரண்டாம் பாகம்!

`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 2

பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் இரண்டாம் பாகம்!

Published:Updated:
பார்த்திபன்

`பொன்மகள் வந்தாள்' படத்தில் உங்கள் கதாபாத்திரம் அருமை. டயலாக் டெலிவரி செமையா பண்ணிருப்பீங்க... வக்கீல் கதாபாத்திரத்திற்கு யாரையாவது மனதில் நினைத்தீர்களா? - ஆதிரா, சென்னை

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

``எனக்கு இன்ஸ்பிரேஷனா யாரும் இல்லை. சினிமா மாதிரி கோர்ட்ல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்காது. கோர்ட்ல கவுன்ட்டர் டயலாக்லாம் பேசமாட்டாங்க. வக்கீல் நண்பர்கள் அடிக்கடி உன் வாய்க்கு நீ வக்கீலாகிடணும்னு சொல்லுவாங்க. அப்ப இவ்ளோ சுவாரஸ்யமான விஷயங்கள் கோர்ட்ல இருக்கான்னு கேப்பேன். 1988ல ஒரு கேஸ். என்னோட `புதிய பாதை' படம் அப்போ ரிலீஸ் ஆகல. பாண்டி பஸார்லயிருந்து கம்பெனி கார்ல நான் போயிட்டிருக்கேன். பின்சீட்ல நான் உட்கார்ந்திருக்கேன். தேனாம்பேட்டையை நோக்கி கார் போயிட்டிருக்கு. விடியற்காலை 6 மணி இருக்கும். 12பி பஸ்ன்னு நினைக்கிறேன். எதிர்ல வருது. பராக்கு பாத்துட்டே என் கையை உள்ள எடுத்து என் உதவியாளர்கிட்ட பேடை வாங்கி எழுதுறேன். அவ்ளோதான் எனக்கு நினைவு இருக்கு. கட் பண்ணா நான் விஜயா ஆஸ்பிட்டல்ல இருக்கேன். எதிர்ல வந்த பஸ் இடிச்சி விபத்து. அந்த விபத்தின் காயங்கள் இன்னும் இருக்கு. அதனால ஷூட்டிங் ரெண்டு, மூணு மாசம் நின்னுப்போச்சு. இதுக்காக பல்லவன் பஸ் மேல கேஸ் போடணும்னு முடிவு பண்ணி போட்டேன். அப்ப எனக்காக ஆஜரான வக்கீல் `இந்த கேஸ்ல நீங்க ஜெயிக்கணும்னா, பஸ் நம்பரை சொல்லணும்'னு ஒரு பஸ் நம்பர் சொன்னார்.

`அது எப்படி சார் நான் சொல்லமுடியும். 12பி பஸ்னு தெரியுமேத்தவிர பஸ்ஸோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்லாம் தெரியாது. அப்படி நான் அந்த நம்பர்லாம் சொன்னேன்னா கோர்ட்ல சிரிப்பாங்க'ன்னு சொன்னேன். `சொல்லலைன்னா கேஸ்ல ஜெயிக்க முடியாது. கோர்ட்டுக்கு பொய், உண்மைன்னுலாம் எதுவும் இல்லை. சாட்சி வேணும். அவ்ளோதான்'னு சொன்னார். கோர்ட்டுக்குப்போனேன். நீதிபதி முன்னாடி, `ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு 12பி பஸ் எதிர்ல பார்த்தேன். அவ்ளோதான் எனக்குத் தெரியும் யுவர் ஹானர்'னு சொல்லிட்டுப் போய் உட்கார்ந்துட்டேன். அப்ப பல்லவன் தரப்பு அரசு வக்கீல் `இவங்க காருக்கு முன்னாடி குறுக்க சைக்கிள்ல ஒரு பெரியவர் போயிருக்கார். அந்தப் பெரியவர் மேல மோதிடக்கூடாதுன்னு பஸ் டிரைவர் திருப்பும்போது இவங்க கார்ல மோதிட்டாங்க'ன்னு சொன்னார். அவங்க கேஸ்ல ஜெயிச்சிட்டாங்க. அந்த வக்கீலோட கற்பனைதிறமையை அப்படியே வியந்து பார்த்தேன். எனக்கு சத்யராஜ் சாரும், நானும் சேர்ந்து ஒரு கோர்ட் படம் நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணும். `பொன்மகள் வந்தாள்' அப்போ யோசிட்டே இருந்தேன். ஸ்கிரிப்ட் பிரில்லியன்டடா இருக்கும். அதேபோல `சட்டப்படி காதலிக்கிறேன்'னு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிவெச்சிருக்கேன். ஒரு அட்வகேட்டோட லவ் கதை.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அழகி', `ஆயிரத்தில் ஒருவன்' , `மாவீரன் கிட்டு' போன்ற படங்களில் சீரியஸான ரோல்களிலும் சிறப்பாக நடிக்கிறீர்கள். உங்களுக்கு சீரியஸாக நடிக்கப் பிடித்துள்ளதா அல்லது ஜாலியாக நடிக்கப் பிடித்துள்ளதா? பதில் சீரியஸாகவும் இருக்கலாம், ஜாலியாகவும் இருக்கலாம்! - ஜீவகன் மகேந்திரன், ப.நாட்டாமங்கலம்

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

``உங்கள் கேள்வியைப்போலவே நான் ஏற்கின்ற பாத்திரங்கள் சீரியஸாவும் இருக்கலாம், காமெடியாவும் இருக்கலாம் என்பதை மீறி அந்தக் கதாபாத்திரத்துக்குள்ள ஒரு நாயகத்தன்மை இருக்கணும்னு பார்ப்பேன். நான் முதன்முதல்ல நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சத்தில் இருந்தே, எப்பவுமே ஒரு நல்லது செய்ற பாத்திரமாவே நான் பண்ணணும்னு விருப்பப்படுவேன். ஆயிரம் தப்பு செஞ்சாலும் முடிவுல அவன் திருந்திடுவான். உதாரணத்துக்கு `பொன்மகள் வந்தாள்'ல மிஸஸ் ஜோதிகா ஒரு நல்ல விஷயத்துக்காக, அவங்க வலியை ஒரு கேஸா எடுத்துட்டு வந்து வாதாடுவாங்க. அப்ப குறுக்கவந்து ஒருத்தன் கெடுக்குறான்னு என் கேரக்டர் மேல மக்களுக்கு கோபம் வரும். இது மட்டுமே என்னுடைய பாத்திரமா சொல்லியிருந்தாங்கன்னா நிச்சயமா நான் நடிச்சிருக்கமாட்டேன். அந்தப் பாத்திரம் மாறி மாறி கடைசில அந்தப்பெண்ணோட வலி புரிஞ்சி, எப்பவுமே பேசி ஜெயிக்கிற ஒருத்தன், ஒருமுறை பேசாம விட்டுட்டான்னா அந்தப்பொண்ணு ஜெயிக்கும். அந்த நீதி ஜெயிக்கும். அதனால்தான் நான் அந்த கேரக்டர் பண்ணேன்.

அப்படித்தான் என்னுடைய பாத்திரங்கள்ல ஒரு பாசிட்டிவிட்டி வரணும்னு நினைப்பேன். காரணம், ஒரிஜினலாவே நாம பாசிட்டிவா திங்க் பண்ணணும், ஏதோ ஒருவகையில ஒரிஜினலா இருக்கணும்னு நினைப்பேன். `ஒத்த செருப்பு' படம் பார்த்தீங்கன்னா பத்து விஜய், பத்து அஜித் சேர்ந்து நடிச்சாங்கன்னா என்ன ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டர் வருமோ அந்த சூப்பர் ஹீரோ கேரக்டர்தான் அது. ஆனா, அது வெளில தெரியவே தெரியாது. ஒரு பழைய சட்டை, அதுல கொஞ்சம் கிழிஞ்சிப்போயிருக்கும். தலை முடிவாரமாட்டான். ஆனா, கமிஷனர் ஆபிஸுக்கு உள்ளே போய், நாலு கொலைப்பண்ண ஒருத்தன் தைரியமா, ஒரு அஞ்சாவது கொலையைப் பத்தி ஒரு விஷயத்தை சொல்லிட்டு, அவங்களையே மிரண்டுபோக வெச்சிட்டு, தான் உயிரா நினைக்கிற குழந்தையை தூக்கிட்டு காத்தாடியோட கிளம்பிப் போவான். யாராவது நாலு கொலையைப்பண்ணிட்டு கமிஷனர் ஆபிஸ்ல இருந்து ரைட் ராயலா வெளிலப்போகமுடியுமா? அப்ப அது எவ்ளோ பெரிய ஹீரோஸியம்! ஆனா, அது ஹீரோயிஸம்னு தெரியாத அளவுக்கு நான் பண்ணியிருப்பேன். அப்படித்தான் நான் செலக்ட் பண்ற பாத்திரங்கள் இருக்கும்.''

Have you ever felt guilty of treating women as substance in your previous cinemas? - Sudha, Gudiyatham

பார்த்திபன்
பார்த்திபன்

``நிறைய தவறுகள் தெரியாம நடக்குறதுதான். `புதிய பாதை'ல ஒரு பெண் ஒருத்தனை குப்பைல போட்டுட்டுபோயிடுறா. அதனால அவன் மிருகமா மாறிடுறான். மறுபடியும் அவன் வாழ்க்கைல ஒரு பெண் வந்து அவனுக்குக் கிடைக்காத அன்பைக் கொடுக்குறா, அவனை மனிதனா மாத்துறான்னுதான் நான் யோசிச்சேன். அப்ப `புதிய பாதை' ஒரு பிற்போக்குத்தனமானப் படமா நான் நினைக்கல. படம் வந்தப்பிறகு நிறைய விமர்சனங்கள் வந்தன. அதுல கெடுக்கப்பட்டவனோடதான் வாழணும்னு என்ன கட்டாயம்னு கேள்விகள் வந்தன. எனக்குப் படம் பண்ணும்போதே இது தோணுச்சு. அதனாலதான் ஒரு சீன்ல மனோரமா ஆச்சி `அம்மா நீ சொல்றதைப் பார்த்த ஒரு கெட்டுப்போன பொண்னு கெடுத்தவனோடயேதான் வாழணுமா'ன்னு கேட்பாங்க.

அதுக்கு `அப்படியில்லை ஆச்சி. எனக்கு இதுதான் சரின்னு தோணுது'ன்னு அந்தப் பெண் கேரக்டர் சொல்லுவாங்க. அப்படின்னாலும் இப்ப சப்பக்கட்டு கட்டலாம். ஆனா, புதிய பாதை-2 நான் ஸ்கிரிப்ட் பண்ணிவெச்சிட்டேன். இப்ப எப்படி கதையிருக்கும்னா மறுநாளே அந்தப்பொண்ணு துப்பாக்கியை எடுத்துட்டுப்போய் அவனை சுட்டுட்டு வருவா. அப்படித்தான் நான் படத்தை ஆரம்பிக்கிறேன். அந்த குற்றவுணர்ச்சி இப்படித்தான் இந்தப்படத்துல நான் சரி பண்ணணும். அதேமாதிரி `ஹவுஸ்ஃபுல்' படத்துல ஒரு டயலாக் வரும். அதைப்பார்த்துட்டு சிவசங்கரி மேடம், `என்ன பார்த்திபன் இது... ஒரு பெண் கணவனை இழந்துட்டா கலர் கலர் ஜாக்கெட் போடக்கூடாதா... நீங்களே எப்படி இப்படி டயலாக் வெக்கிறீங்க?'ன்னு கேட்டாங்க. அப்பதான் எனக்குப் புரிஞ்சது. இப்படி என்னை அறியாமலும், புரியாமலும் நிறைய செய்ததுண்டு. இனி வரப் படங்கள் அப்படியிருக்காது.''

சோழ மகாராஜாவே... பொன்னியின் செல்வன் நாவல் படித்தது உண்டா? ஆம் எனில் அதில் தங்களுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் எது? என் விருப்பம் பெரியபழுவேட்டரையர்.

பா.ராம்பிரகாஷ், கோவை

`` `பொன்னியின் செல்வன்' நாவல் படித்துண்டு. அதில் வர எல்லாப் பாத்திரங்களும் சிறப்பா இருக்கும். உங்களுடைய விருப்பத்துக்கு நன்றி. உங்க விருப்பத்தைவிடவும், என்னுடைய விருப்பத்தைவிடவும் இயக்குநர் மணிரத்னம் என்ன விரும்புகிறார், என்ன பாத்திரத்தில் என்னைப் பார்க்க விரும்புகிறார்ங்கிறதுதான் முக்கியம். முதல்ல எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தார். அதுக்காக என்னை நீச்சல் பயிற்சி எடுக்கச்சொன்னார். அதுக்கு ஆயத்தமானேன். ஆனால், சில பல காரணங்களால் அதைப் பண்ணமுடியல. அப்புறம் வேற ஒரு கதாபாத்திரம் வந்தது. அதுவும் ஏதோ சில காரணங்களால் பண்ணமுடியல. இப்ப மூன்றாவதா ஒரு பாத்திரத்தில் வந்து இறங்கியிருக்கேன். இந்த லாக்டெளன் முடிஞ்சதும் அந்தப்படத்தோட படப்பிடிப்பு தொடங்கும். அந்த சுவாரஸ்யம் அப்படியே இருக்கட்டுமே. அந்த கேரக்டரை நான் சொல்றதைவிட இயக்குநர் சொல்றதுதான் அழகா இருக்கும்னு நினைக்கிறேன்.''

கவுன்ட்டர், பகடி, கேள்விக்குக்கேள்வி, பதிலுக்கு பதில், தொண தொண இல்லாத ரத்தின சுருக்க பார்த்திபன் எப்படி இருப்பார்?

- பி.கார்த்திக், குன்னூர்

பார்த்திபன்
பார்த்திபன்

``மணிரத்னம் சார் மாதிரி எல்லோரும் பேசினா நல்லாயிருக்குமான்னு தெரியல. ஆனா, எனக்கு மணிரத்னம் சார் மாதிரி பேசணும்னு ஆசை. நான் ஒரிஜினலா அப்படித்தான். ரொம்ப அமைதி. நேர்ல வந்து பார்க்குற நண்பர்கள், `சினிமால நீங்க வேற மாதிரி இருக்கீங்க. நேர்ல ரொம்ப டீப்பா திங்க் பண்றவரா இருக்கீங்களே'ன்னு சொல்லுவாங்க. நான் இன்னும் ரொம்ப அமைதியை நோக்கி நகரணும்னு ஆசைப்பட்டுட்டிருக்கேன். `பார்த்திபன்னா கலகலன்னு பேசணும் சார். ஹவுஸ்ஃபுல் படத்துல நீங்க பேசவே மாட்டீங்க'ன்னு ஒருத்தர் சொன்னார். சிலர் இதுதான் என்னுடைய இயல்புன்னு என்னை விரும்ப ஆரம்பிச்சிடுறாங்க. அதனால நான் அப்படிப்பேசினாத்தான் நிறைய பேருக்கு சந்தோஷமா இருக்கு. நானும் ஒரு அமைதிக்கடல்ல, ஒரு ஆனந்தப் பயணம் போக முயற்சிப் பண்றேன்.''

Sir, i am a big fan of your versatility in cinema. My query is did you get a chance to do a thalapathy Vijay movie in past or is there a chance to do with him in future. If you do so what will be the chronicle of it?

- Jagadeesh sudhan, Madurai

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

"3 இடியட்ஸ் தமிழாக்கம் பண்ண வரும்போது முதல்ல என்னைத்தான் மிஸ்டர் விஜய் டைரக்ட் பண்ண ரெகமண்ட் பண்ணார். ஜெமினி பிக்சர்ஸ்ல இருந்து வந்து `விஜய் சார் உங்களைதான் சொன்னார்'னு சொன்னாங்க. சம்பளம் உட்பட எல்லாமே பேசப்பட்டது. ஆனா, அப்ப நான் `ஒரு ரீமேக் படம் எதற்காக நான் டைரக்ட் பண்ணணும், மிஸ்டர் விஜய்யோட ஒரு படம் பண்ன வாய்ப்புக்கிடைச்சதுன்னா ஃப்ரெஷ்ஷான ஒரு கதையாவே பண்ணலாமே'ன்னு நினைச்சேன். ஏன்னா, 3 இடியட்ஸை உலகமே பார்த்துட்டாங்க. ரீமேக் பத்தி எனக்கு குழப்பங்கள் இருந்தது. அவங்ககிட்ட நிறைய கேள்விகள் கேட்டேன். அதுக்கு அப்புறம் அது திசை மாறி நண்பனா மாறிச்சு. என்னுடைய நண்பர் ஷங்கர் இயக்கத்துல.

ஷங்கர் அந்தப்படத்தை அவ்ளோ கலர்ஃபுல்லா பண்ணியிருந்தார். போஸ்டர்ஸ்லாம் பார்த்தவுடனே சத்யமா நம்மளால் இவ்ளோ கலர்ஃபுல்லா பண்ணியிருக்கமுடியாதுன்னு நினைச்சேன். நான் அந்த உணர்வுகளுக்குள்ள மட்டுமே போகணும்னு நினைச்சேன். எஸ்ஏசி சார் எப்பவுமே `நீங்களும் தம்பி விஜய்யும் சேர்ந்து ஒருபடம் பண்ணா ஒரு மேஜிக் நடக்கும். எப்படி பிரபுதேவாவும் விஜய்யும் சேர்ந்தா அது எப்படி போக்கிரித்தனமான ஒரு கமர்ஷியல் சினிமாவா மாறுச்சோ, அப்படி நீங்க சேர்ந்தா நல்லாயிருக்கும்'னு ஆர்வத்தோட இருக்கேன்னு சொல்லுவார். ஒருநாள் விஜய்க்கு நான் கதை சொன்னேன். கதை சொல்லி முடிச்சதும் உலகமே வியக்குற நடிகர், ஒரு ட்ரேல அவரே டீ, சர்க்கரை, ஸ்பூன்லாம் போட்டு எடுத்துட்டுவந்து, `சங்கீதா உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்ளோ சர்க்கரை போட்டுக்கச் சொன்னாங்க'ன்னு சொன்னார். அப்ப நான் `நல்லவேளை... ஒரு ஸ்டவ்வையும் இதுலயே வெச்சு, உங்களையே டீ போட்டுக்கச் சொன்னாங்கன்னு சொல்லாம விட்டாங்களே. அதுவரைக்கும் ஓகே'ன்னு சொன்னதும் வெடிச்சி குழந்தைமாதிரி சிரிச்சிட்டார்.

நாங்க ரெண்டு பேரும் இணையுறப்படம் சிறப்பான படமா, கமர்ஷியல் படமா இருக்கும்னு நினைக்கிறேன். அவரை வெச்சு `ஒத்த செருப்பு' மாதிரியான படங்கள் பண்ணக்கூடாதுன்னு எனக்கே தெரியும். அவருக்கான கமர்ஷியல் படத்தை வேற ஒரு பர்சப்ஷன்ல, வேற ஒரு ஆங்கிள்ல, வேற ஒரு ட்ரீட்மென்ட்ல பண்ணணும்னு ஆசை இருக்கு. மிஸ்டர் விஜய் சைடுல இருந்து நிச்சயம் அழைப்பு வரும்னு நினைக்கிறேன். `ஹவுஸ்ஃபுல்', `ஒத்த செருப்பு' மாதிரியான படங்களை மிஸ்டர் விஜய் பார்க்கும்போது இவர் ஸ்க்ரீன் ப்ளேலாம் நல்லாதானே பண்றார்னு நினைக்கிறாரா, இல்லைன்னா ரொம்ப ரிஸ்க்கியா, எக்ஸ்பரிமென்ட்டா இருக்காரே... கமர்ஷியல் படம்லாம் பண்ணுவாரான்னு நினைக்கிறாரான்னு எனக்குத் தெரியல. விஜய்க்கு மூணு, நாளு ஸ்கிரிப்ட் சொல்லி அவருக்கு எது பிடிச்சிருக்கோ, அதை இன்னும் பெட்டரா பண்ணமுடியும்னு நினைக்கிறேன். ஒரு ராணுவ வீரன் எப்பவுமே ஷூ பாலீஷ்லாம் போட்டு, பெல்ட் பிராஸோலாம் போட்டு ரெடியா இருக்கணும். ஆனா, போர் எப்பயோ ஒருமுறைதான் வரும். அந்த மாதிரி நானும் பாலிஷ்லாம் போட்டு ரெடியா இருக்கேன். போர் வரும்போது நிச்சயமா சந்திப்போம்.''

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.