Published:Updated:

விஜய் அரசியல் பன்ச், 'நோ' பேனர், குட்டிக் கதை...'பிகில்' இசை வெளியீட்டில் நடந்தது என்ன?

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

'மெர்சல்', 'சர்கார்' எனக் கடந்த இரண்டு படங்களாக அவருடைய இசை வெளியீட்டு விழாக்களை நேரில் பார்த்தபோது, மூன்று ஆண்டுகளில் விஜய் மற்றும் அவர் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் இணக்கம் எப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

ஒரு அண்ணா, அவர் சொல்லும் குட்டிக் கதை, கேட்கும் ஆயிரக்கணக்கான தம்பிகள் - அவர்கள் இடையே இருக்கும் பாசப் பரிமாற்றங்கள். பொதுவாக நடிகர் விஜய் பங்கேற்கும் இசை வெளியீட்டு விழாக்கள் அல்லது விருது நிகழ்வுகளுக்கு இருக்கும் அடிப்படை டெம்ப்ளேட் இதுதான். ஆனால், 'பிகில்' இசை வெளியீட்டு விழா இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டே இருந்தது. இந்த வடிவங்களின் அம்சங்களையெல்லாம் கடந்து அதைத் தாண்டிய ஒரு உணர்வுக்கூடலாக இருந்தது.

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

'மெர்சல்', 'சர்கார்' எனக் கடந்த இரண்டு படங்களாக அவருடைய இசை வெளியீட்டு விழாக்களை நேரில் பார்த்தபோதும், 'பிகில்' நிகழ்ச்சியைப் பார்க்கும்போதும், கடந்த மூன்றாண்டுகளில் விஜய் மற்றும் அவர் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் இணக்கம் எப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

படத்துக்குப் படம் விஜய்க்கான மக்கள் ஆதரவு, ஏதோவொரு புறக்காரணத்தால் கூடிக்கொண்டே போகிறது. மாநில அரசியல் முதல் தேசிய அரசியல் வரை ஒரு சிறிய விவாதத்தையும் அவர் படங்கள் கிளப்பிவிடுகின்றன. இந்த முறை அத்தகைய ஒரு சூழலுக்கான விதையை 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விதைத்துவிட்டார் விஜய். அதற்கான எதிர்வினையைப் படத்தின் வெளியீட்டில் அறுவடை செய்யவும் காத்திருக்கிறார் என்றே, விழாவில் அவருடைய பேச்சின் மூலம் அறியமுடிகிறது.

'சர்கார்' பட இசை வெளியீட்டின்போது, அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சில திரையரங்கங்களில் கைகலப்பு ஏற்பட்டது. மேலும், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டு, காவல் துறையினரால் அடித்து விரட்டப்பட்டனர் விஜய் ரசிகர்கள். அந்த நிகழ்வுகளைப் பற்றி மேடையில் விஜய் பேசியபோது, "நீங்க என் பேனர்ல கைவைங்க கிழிங்க... ஆனா, என் ரசிகர்கள்மேல கை வைக்காதீங்க... அவங்களால" என எச்சரிக்கை விடுத்தார். அதை அவர் சொல்லி முடித்த நொடி, அந்த அரங்கமே அதிர்ந்தபடி தங்கள் பதிலை வெளிப்படுத்தினார்கள் ரசிகர்கள்.

'வெறித்தனம்' பாடலைப் பாடி பேச்சைத் தொடங்கிய விஜய், தன்னுடைய பாணியில் படத்தின் மையக்கருவான மகளிர் கால்பந்தையும், வாழ்க்கையையும் இணைத்து, "லைஃப்கூட ஃபுட்பால் மாதிரிதான். நம்ம கோல்போட ட்ரை பண்ணுவோம். அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்... சில சமயம் நம்மகூட இருக்கிறவனே சேம்சைடு கோல் போடுவான்" எனக் கருத்து கூறினார். மேலும் தொடர்ந்தவர், "அவங்கள மாதிரி வாழணும், இவங்கள மாதிரி வாழணும்னு வாழாதீங்க. அவங்கள மாதிரி வாழத்தான் அவங்க இருக்காங்களே. நீங்க நீங்களாவே இருங்க. புடிச்சிருந்தா எடுத்துக்கோங்க, இல்லைன்னா விட்டுருங்க" என்று 'நண்பன்' பட வசனத்தை நினைவுகூர்ந்தார்.

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

பொதுவாக, விஜய் திரையில் பேசும் வசனங்களைவிட, பொதுவெளியில் பதிவுசெய்யும் கருத்துகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். சில நாள்களுக்கு முன் பேனர் விழுந்து விபத்தில் இறந்த சுபஶ்ரீக்கு மேடையில் இரங்கல் தெரிவித்தார் விஜய். என்றாலும், ஏற்கெனவே அந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களில் 'தன் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு பேனர் வைக்கக் கூடாது' என ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார். அந்தக் கட்டளையை ஏற்கும்விதத்தில் 'பிகில்' இசைவெளியீடு நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரி செல்லும் வழியிலோ, சென்னையின் வேறெந்த பொது இடத்திலோ எந்த பேனரும் இல்லை.

இதை, கடந்த சில இசை வெளியீட்டு விழாக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. 'சர்கார்' படத்தின் இசைவெளியீடும் இதே கல்லூரி வளாகத்தில்தான் நடைபெற்றது. ஒரு சிறிய காட்டுப்பகுதியில் இந்தக் கல்லூரி இடம்பெற்றுள்ளதால், அதை அடையும் சாலை கொஞ்சம் குறுகலாக இருக்கும். 'சர்கார்' இசை வெளியீடு விழாவின்போது பேனர்களை வைத்து இருபக்கமும் அடர்ந்திருந்த மொத்தக் காட்டையும் மறைத்தேவிட்டனர் விஜய் ரசிகர்கள். தற்போது 'பிகில்' விழாவுக்கு அந்தச் சாலையில் ஒரு பேனர்கூட வைக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்தச் சாலையில் அவ்வளவு நெரிசல். கடந்தமுறைகூட இவ்வளவு சாலை நெரிசல் ஏற்படவில்லை. நடிகர் விவேக் இதுகுறித்து மேடையில் பேசும்போது, "அத்தி வரதருக்கு அப்புறம் அதிகமான கூட்டம்" எனத் தன் நகைச்சுவை ஸ்டைலில் குறிப்பிட்டார். நீலம், மஞ்சள், ஊதா, பச்சை எனப் பார்க்கிங்கைக்கூட டிக்கெட்டுக்கு ஏற்றவாறு பிரித்து வைத்திருந்தார்கள். என்றாலும், எந்த வண்டியாலும் விழா நடக்கும் கல்லுரியை எளிதில் அடைய முடியவில்லை.

அரங்கின் வாசலில் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தன. அந்தக் கல்லூரியின் பேருந்துகளிலும் ரசிகர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்தச் சாலை நெரிசலில் அந்தப் பேருந்துகளும் ஊர்ந்தே வந்தன. அதனால், ரசிகர்கள் ஒரு கட்டத்துக்குமேல் பேருந்துகளைவிட்டு இறங்கி கல்லூரியை நோக்கி நடக்கத்தொடங்கிவிட்டனர். இருபுறமும் நீண்ட வரிசையில் ரசிகர்கள் நடக்க, நடுவில், வண்டிகளின் வரிசை.

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

அப்போது ஒரு ரசிகரிடம் பேச்சுகொடுத்தேன். "எவ்வளவு தூரம் நடக்குறீங்க" எனக் கேட்டபோது, "அதெல்லாம் தெரியல ப்ரோ... ரொம்ப தூரமா நடக்குறோம்... எல்லாம் தளபதி ஸ்பீச், அப்புறம் அந்தக் குட்டிகதையக் கேட்கத்தான்" என்றார். கிட்டத்தட்ட வந்த பலரின் எதிர்ப்பார்ப்புகள் விஜய்யின் பேச்சும், அதில் இருக்கும் குட்டிக்கதைக்காகவும்தான்.

அந்த எதிர்ப்பார்ப்புகள் அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே நிறைவேறின என்பதை விஜய்யின் பேச்சுக்கு அரங்கம் அதிர்ந்த விதத்தில் அறிய முடிந்தது. தன்னைக் குறித்து பிற நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்களையும், தன் ரசிகர்கள் பிற நடிகர்களைச் செய்யும் கேலிகளையும் குறித்துப் பேசிய விஜய் "எம்.ஜி.ஆர் பிரசாரத்துக்குப் போன சமயத்துல அவரோட அமைச்சர் ஒருத்தர் எம்.ஜி.ஆரைக் குஷிபடுத்த கலைஞரைப் பற்றி தப்புத் தப்பா பேசினாராம். ஆனா, எம்.ஜி.ஆர் உடனே காரை நிறுத்தச் சொல்லி, அந்த அமைச்சரைத் திட்டி வழியில இறக்கிவிட்டுட்டு வந்துட்டாராம். ட்ரோல்ஸ், ஹேட்டர்ஸ்னு அதுல எல்லாம் கவனத்தைத் திருப்பாம, உங்களைச் சுத்தி நடக்கிற பிரச்னைக்கு ரியாக்ட் பண்ணுங்க" என்றார்.

இவற்றையெல்லாம்விட நிகழ்கால அரசியல் குறித்தும் சில கருத்துக்களைத் தெளித்தார் விஜய். சுபஶ்ரீயின் மரணத்தைப் பற்றிப் பேசியபோது, "யாருமேல நடவடிக்கை எடுக்கணுமோ, அவங்களை விட்டுட்டு, லாரி டிரைவர், பேனர் கம்பெனிக்காரர் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்குறாங்க" என நக்கலாகக் கூறினார். அதைப்போலவே, ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் அதைக் குறித்தும், "அரசியல்ல புகுந்து விளையாடுங்க... ஆனா, விளையாட்டுல அரசியல் பண்ணாதிங்க" என ஒரு அரசியல் பன்ச்சையும் பற்றவைத்தார்.

தன்னுடைய குட்டிக்கதையை, 'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்ற திருக்குறளோடு தொடங்கினார். "பூக்கடையில் வேலை பார்த்துட்டிருக்கிற ஒரு பையனை, தெரிஞ்ச பையனாச்சேன்னு பட்டாசுக் கடையில வேலைக்குச் சேர்த்தார் ஒருத்தர். அங்கே அவன் வழக்கம்போல ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பட்டாசுமேல தண்ணி தெளிச்சு வித்திருக்கான்." என்ற கதையைக் கூறி, "அண்டு தி மாரல் ஆஃப் தி ஸ்டோரி இஸ்" என ஒரு நக்கலான ஆட்டிட்யூடுடன், "தகுதியானவங்களை மட்டும் தகுதியான இடத்துல வைங்க... சும்மா தெரிஞ்சவங்களையெல்லாம் வைக்காதீங்க" என ஃபைனல் அரசியல் டச் கொடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு