Published:Updated:

நடிகர் சங்கத் தேர்தல்... வாக்களித்தனர் விஜய், விக்ரம், சூர்யா!

Vijay, Nadigar Sangam
Vijay, Nadigar Sangam

தனது 'மக்கள் இயக்கம்' உறுப்பினர்கள் படை சூழ வந்த விஜய், தனது வாக்கைச் செலுத்தினார்.

சென்னையைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நடக்குமா நடக்காத என்றிருந்த நடிகர் சங்கத் தேர்தல் பல சட்டச்சிக்கல்களைக் கடந்து இன்று மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 3100-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இதில் 1100- க்கும் மேற்பட்டோர் தபால் மூலமும் மீதமுள்ள அனைவரும் நேரிலும் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில், தமிழ்த் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். ஏற்கெனவே 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தேர்தல் குறித்து தனக்கு கடைசி நேரத்தில்தான் அறிவிப்பு வந்ததென்றும், அதனால் வாக்களிக்க இயலவில்லை, இது நடந்திருக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய்..! #NadigarSangamElections

Posted by Vikatan EMagazine on Sunday, June 23, 2019

இந்நிலையில், தற்போது, நடிகர் விஜய், மற்றும் சூர்யா தங்களது வாக்குகளைச் செலுத்திச் சென்றனர். தனது 'மக்கள் இயக்கம்' உறுப்பினர்கள் படை சூழ வந்த விஜய், காலை ஒரு 11.30 மணியளவில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல நடிகர் சூர்யாவும் தனது வாக்குகளைச் செலுத்திச் சென்றார்.

விஜய், சூர்யா, வாக்களித்துள்ள நிலையில், நடிகர் அஜித் பகல் 12 மணி வரை வாக்களிக்க வரவில்லை. மாலையில் அவர் வாக்களிக்க வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு