Published:Updated:

`முதல்காட்சியே 60 டேக்; ராசுக்குட்டியின் சுட்டித்தனம்'- சூப்பர் டீலக்ஸ் ஷில்பா குறித்து விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

சூப்பர் டீலக்ஸில் திருநங்கை ஷில்பாவாக நடித்தது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் விஜய் சேதுபதி.

பிலிம் கம்பெனியன் சார்பில் சமீபத்தில் 8 திரைநட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட்டில் இருந்து ரன்வீர் சிங், தீபிகா படுகோன், மனோஜ் பாஜ்பாய், ஆயுஷ்மான் குர்ரானா, அலியா பட், தெலுங்கிலிருந்து விஜய் தேவரகொண்டா, மலையாளத்திலிருந்து நடிகை பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஒவ்வொரு நடிகரும் தங்கள் படங்கள் குறித்துப் பேசினர். சூப்பர் டீலக்ஸில் திருநங்கை ஷில்பாவாக நடித்தது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் விஜய் சேதுபதி.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

``சூப்பர் டீலக்ஸின் கதையை என்னிடம் சொன்னபோதே பிடித்துவிட்டது. இந்தப் படத்தை மிஸ் செய்யக் கூடாது என அப்போதே முடிவு செய்துவிட்டேன். எனக்கு பணமே தர வேண்டாம், நானே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என இயக்குநரிடம் கெஞ்சினேன். முதல் நாள், முதல் காட்சி சுமார் 50-60 ரீடேக் எடுக்கப்பட்டது. இறுதியாக எனக்குள் இருக்கும் பெண்ணை உணர்ந்தேன்.

எனக்கு நம்பிக்கை கிடைத்தது. நான் யாரையும் காப்பி அடிக்க விரும்பவில்லை. எனக்குள் அதை உணர விரும்பினேன். இந்த கேரக்டருக்காக சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. எத்தனை டேக் வந்தாலும் காட்சி உண்மையாக, உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நான் நடித்து முடித்த பிறகு மானிட்டரைகூட பார்க்கச் செல்லவில்லை" எனப் பேசினார்.

விஜய் சேதுபதி பேசிமுடித்ததும் குறுக்கிட்ட ரன்வீர் சிங், ``என் நண்பர் ஒருவர் அழைத்து சூப்பர் டீலக்ஸில் ஒரு 10 வயது பையன் நடித்துள்ளான். அதைப் பார்க்குமாறு சொன்னார். சிறுவன் நடிப்பைப் பார்த்தால், `உன் மொத்த வாழ்க்கை, உன் மொத்த கலைத்திறனைப் பற்றி நீ மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கும்' எனக் கூறினார். நான் முதலில் அவரை நம்பவில்லை.

ஆனால் `சூப்பர் டீலக்ஸ்' பார்த்த பிறகு நண்பர் சொன்னதுபோல் அந்த ராசுக்குட்டியின் நடிப்பு ஒரு அரிதான நிகழ்வு என்பதை உணர்ந்தேன். சிறுவனின் நடிப்பு மாயாஜாலம்போல இருந்தது. படத்தைப் பார்க்காதவர்கள், விஜய் சேதுபதிக்கும் அந்தச் சிறுவனுக்கும் நடுவில் இருக்கும் பிணைப்பைத் தெரிந்து கொள்ளப் பார்க்க வேண்டும். சிறப்பான நடிப்பு" எனக் கூற விஜய் சேதுபதி படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

``குமாரராஜா எப்போதும் ஒன்மோர் டேக் கேட்டுக்கொண்டே இருப்பார். அதற்கும் அந்தச் சிறுவன் சளைக்காமல் நடிப்பான். ஒருநாள் சிறுவர்கள் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது சிறுவன் ராசுக்குட்டி `இந்த காட்சி நன்றாக இல்லை. இன்னொரு டேக் போவோம்' எனக் கூறி அசரவைத்தான். வசனத்தை மறந்துவிட்டாலும், தான் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்வான்" எனக் கூறினார் விஜய் சேதுபதி.

vijay sethupathi
vijay sethupathi

இதற்கிடையே, இந்தி சினிமா குறித்த உங்கள் மிகப்பெரிய பயம் என்ன.. அதில் ஏன் அவ்வளவாக நடிக்கவில்லை எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, ``மொழிதான் முக்கிய காரணம். அதைவிட உண்மை என்னவென்றால் அந்த கலாசாரம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நான் இந்திப் படங்களைப் பார்ப்பதில்லை. மொழி என்பது மக்கள் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்று நான் நம்புகிறேன்.

ஆனால், கலாசாரம் மிகவும் முக்கியமானது. அந்த கலாசாரத்தின் மூலம் மட்டுமே நாம் பார்வையாளர்களுடன் இணைய முடியும். நீங்கள் சவுதிக்குச் சென்று ஆறு மாதங்கள் வேலை செய்தால், நீங்கள் அரபு மொழியைக் கற்றுக்கொள்ளலாம், மொழி, பெரிய தடையல்ல. முக்கிய விஷயம் கலாசாரத்தை சரியாக அறிந்துகொள்வது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா ஒரே கலாசாரம் கொண்டது. அதனால் இங்கு நடிப்பதில் எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு