Published:Updated:

தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட்... விஜய்யின் `மாஸ்டர்' பிளான் என்ன?! #Master #Vijay

மாஸ்டர், விஜய்
மாஸ்டர், விஜய்

'மாஸ்டர்' படத்தின் ரிலீஸுக்காக விஜய் ஒரு மாஸ்டர் ப்ளானையும் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்!

'பிகில்' படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு 'விஜய் - லோகேஷ் கனகராஜ்' கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தின் ரிலீஸை ப்ளான் செய்திருந்த படக்குழு, அதற்கு தயாராகவும் இருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள் வரை படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்த அதே சமயம், கொரோனாவின் தாக்கமும் தமிழ்நாட்டில் அதிகமானதால் இப்போது வரை படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

மாஸ்டர்
மாஸ்டர்

பெரிய போராட்டத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், உச்ச நட்சத்திரங்களின் படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் இருக்கிறது. திரையரங்குகளில் தற்போது இருக்கும் 50 சதவிகித இருக்கை முறை, இந்த டிசம்பர் மாதத்திற்குள் படிப்படியாகக் கூடும் என்கிற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் இருக்கிறார்கள். அதே நம்பிக்கையில்தான், 'மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜனவரி 13-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருக்கும் 'மாஸ்டர்' படக்குழு, அதற்கான வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறார்கள். 'மாஸ்டர்' படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லரை கிறிஸ்துமஸ் தினத்திலோ அல்லது புத்தாண்டு தினத்திலோ வெளியிடலாம் என தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Master
Master
இதற்கிடையில், 'மாஸ்டர்' படத்தின் ரிலீஸுக்காக விஜய் ஒரு மாஸ்டர் ப்ளானையும் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து 9 மாதங்கள் தாமதமாக ரிலீஸாக இருப்பதாலும், கொரோனா தாக்கத்தால் தியேட்டருக்கு மக்கள் வர தயங்குவதாலும், அதனை சரி செய்ய விரும்பிய விஜய், நீண்ட நாள்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடிக்கவும் ப்ளான் செய்வதாக கூறுகிறார்கள்.

'தலைவா' படத்திற்காக சன் டிவிக்கு விஜய் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதன் பிறகு பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்த்து வந்த விஜய், தற்போது 'மாஸ்டர்' படத்திற்காக அதன் சேட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் சன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பரவ, இதை விஜய் தரப்பு மறுக்கிறது. அதேபோல், 'வில்லு' படத்திற்கு தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்திருந்தார், விஜய். அதன்பிறகு தியேட்டர் விசிட்டையும் தவிர்த்து வந்த விஜய், இந்தப் படத்திற்காக தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திட்டமிடலில் இருக்கும் விஜய்யின் தரப்பு, சீக்கிரம் இதுகுறித்து பக்காவான ப்ளானை விஜய்யிடம் கொடுக்க இருக்கிறார்களாம்.

#Vijay65 இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம்?! அறிவிப்பு எப்போது?

டிசம்பர் 31-ம் தேதி தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிடவிருக்கும் விஜய், 'மாஸ்டர்' படம் ரிலீஸானப் பிறகு இந்த வேலைகளை எல்லாம் முடித்தப்பின்னர்தான் அடுத்தப் படத்தின் வேலைகளில் ஈடுபட இருப்பதாகச் சொல்கிறார்கள். 'மாஸ்டர்' படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய், அந்தப் படத்திற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். அட்லி, லோகேஷ் கனகராஜ் எனத் தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவரும் விஜய், தனது அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்குக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு