Published:Updated:

"என்னோட சசிக்கு இன்னும் பைக் ஓட்டத் தெரியாது!"- கே.வி.ஆனந்த் பகிர்ந்த லவ் ஸ்டோரி!

காதல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கிராமர் உண்டு. அது அவங்கவங்க டேஸ்ட், எக்ஸ்பீரியன்ஸைப் பொறுத்து நிச்சயம் வித்தியாசப்படும். அதனால, ‘காதல் என்பது...’னு ஆரம்பிச்சு லெக்சர் அடிக்கறதுல எனக்குச் சம்மதம் கிடையாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காத்தாடி விட்டிருக்கிங்களா நீங்க...? கலர்கலரா காகிதம்வெட்டி ஒட்டி, நூல் வாங்கி, அதுல மாஞ்சா போட்டு, பசங்களோட டீம் சேர்த்து, பக்கா ஃப்ரொபஷனலா காத்தாடி விட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்குக் கிடையாது!

மின்ட் ஏரியாவுல கத்தாடி விடுறதுதான் நேஷனல் கேம் மாதிரி. ஒரு தவம் மாதிரி செய்வாங்க. வயசு வித்தியாசமே இல்லாம எல்லாரும் ஏதோ சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கற மாதிரி வெறியோட இருப்பாங்க. அந்த அமர்க்களத்துல நான் இல்லேன்னாலும் அங்கேயே ஒரு மூலையில் தனியா ஒரு சின்னக் காத்தாடி பிடிச்சு நின்னுட்டிருப்பேன். கரெக்ட்டா சொல்லணும்னா காதல்ல என்னோட எக்ஸ்பீரியன்ஸ் இது மாதிரிதான்!

எல்லாம் சொந்தக்காரங்க. பக்கத்துப் பக்கத்து வீட்ல குடியிருந்தாங்க. நான் அத்தை வீட்டில தங்கியிருக்கேன். எதிர்வீட்லயும் நம்ம உறவுக்காரர்தான். அடிக்கடி என்னைக் கூப்பிடுவார். ‘இன்னிக்கு என்ன சாப்பிட்டே... கடைசியா என்ன சினிமா பார்த்தே...’ சம்பந்தமில்லாம என்னைக் கொஞ்சிட்டிருப்பாரு. பேச்சோட பேச்சா எங்க அத்தை பொண்ணைப் பற்றி அநாவசியமா விசாரிப்பார். ‘உங்க அக்கா என்னடா சொல்றா... இன்னிக்கு பிராக்ட்டிகல் கிளாஸ்ல என்ன பண்ணாங்களாம்? அதுக்குத் தித்திப்புப் பிடிக்குமா... காரம் பிடிக்குமா?’னு திடீர்னு ஏதாவது கேட்பார். ‘தெரியலை... ஆனா, எதுவேணா சாப்பிடும்’னு பதில் சொல்லிட்டிருப்பேன். ‘அவன் என்னடா சொல்றான். எப்போ பார்த்தாலும் உன்னைக் கூப்பிட்டுப் பேசறானே... என்னடா நடக்குது?’னு இது கேட்கும்’. ‘சும்மாதான் பேசறோம். ஆனா நீ என்ன பண்றே... உனக்குத் தித்திப்புப் பிடிக்குமானெல்லாம் கேட்குறாரு. நான் என்ன சொல்லட்டும்’னு கேட்பேன். இப்படியே நடந்தது.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

ஒரு நாள் ரெண்டு பேர் வீட்லயும் பேசி அவங்களோட கல்யாணம் நடந்தது. எனக்கு தெரிஞ்சு அதுக்கு முன்னால அவங்க பேசினதுகூடக் கிடையாது. ரெண்டு பக்கமும் நியூஸ் சொல்ற வேலையை நான் பார்த்தேன். அது காதலா இல்லையான்னே தெரியலை. இப்போ அவங்க பொண்ணு ப்ளஸ் டூ படிக்கிறா. அது வேற விஷயம்.

ஒருநாள் அத்தை என் காதைத் திருகி, ‘எப்பவும் இப்படி காத்தாடியும் கையுமா இருந்தே, உனக்கு பொண்ணு தர மாட்டேன்’னு சொன்னதும், ‘அந்தாள்கூடத்தான் காத்தாடி விட்டாரு. அவருக்குப் பொண்ணு குடுத்தீங்கள்ல. எனக்கு மட்டும் ஏன் குடுக்கக்கூடாது’னு அந்த சின்ன வயசுல அடம் பிடிச்சது மட்டும் ஞாபகத்துல இருக்கு.

அப்பாவுக்கு திருச்சி டிரான்ஸ்ஃபர் கிடைக்க, அங்கே என்னை ஸ்கூல்ல சேர்த்தாங்க. பயங்கர ஸ்ட்ரிக்ட் ஸ்கூல் அது! நான் மெட்ராஸ் பையனாச்சே. பெல்பாட்டம் போட்டு, ஸ்டெப் கட் பண்ணி படுஸ்டைலா இருப்பேன். (நிஜமா சார்!) பக்கத்து க்ளாஸ் ரூம்ல ஒரு ஏஞ்சல் படிச்சிட்டிருந்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’லாம் வந்திருந்த நேரம். எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சது. காரணம், அதோட அழகு. இது ‘க்ளிக்’காகுமானு ஒரு சந்தேகமும் கூடவே இருந்தது. ஆனா, காதலை வளர்க்கத்தான் கடவுள் நிறைய ஃப்ரெண்ட்ஸைப் படைக்கிறாரே.

ப்ரேயர்ல நிப்போம். ‘பார்றா... எவ்ளோ இடம் இருக்கு. உன் பக்கமா வந்து நிக்கறாளே... இதை என்னன்னு சொல்றது...’னு ஏத்தி விடுவாங்க.

ஒருநாள் வழியில மாஸ்டர் வர்றார். நான் குட்மார்னிங் சொல்ல, ‘பொளேர்’னு ஒரு அறை விட்டாரு. எனக்குக் காரணமே புரியலை. ‘நீ என்ன சண்டியரா... லெஃப்ட் ஹேண்ட்ல சல்யூட் அடிக்கறியா’னு இன்னொரு அறை. வலது கைநிறைய புக்ஸ் வெச்சிருந்தேன். எனக்கு அவமானமாப் போச்சு. மெள்ளத் திரும்பிப் பார்த்தா, எல்லாரும் சிரிக்க, அந்தப் பொண்ணு முகத்துல மட்டும் ஒரு சோகம். ‘இது லவ்வுதான்டா’னு பத்த வெச்சுட்டாங்க பசங்க.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

‘அவ க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கற பொண்ணு. நீயும் நல்லா படிக்கிற. அவ ரொம்ப அழகு. நீயும் ஸ்டைலா இருக்கே. அவ சைச்கிள் வெச்சிருக்கா. நீயும் சைக்கிள் வெச்சிருக்கே. அவ பொண்ணு... நீ பையன்’னு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்ல, திகுதிகுனு எனக்குள்ள காதலாயிருச்சு.

ரொம்ப சுவாரஸ்யமான காலம். குட்டிகூரா பவுடர் போட்டு, ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் பூசி சிவப்பாக நிறைய ட்ரை பண்ணுவேன். ஸ்கூல் முடிஞ்சு அவ கிளம்ப, சைக்கிள்ல பின்னாலேயே போய் அவ வீட்டுக்குத் திரும்பின பிறகுதான் நான் திரும்புவேன். நோட்ல, புக்ல எல்லாத்திலயும் அவ பேரை எழுதி எழுதி பக்கத்துல என் பேர் எழுதிப் பார்ப்பேன். சின்னச் சின்னதா நிறைய சம்பவங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சு ரிஸல்ட் வருது. அடுத்த நாள் நாங்க எல்லாரும் மெட்ராஸ் திரும்புறோம். அப்பாவுக்கு மறுபடியும் டிரான்ஸ்ஃபர். வருத்தத்தோட ஸ்கூலுக்கு மார்க் ஷீட் வாங்கப் போறேன். அவதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எல்லாருக்கும் சாக்லேட் தர்றா.

எனக்கு அவளைப் பிரிஞ்சு இருக்க முடியும்னு தோணலை. அவ வீட்டுக்குத் திரும்பறப்போ வழிமறிச்சு நிறுத்தி, தைரியத்தை வரவழைச்சு, ‘எனக்கெல்லாம் சாக்லேட் இல்லையா?’னு கேட்டேன். சிரிச்சுக்கிட்டு எடுத்துத் தந்தா.

‘நீ 402 தானாமே. ஏன் மார்க் குறைஞ்சது. நீதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேனு நான் நினைச்சேன் தெரியுமா? உங்க அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபராமே. நீங்க எல்லாரும் நாளைக்கு மெட்ராஸ் கிளம்பிருவீங்களாமே... உங்க வீட்ல இருக்கிற பவளமல்லிப்பூ எனக்கு பிடிக்கும் தெரியுமா? ஊருக்குப் போனாலும் என்னை மறந்துறமாட்டியே... எனக்கு லெட்டர் எழுது. நானும் எழுதறேன்’னு அந்தப் பொண்ணு என்கிட்டே பேசப்பேச நான் திகைச்சுப் போயிட்டேன்.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்

அந்தப் பொண்ணு மனசுக்குள்ள நான் இருந்திருக்கேன்னு உணர்ந்தது அப்போதான். என்னைப் பற்றி சின்னச்சின்ன டீடெய்ல்ஸ்கூடத் தெரிஞ்சு வெச்சிருக்கு. இது ஒருதலை ராகமில்லேடா. காதல்ல நாம ஜெயிச்சுட்டோம்னு சந்தோஷம் தான் இருந்தது. அது வெற்றினுதான் புத்திக்கு அப்போ பட்டது. அப்புறம் மெட்ராஸ் வந்து வருஷங்கள் ஓட, அந்த பொண்ணு மறந்து போச்சு. இருந்தாலும், இப்பவும்கூட பவளமல்லிப்பூ, குட்டிகூரா பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் வாசனை பட்டாலே போதும் சட்டுனு அந்தப் பொண்ணு ஞாபகம்தான் வரும்.

நாலு வருஷத்துக்கு முன்னால அந்தப் பொண்ணை மயிலாப்பூர்ல பார்த்தேன். நான் இறங்கின பஸ்ல அவ ஏறினா. கல்யாணமாகியிருக்கணும். க்ராஸ் பண்றப்போ அவ பார்வை என்னையும் கடந்துதான் போனது. ஆனா, அந்தக் கண்கள்ல எந்தச் சலனமும் இல்லை!

காதல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கிராமர் உண்டு. அது அவங்கவங்க டேஸ்ட், எக்ஸ்பீரியன்ஸைப் பொறுத்து நிச்சயம் வித்தியாசப்படும். அதனால, ‘காதல் என்பது...’னு ஆரம்பிச்சு லெக்சர் அடிக்கறதுல எனக்குச் சம்மதம் கிடையாது.

ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் ஸ்ரீதர் சார் ஸ்டைல்ல சொன்னா, எனக்கு ‘காதலிக்க நேரமில்லை’. அதுதான் உண்மை.

காதல்ங்கறது கல்யாணத்தோட சம்பந்தப்பட்ட விஷயம்னு எனக்குள்ள பதிஞ்சு போனது. அப்படி ஒரு பொண்ணைச் சந்திச்சுப் பேசிப் பழகிப் புரிஞ்சு, ஒரு ரிலேஷன்ஷிப் வளர்க்க எனக்கு நேரம் கிடையாது. நினைப்பும் கிடையாது. ஆனா, என்னோட ரெண்டு நண்பர்கள் சந்திச்ச மோசமான அனுபவங்கள் என்னைப் பாதிச்சது.

ஒருத்தன் ரொம்ப சின்ஸியர். எங்களையெல்லாம் விட்டுட்டும் அடிக்கடி அந்தப் பொண்ணைப் பார்க்க ஓடிப்போயிடுவான். ரொம்ப இன்டிமேட்டா இருப்பாங்க. பைக்ல சுத்தறதும், ஓட்டல் போறதும்னு எப்பவும் ரெண்டு பேரும் ஓண்ணா இருந்தாங்க. ஒரு நாள் அமெரிக்கா மாப்பிள்ளை ஒருத்தன் கிடைச்சதும் அந்தப் பொண்ணு இவனை விட்டுட்டுப் போயிட்டா. ரெண்டாவது கதையும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான்.

லவ் ஃபெயிலியர்ல... ரெண்டு பசங்களும் எவ்ளோ கஷ்டப் பட்டாங்கன்னு எனக்குத் தெரியும். ஆறு மாசம் பாட்டிலோட திரிஞ்சானுங்க. நினைச்சு நினைச்சு அழுவானுங்க. அப்புறம் கெட்ட வார்த்தையெல்லாம் பேசித் திட்டுவானுங்க. இப்போ இவங்களும் கல்யாணம் ஆகி நல்லபடியா இருக்காங்க. பழைய காதல் கதையை ஞாபகப்படுத்தினா ‘தப்பிச்சோம்டா’னு சிரிக்கறாங்க.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்

மறக்கமுடியாத காமெடி ஒண்ணு நடந்தது. ஒரு பார்ட்டி, டிஸ்கொதே போயிருந்தோம். ஆறு பசங்க அவங்களோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸோட வந்திருந்தாங்க. நான் மட்டும் தனி ஆளு. எல்லாரும் செம டான்ஸ் ஆட, ஓரமா ஒரு டேபிள்ல உட்கார்ந்து அந்த சந்தோஷத்தைப் பார்த்துட்டிருந்தேன்.

என் ஃப்ரெண்ட் நிறையக் குடிச்சிருந்தான். வந்து டேபிள்ல அப்படியே ஃப்ளாட். டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நானும் ஒண்ணும் பண்ணல. அவனோட ஃப்ரெண்ட் ஓடி வந்தா. அவனைப் பார்த்தா... அப்புறம் ஒரு சேர் எடுத்துப் போட்டு என் எதிரே உட்கார்ந்தா.

பேச்சு எங்கெங்கேயோ வளர்ந்தது. திடீர்னு ‘உனக்கு வரப்போற பொண்ணு எப்படியிருக்கணும்னு யோசிச்சு வெச்சிருப்பேதானே... சொல்லேன்’னு அந்தப் பொண்ணு கேட்டது. ‘அப்படியெல்லாம் இல்லே’னு சமாளிச்சேன். மறுபடியும் மறுபடியும் கேட்க, சுவாரஸ்யமா சொல்ல ஆரம்பிச்சேன்.

‘ஹோம்லியா இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு டிகிரி முடிச்சிருக்கணும். கவிதையெல்லாம் பேசணும். பைக் ஓட்டணும். கொஞ்சம் டான்ஸ் ஆடத் தெரிஞ்சதுனா பெட்டர். என் வேலையோட சிரமம் புரிஞ்சிருக்கணும். கஷ்டம் பழகியிருக்கணும். தைரியமான பொண்ணா இருக்கணும்...ம்.. எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தெரியணும். தவறுகளை மன்னிக்கிற குணமும் அதைச் சரி பண்ற புத்தியும் இருக்கணும். நல்ல ஃப்ரெண்டா இருக்கணும்’...னு நீளமா நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள அந்த பொண்ணு ஆரம்பிச்சா.

‘ய்யே... ஆனந்த். ச்சே... நீ சொல்ற எல்லாமே என்கிட்டே இருக்குய்யா. காட்'ஸ் கிரேஸ்... அந்தப் பொண்ணு நான் தான்யா’னு படபடன்னு அது ஆரம்பிக்க, நான் ஆடிப் போய்ட்டேன்! இத்தனைக்கும் பக்கத்துல போதையில கிடக்கிறவன் அந்தப் பொண்ணை சின்ஸியரா லவ் பண்றவன்.

‘எக்ஸ்க்யூஸ்மீ, பாத்ரூம் போயிட்டு வர்றேன்’னு எழுந்து இடத்தைக் காலி பண்ணிட்டேன்.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

எனக்கு காதல் மேல மரியாதை குறைஞ்சதுக்கு இதெல்லாம் கூட காரணங்கள். யோசிச்சுப் பார்க்கிறப்போ ஃபர்ஸ்ட் லவ் இருக்கே, அதுதான் நிஜமான லவ்னு நினைக்கிறேன். அது காதலா... இனக்கவர்ச்சியாங்கிற விவாதம் வேணாம். ஆனா, அந்த வயசுல இருக்கிற இன்னொஸன்ஸ் அப்புறம் தொலைஞ்சு போயிடுதுனு தோணுது.

காதல் பலநேரங்கள்ல சந்தர்ப்பவாதமான சுயநலமான விஷயமாயிடுது. ‘இவன் மீடியால இருக்கான். இவ மார்க்கெட்டிங்ல இருக்கா’னு பர்சனாலிட்டி, பேங்க் பாலன்ஸ், ஃபேமிலி ஸ்டேட்டஸ்னு காதல்ங்கற பேர்ல நிறைய கணக்குப் போட ஆரம்பிச்சிடறாங்களோனு நினைப்பேன். காதல் எனக்கு அவுட் ஆஃப் ஃபோகஸானது இப்படித்தான். எல்லாமே தப்பு இல்லை. பாஸிட்டிவான ஸ்டோரி நிறைய இங்கே உண்டே...

சரி... என் கதையை எப்படி முடிக்கலாம்..?

வீட்ல ‘எப்போடா கல்யாணம்....’னு ட்ரபிள் பண்ண ஆரம்பிச்சாங்க. முக்கியமான காரணம் என் பாட்டி!

என் டேபிள்ல ஏதாவது ஒரு இன்டர்வியூக்காக நான் எடுத்த ஒரு பொண்ணோட போட்டோ இருக்கும். பாட்டி அதைப் பார்த்து பயந்துபோய் ‘யாருடா இது...?’னு கேட்பாங்க. அவங்க பதட்டத்தைப் பார்க்கிறப்போ விளையாடிப் பார்க்கலாம்னு தோணும். ‘பாட்டி யார்ட்டயும் சொல்லாத... இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு’னு ரகசியமா சொல்வேன். ‘என்னடா சொல்றே’னு பதறுவாங்க. ‘ஆமா பாட்டி... செம லவ்வு’னு சொல்லிட்டுப் போய்டுவேன்.

அடிக்கடி இது மாதிரி ஏதாவது காமெடி நடக்க அம்மாகிட்டே பாட்டி ஒரே புலம்பல்ஸ். ‘இவன் கெட்டுப் போயிட்டான். ஒரு கல்யாணம் பண்ணி வெச்சாத்தான் சரியாகும்’னு அவங்க பதற, வீட்ல பெரிய காமெடி. பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

‘தியேட்டர் ஓனராம் ஆனந்த். பெட்ரோல் பங்க்கூட இருக்காம். எம்.பி-யோட பொண்ணுடா’னு அப்பப்போ ஏதாவது சொல்லிட்டிருப்பாங்க. அடிக்கடி வீட்டு வாசல்ல ஏதாவது கார் நிக்கும். உள்ளே நாலைஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க. ‘வாடா ஆனந்த்’னு கூப்பிட்டு என்னை அறிமுகப்படுத்துவாங்க.

நமக்காக ரொம்ப சிரமப்படறாங்களேனு தோணுச்சு. ‘சரி பொண்ணு பாருங்க. என்னோட விருப்பம் இதுதான்’னு ‘படிச்சிருக்கணும். கொஞ்சம் தைரியமான பொண்ணா இருக்கணும்’னு நான் ஆசைப்பட்ட விஷயங்களைச் சொன்னேன்.

எனக்கு சசி கிடைச்சாங்க. அம்மா & அப்பா பார்த்து நடத்தி வெச்ச கல்யாணம். ‘சசி கவிதை எழுதும். சசி ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்தவங்க. சசிக்குக் கஷ்டம் தெரியும். சசிக்குப் பொறுமை நிறைய உண்டு. ‘ஸ்கூல் படிக்கிறப்போ மாலினினு ஒரு பொண்ணு’னு நான் கதை சொல்லறப்போ சசி சுவாரஸ்யமா கேட்கும். ‘நல்லவேளை அந்தப் பொண்ணு தப்பிச்சிருச்சு’னு சசி கிண்டலடிக்கும்’னு மனசுல நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த விஷயங்கள் சசிகிட்டே இருந்தது என்னோட லக்!

இருந்தாலும், ஒரே ஒரு வருத்தம் இருக்கு. என்னோட சசிக்கு இன்னமும் பைக் ஓட்டத் தெரியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு