Published:Updated:

“துளிகூட நல்லவன் இல்லை!”

விஜய்சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்சேதுபதி

- விஜய்சேதுபதி சொல்லும் ‘மாஸ்டர்’ ரகசியம்

சாகச நாயகன், சரிநிகர் வில்லன், சவாலான திருநங்கை பாத்திரம் என்று எல்லாவற்றிலும் தனிமுத்திரை பதிப்பவர் விஜய்சேதுபதி. திரைப்படம், குறும்படம், வெப்சீரிஸ் என்று பல களங்களிலும் கால் பதிப்பவர். மாதத்தின் எல்லா நாள்களிலும் படப்பிடிப்புப் பரபரப்புடன் இருந்தவரை லாக்டெளன் வீட்டுக்குள்ளேயே முடக்கியிருக்கிறது.

‘`லாக்டெளன் கொடுமையா போயிட்டிருக்கு. எப்போ வேலைக்குப் போவேன்னு இருக்கு. உடம்பைப் பாதுகாக்குறதா இல்ல, மனசைப் பாதுகாக்குறதான்னு தெரியல. உடம்பைப் பாதுகாக்கலாம்னு பார்த்தா மனசு ரொம்ப உடைஞ்சுபோகுது. எனக்கே இந்த நிலைமைனா எளிய மக்களோட நிலைமை ரொம்ப மோசம். நான் மிடில் க்ளாஸ் வாழ்க்கையில இருந்தப்போ மாசக் கடைசில குடும்பம் நடத்துறது கஷ்டமா இருக்கும். இப்போ, மாச வருமானம்னு ஒண்ணே இல்லாம இருக்குறப்போ எப்படியிருக்கும்? இதைப் பெரிய பேரிடரா, பெரும் துயரமா பார்க்குறேன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“லாக்டெளன் எப்ப முடியும், மாஸ்டர் எப்ப ரிலீஸாகும்ன்ற கேள்விதான் ரசிகர்கள்கிட்ட இருக்கு... ‘விஜய்க்கு வில்லன் நீங்க’ன்னு லோகேஷ் வந்து கதையைச் சொல்லும்போது என்ன நினைச்சீங்க?’’

விஜய்யுடன்
விஜய்யுடன்

“முதல்ல லோகேஷ் என்கிட்ட சொல்லல. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்துல சதீஷ்னு ஒருத்தர் நடிச்சிருப்பார். அவர்தான் ‘லோகேஷ் கனகராஜ் படத்துல வில்லன் கேரக்டர் இருக்கு. நீ பண்ணுனா நல்லாருக்கும். ஆனா, உன்கிட்ட கேட்கத் தயங்குறார்’னு சொன்னார். உடனே லோகேஷுக்கு போன் அடிச்சிட்டேன். அவர் ஆபீஸுக்கு வந்தார். படத்தோட லைன்தான் கேட்டேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘எந்த இடத்துலயும் துளிகூட நல்லவன் கிடையாதுண்ணே’னார். ‘இதைத்தான் நானும் எதிர்பார்க்குறேன்’னு சொல்லிட்டு உடனே கமிட்டாகிட்டேன். ஷூட்டிங் ஷிமோகால நடந்தது. அங்க போனப்போதான் முழுக் கதையையும் கேட்டேன். கொடூரமான வில்லனா நடிக்க வாய்ப்பு கிடைக்குறது பாக்கியம்னு நினைக்குறேன். ‘விஜய் எப்படியிருப்பாரோ’ன்னு நினைச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். ரொம்ப கம்ஃபர்ட்டபுள், ரொம்ப ஸ்வீட். ஆடியோ ரிலீஸ்ல கொடுத்த முத்தம் இதைச் சொல்லும்னு நினைக்குறேன். `மாஸ்டர்’ பிரமாண்டமா வந்திருக்கு, நல்லாருக்குன்னு சொன்னாங்க. விஜய் சாருக்கும் பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன். மக்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன். டிரெய்லர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`லாக்டெளனுக்கு முன்னாடி ‘துக்ளக் தர்பார்’ல நடிச்சிட்டிருந்தீங்களே... படம் எப்படி வந்திருக்கு?’’

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

“ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்துல காஸ்ட்டிங் டைரக்டர் டெல்லி பிரசாத் தான் இயக்குநர். ஒருத்தனுக்குள்ள இருக்குற ரெண்டு கேரக்டர்னு சொல்லலாம். ஒரு ஃபிராடைப் பத்தின கதை. பார்த்திபன் சார் வில்லனா நடிச்சிருக்கார். மனோஜ் பரமஹம்சா சார்கூட வேலை பார்த்தது நல்லாயிருந்தது. ரொம்ப சுவாராஸ்யமா படம் வந்திருக்கு. இந்தப் படத்துக்குக் கொடுக்க வேண்டிய டேட்ஸை ‘மாஸ்டர்’ படத்துக்குக் கொடுத்தததால்தான் படம் லேட் ஆகிடுச்சு.’’

‘`படத்துல நீங்கதான் அந்த ஃப்ராடா?’’

“அரசியல்வாதியா நடிச்சிருக்கேன். படத்துல என் பேர் சிங்கம். அரசியலுக்குள்ள நுழைஞ்சி, அதைக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு மேல வர முயற்சி பண்ணுற ஒரு ஆள். துரோகியா இருக்குற ஒருத்தன் எப்படி நல்லவனா மாறுறான்னு கதைல சொல்லியிருக்கோம். நாம எல்லாருமே ரெண்டு விதமான வாழ்க்கையை வாழ்றோம். ரெண்டுக்குமே ரெண்டு விதமான குணங்களும் நல்லாவே தெரியும். இருந்தாலும் பக்கத்துல அண்ட விடாம பார்த்துக்கிட்டே இருக்கும். நல்ல விஷயம் எதுவும் தன்னைத் தொடாம சிங்கம் பார்த்துக்கிட்டே இருப்பான். ஒரு கட்டத்துல நல்லது அவனைத் தொட்டுடும். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா நல்லது இவன் மேல பரவ ஆரம்பிக்கும். அதுக்குப்பிறகு இவன் வாழ்க்கையில என்ன நடக்குதுங்குறதுதான் கதை. மஞ்சிமா மோகன் என் தங்கச்சியா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் அதிதிராவ் போர்ஷனை இன்னும் ஷூட் பண்ணல.’’

‘`அரசியல் படம்னா, சமீபத்திய அரசியல் சர்ச்சைகளும் படத்துல இருக்குமா?’’

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

“பொதுவான அரசியல் கதை. இப்போ நடந்துக்கிட்டு இருக்குற எதுவும் படத்துல இல்ல. முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.’’

‘`இது ஓ.டி.டி காலம். உங்களுடைய படங்கள் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு வருமா?’’

``இது தயாரிப்பாளர் எடுக்க வேண்டிய முடிவு. முதலீடு பண்ணுனவங்கதான் முடிவு பண்ணனும். நானும் மூணு படம் தயாரிச்சிருக்கேன். வட்டி கட்டுற வேதனை எனக்குத் தெரியும். ‘ஆனா, ஓ.டி.டி இன்னொரு வழிதானே தவிர தீர்வாக முடியாது. தியேட்டர்ஸ் திரும்பவும் திறக்கப்படணும். மக்கள் சக்திமேல பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கு. இயல்பு வாழ்க்கைக்கு எல்லோரும் திரும்பணும். அந்த இயல்பு வாழ்க்கைல சினிமாவும் முக்கியமான இடத்துல இருக்கும்னு நம்புறேன்.’’

‘`கமல்ஹாசனுடன் நடிக்கப்போறீங்கன்னு ஒரு பேச்சிருக்கே?’’

பார்த்திபனுடன்...
பார்த்திபனுடன்...

``இப்போதைக்கு அப்படி எதுவும் இல்ல. ‘இந்தியன் - 2’ படத்துல நடிக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னையால நடிக்க முடியல. ஆனா, அவர்கூட சேர்ந்து நடிக்க விருப்பப்படுறேன். அவரோட ஒரு காட்சியிலாவது நடிக்கணும்னு ஆசைப்படுறேன். நடந்துடும்னு நம்புறேன்.’’

‘`முக்கியமான இயக்குநர்களெல்லாம் வெப்சீரிஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க... வெப்சீரிஸ்ல நடிக்கிற ஆர்வம் இருக்கா?’’

“ஆமா, ரெண்டு வெப்சீரிஸ்ல நடிக்கப்போறேன். ஓ.டி,டி இருக்குறதனால உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். எங்கேயோ எடுத்துட்டிருக்கிற வெப்சீரிஸை இங்கே வாட்ஸப் ஸ்டேட்டஸ்ல வைக்குறாங்க. இதோட ரீச் பெரிய அளவுல இருக்கு. நம்முடைய கலைஞர்களும் கலையும் உலகம் முழுக்க ரசிக்கப்பட்டா நல்ல விஷயம்தானே.’’

‘`குறும்படங்களில் நடிச்சு சினிமாவுக்குள்ள வந்தவர். இப்ப மீண்டும் குறும்படங்களில் நடிக்கப்போறார்னு சொல்றாங்களே?’’

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

`` ‘டேவிட்’, ‘சோலோ’ படங்களை எடுத்த பிஜாய் நம்பியார் எடுக்கப்போற குறும்படத்துல நடிக்கப்போறேன். கதை கேட்டேன். ரொம்ப நல்லாருந்தது. லாக்டெளன் முடிஞ்சு அனுமதி கொடுத்தா ஷூட் பண்ணலாம்னு இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இங்க, சின்னது பெருசுன்னு எதுவுமே இல்ல. இங்கே, தொழில்தான் பெருசு. என்னை மாதிரியான ஆளுங்க வந்து போயிட்டுதான் இருப்பாங்க. சினிமா என்னைக்கும் இருக்கும். ‘தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?’ன்னு பாரதியார் சொன்ன மாதிரிதான். இது வெறும் நெருப்புக்கு மட்டுமல்ல, தொழிலுக்கும் பொருந்தும். அப்புறம் நவம்பர் மாசத்துலயே நானும், என் பொண்ணும், ரெஜினாவும் சேர்ந்து ஒரு குறும்படத்துல நடிச்சிட்டோம். ஆனா, அது ஒரு மணிநேரப் படமா மாறிடுச்சு.’’

‘`உங்களுடைய கனவுப்படம் ‘லாபம்.’ லாக்டெளன் இல்லைன்னா ஷூட்டிங் முடிஞ்சு ரிலீஸாகியிருக்கும்ல?’’

“ஆமா. இருபது நாள்தான் ஷூட் பாக்கியிருந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிஞ்சிருக்கும். ஜனா சார்கூட வேலை பார்க்குறது சிலேட், குச்சிலாம் எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்குப் போற மாதிரி. தினமும் ஏதாவது கத்துக்கலாம். அவ்வளவு நேர்மையா இருப்பார். சிந்திக்கக் கத்துக் கொடுப்பார். தனக்குத் தெரியாத மனுஷனைக்கூடத் தவறான பாதையில வழி நடத்த மாட்டார். ‘லாபம்’ ரொம்ப நல்ல படமா இருக்கும்.  கம்யூனிசம் பற்றித் தெரிஞ்சிக்க புத்தகம் கேட்டேன். கொடுத்திருக்கார். இனிதான் படிக்கணும்.’’

‘` `மாஸ்டர்’ இசைவெளியீட்டு விழால நீங்க கடவுள் பத்திப் பேசின பேச்சு சர்ச்சையாச்சு. நீங்க உண்மையிலேயே கடவுள் மறுப்பாளரா?’’

“இல்லை. என் வீட்டுலயும் ஆபீஸ்லயும் முருகன் இருப்பார்.  தன் பிள்ளை எங்கேயாவது வெளில வேலைக்குப் போகுதுன்னா, தன் சாமியும் கூடப் போகும்னு அம்மா நம்புவாங்க. இந்த நம்பிக்கைதான் மனுஷனின் முக்கியமான ஆறுதல். இதோட சேர்த்து எனக்கு மனிதநேயம், மனிதாபிமானம் ரெண்டும் ரொம்ப முக்கியம். மனிதனைத்தான் நான் ரொம்பப் பிரதானமா பார்க்குறேன். எங்க அம்மா படிக்காதவங்க. மாரியம்மன் கோயிலுக்குத் தீ மிதிச்சிருக்காங்க. வேண்டியிருக்காங்க. ‘தன் பிள்ளைகள் எப்படியாவது மேல வந்துடாதா, இந்த வறுமையை ஜெயிச்சுட மாட்டோமா, நிம்மதியா வாழ்க்கையை வாழ்ந்துட மாட்டோமா’ன்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இப்போ நான் அம்மாகிட்ட பேசுறப்போகூட, ‘இன்னைக்கு நான் இப்படியிருக்குறதுக்கு உன்னோட பிரார்த்தனைதான் முக்கியமான காரணம். ஆனா, இதுக்கு மேலேயாவது நீ நிம்மதியா இரு’ன்னு சொல்லுவேன். எங்க அம்மா மட்டுமல்ல, எல்லா அம்மாக்களின் பிரதான நம்பிக்கையும் இதுதான். இதை உடைக்குறது என்னோட நோக்கம் இல்ல.’’

‘`ஷூட்டிங் இல்லாத இந்த லாக்டெளன் நாள்களில் உங்க பொழுதுபோக்கு என்ன?’’

`` ‘முதல் மரியாதை’, ‘கரகாட்டகாரன்’, ‘வேதம் புதிது’ படமெல்லாம் பத்து முறை பார்த்துட்டேன். பார்க்கப் பார்க்க ரொம்பப் பிடிச்சது. தொடர்ந்து மூணு நாள் ‘கரகாட்டகாரன்’ பார்த்துக்கிட்டே இருந்தேன். இந்தப் படத்துல பெரியகருப்பு தேவர் நடிச்சிருப்பார். இவரோட பையன் விருமாண்டிதான் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தோட இயக்குநர். அவருக்கு போன் அடிச்சு, ‘தலைவா, கரகாட்டக்காரன் ஷூட்டிங் ஸ்பாட்டு போயிருந்தீங்களா’ன்னு கேட்டேன். ‘போயிருந்தேன்’னு சொன்னார். ‘போன அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க, கேட்க எனக்கு ஆசையாயிருக்கு’ன்னு பேசிட்டிருந்தேன். எல்லோரும் சொன்ன ‘Money Heist’ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. தினமும் ஒரு படம் பார்க்குறேன். எங்க டைரக்டர் சீனு ராமசாமி மற்றும் குமாரராஜா சொன்ன படங்கள் பார்த்தேன். இப்படி யாருகிட்டயாவது கேட்டுக் கேட்டு படங்கள் பார்த்துக்கிட்டிருக்கேன். சமீபத்துல, மலையாளப் படம் ‘கப்பெல்லா’ பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது. ‘கடசீல பிரியாணி’ன்னு ஒருத்தருடைய படம் பார்த்தேன். இன்னும் ரிலீஸாகல. பிரமாதமா இருந்தது. என்னோட ‘கடைசி விவசாயி’ படத்தை நாலுமுறை பார்த்தேன். பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோணுச்சு. என்னோட நடிப்பையெல்லாம் தாண்டி படத்துல நடிச்சிருக்குற பெரியவருடைய நடிப்பு, காட்டியிருக்குற வாழ்க்கை ரொம்பப் பிரமாதமா இருக்கு. இந்தப் படத்துல நடிச்சதுக்காக ரொம்பப் பெருமைப்படுறேன். இதைக் கடவுளோட ஆசீர்வாதமா பார்க்குறேன். செம படம் இது. எல்லாம் சரியானதும் தியேட்டருக்கு வந்துடும்.’’