Election bannerElection banner
Published:Updated:

`நான் கூப்பிட்டா என் டைரக்டர் எழுந்திருச்சிருவாரு!' - அப்போலோவில் கலங்கிய விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி - SP ஜனநாதன்
விஜய்சேதுபதி - SP ஜனநாதன்

`அவ்ளோதான் லைஃப்... அவ்ளோதான் லைஃப்'னு விஜய் சேதுபதி அழுதுட்டே போனாரு. அவருக்கு யாரு ஆறுதல் சொல்றது?

தமிழ்த் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் உடல்நிலை பற்றித் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதற்குப் பதிலளித்து அவருடைய உதவி இயக்குநர் பாலாஜி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜனநாதனின் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும், யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

`காதல்’ சரண்யா
`காதல்’ சரண்யா

அவருடைய உடல்நிலை பற்றித் தெரிந்துகொள்ள அவர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் `காதல்' சரண்யாவைத் தொடர்புகொண்டோம்:

``நேத்து மதியம் 2.30 மணிக்கு மயிலாப்பூர்ல அவரு வீட்ல சாப்பிட்டிருக்காரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல அசிஸ்டன்ட் டைரக்டருக்கு கால் பண்ணி, மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் வந்து பாத்துட்டுப் போ'ன்னு சொல்லியிருக்காரு. எல்லாரும் வேற வேற வேலைல பிசியா இருந்ததால அப்போ அந்த நேரத்துல வீட்டுல யாரும் இல்ல. அவரு போய்ப் பாக்கிறதுக்குள்ள நினைவிழந்து, வாந்தி எடுத்திட்டு இருந்திருக்காரு.

உடனே பக்கத்துல இருக்கிற குடும்ப டாக்டர்கிட்டதான் கூட்டிட்டுப் போனாங்க. அவரு பார்த்துட்டு உடனே அப்போலோவுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்காரு. நானும் நேத்து ராத்திரியில இருந்து இங்கேதான் இருக்கேன். பலரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டு இருக்காங்க. காலையில இருந்து அதிகபட்சமாக என்ன சிகிச்சை கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்திட்டு இருக்காங்க.

2007-ம் வருஷத்துல இருந்து சாரை எனக்குத் தெரியும். மூணு வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆகி அதிகமா வெயிட் போட்டுட்டேன். அந்த நேரத்துல ரொம்ப இன்ஃபீரியரா ஃபீல் பண்ணி, வெளில வராம இருந்தேன். ஜனநாதன் சார் அவருடைய ஆபீஸ்ல வேலை செய்யக் கூப்பிட்டாரு. அப்பவும் நான் வரல. ஒரு தடவையோடு விடல. மறுபடி மறுபடி கால் பண்ணி என்னை மோட்டிவேட் பண்ணிட்டே இருந்தாரு.

ஜனநாதன்
ஜனநாதன்
'இயற்கை', 'பேராண்மை' பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீர் மயக்கம்... மருத்துவமனையில் தொடர் சிகிச்சை!

உலகத்தை சந்திச்சுதான் ஆகணும். வெளியில வான்னு சொல்லிட்டே இருப்பாரு. அப்போ எனக்கு வருமானமே கிடையாது. என்னுடைய மெடிக்கல் செலவு எல்லாத்தையும் அவருதான் பாத்துக்கிட்டாரு. அதுக்கப்புறம் அவரு ஆபீஸ்லயே வேலைக்குச் சேர்ந்துட்டேன். நாலு நாளைக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டு போய், டெஸ்ட் எடுத்தேன். ஹைப்போ தைராய்டு நல்லா குறைஞ்சிருக்கு. நான் பழையபடி ஆகப்போறேன்னு சர்ப்ரைஸா அவருகிட்ட சொல்லணும்னு இருந்தேன்.

பிரெயின் அட்டாக்னு சொல்றாங்க. மூளைத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கு. அவரு இருக்கிற படுக்கைகிட்ட நேத்து நைட்டு, இன்னைக்கு காலை எல்லாம் போய் தட்டி எழுப்பிப் பாத்தேன். ஆனா அவரு ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்ல. நேத்து நைட்டு 12 மணிக்கு விஜய் சேதுபதி ஷூட்டிங் முடிச்சு வந்து பார்த்துட்டுப் போனாரு.

அவரும் எவ்வளவோ தட்டி எழுப்பிப் பார்த்தாரு. பக்கத்துல இருந்தவங்க கூட ஏன் இவ்ளோ வேகமா தட்டுறீங்கன்னு கேட்டாங்க. சேதுபதிக்கு கோபம் வந்திருச்சு. `அவரு என் டைரக்டரு. நான் தட்டுனா அவருக்கு என் குரல் கேக்கும். அவரு எழுந்திருச்சிருவாரு'ன்னு சொன்னாரு. டைரக்டர் கண்ணு முழிச்சு பார்க்கவேயில்லை. `அவ்ளோதான் லைஃப்... அவ்ளோதான் லைஃப்'னு விஜய் சேதுபதி அழுதுட்டே போனாரு. அவருக்கு யாரு ஆறுதல் சொல்றது?

எல்லாரும் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவரு எங்க டைரக்டர். சமீபத்துல 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன் வாங்கினாரு. வாங்கி கொஞ்ச நாள்லயே அது திருட்டுப் போயிடுச்சு. என்ன சார் இவ்ளோ காஸ்ட்லியான போன தொலைச்சிட்டீங்களேன்னு கேட்டேன். என்கிட்ட திருடிட்டுப் போய் அவன் சாப்பிட்டுப் போறான்... விடு! நம்மகிட்ட புதுசு வாங்கத் திராணியிருக்கு. அவன் நல்லா இருந்துட்டுப் போகட்டும்னு சொன்னாரு.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Vikatan

அப்படிப்பட்டவருக்கு மூளைச்சாவுன்னு செய்தி போடுறாங்க. தயவு செஞ்சு தப்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இன்னும் அவருக்கு ட்ரீட்மென்ட் போயிட்டுதான் இருக்கு. உணர்வுகள்ல முன்னேற்றம் இருக்குன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. நரம்பியல் மருத்துவர்கள் சிகிச்சையளிச்சிட்டு இருக்காங்க. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்று முடித்துக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு