பெ.அருணா, திருப்பூர். '' 'விஜய் இளைஞர் காங்கிரஸில் சேர வயதுத் தகுதி இல்லை’ன்னு சொன்னாரே ராகுல் காந்தி. அவரைச் சந்தித்தபோது பதவி கேட்ட உங்கள் கோரிக்கையை நிராகரிக்கத்தான் அப்படிச் சொன்னாரா? அந்தச் சந்திப்பின் பின்னணியை இப்போதாவது சொல்லுங்களேன்?''
''சினிமா கிசுகிசு கேள்விப்பட்டு இருக்கேன், அனுபவிச்சு இருக்கேன். அரசியலில் கூடவா இப்படி வதந்தி பரப்புவாங்க?

இப்போ வரை அந்தச் சந்திப்பில் நாங்க என்ன பேசினோம்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும். அவரை ஏதோ நான் பதவி கேட்டு சந்திச்சதா வெளியான செய்தி முழுக்கவே தப்பு. இப்போ விகடன் மேடை மூலமா அதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமத் தெளிவுபடுத்திக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!அந்தச் சந்திப்பில், ராகுல்... என் படங்கள், சினிமா உலகம், என் பெர்சனல் இன்ட்ரஸ்ட் பத்திப் பேசினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் என்ன தாக்கம் இருக்கும்னு ஆர்வமா விசாரிச்சார். அவரோட அரசியல் அணுகுமுறை, சுறுசுறுப்பு, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் 'குட்வில் இமேஜ்’னு நான் பேசினேன். அவ்வளவுதான்.இது தவிர, எந்தப் பதவியைப்பத்தியும் அவரும் நானும் பேசிக்கவே இல்லை. 'எனக்கு இதைச் செஞ்சு கொடுங்க... அதைச் செஞ்சு கொடுங்க’ன்னு கேட்டு எனக்குப் பழக்கம் இல்லீங்ணா!''
ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.
''இந்தத் தேர்தல் முடிவு மூலம், நீங்கள் புரிந்துகொண்டது என்ன?''
'' 'தெய்வம் நின்று கொல்லும்’கிறது பழமொழி. 'தெய்வம் இன்றே கொல்லும்’கிறது புதுமொழி. இது இந்தத் தேர்தல் உலகத்துக்கு உணர்த்திய உண்மை!''

எஸ்.பெரியசாமி, சென்னை-17.
''நாகையில் மீனவர்களுக்காக நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கித் திண்டாடிவிட்டீர்கள்... அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆர்வம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமா?''
''என் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்ல கூடத்தான் கூட்டம் முண்டியடிக்கும். வியர்வையில் நனைஞ்சு, சட்டை கசங்கி, பர்ஸ் தொலைஞ்சுன்னு... எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் என் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பார்க்கிறாங்க. அந்தக் கஷ்டத்தை என் மேல வெச்சு இருக்கிற அன்பு காரணமாத்தானே சகிச்சுக்கிறாங்க. அதே அன்பு அவங்க மேல எனக்கும் இருக்கும்ல!அவங்களுக்காக நான் அந்த சிரமத்தைக் கூடப் பொறுத்துக்க மாட்டேனா? என் மேல் எவ்வளவு அன்பு, பாசம் இருந்தா... என்னைப் பக்கத்துல பார்க்கணும்னு முண்டியடிச்சுட்டு வருவாங்க. அப்படி லட்சக்கணக்கான ரசிகர்களோட அன்பை சம்பாதிச்சது என் பாக்யம். மக்கள் அன்பைப் பெறத்தானே கஷ்டப்படுகிறேன். அதைச் சிரமமா நினைக்கலை... அது வரம்ணா!''

க.ஆதிகேசவன், திருவண்ணாமலை.
''அஜீத் பற்றி உங்க பெர்சனல் ஒப்பீனியன் என்ன?''
''அவரோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். எந்த விஷயத்தையும் 'ஜஸ்ட் லைக் தட்’ செஞ்சு முடிச்சிடுவாரு. என் படத்துல ஒரு பஞ்ச் வருமே... 'ஒரு தடவை முடிவெடுத்தா... அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு. அது அஜீத்துக்கும் பக்காவாப் பொருந்தும்!''
ச.ஐயப்பன், சென்னை-75.
''உங்க பையன் ஜேசன் சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்கார். சீக்கிரமே அவரையும் சினிமாவில் பார்க்கலாமா?''
''தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்னு சொல்வாங்களே... அப்படி வீட்டுக்குள்ளேயே எனக்கு ஒரு தோழன் ஆயிட்டார் சஞ்சய். விறுவிறுன்னு என் தோள் உயரத்துக்கு வளர்ந்துட்டார். அப்பா - மகன்னு இல்லாம, ஒரு ஃப்ரெண்டோடு பேசுற மாதிரிதான் நானும் அவரும் பேசிப்போம். சஞ்சயோட குழந்தை முகம் கம்ப்ளீட்டா மாறிடுச்சு. 'நான் வளர்கிறேனே டாடி’ன்னு வளர்ந்துட்டார். இப்போ சாருக்குப் பிடிச்சது கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்தான்! எதிர்காலத்தில் அவர் என்னவா வரணும்கிறது அவரோட விருப்பம். அதுக்கு ஒரு தந்தையா என்னால என்ன உதவ முடியுமோ... அதை மட்டும் பண்ணுவேன்!''
கு.ரத்தினம், ஆண்டிபட்டி.
''விஜயகாந்த்தின் வளர்ச்சி பற்றி?''
''அண்ணன் வளர்ந்தா... தம்பிக்கு சந்தோஷம்தானே!''
ஆர்.ராஜன், ஆரணி.
''விஜய் - விஜயகாந்த் ஒப்பிட முடியுமா?''
''இருவரும் என் தந்தையால் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள்!ஒரு நல்ல ஆரம்பம், அடைய வேண்டிய இலக்கில் பாதியை எட்டினதுக்குச் சமம்னு சொல்வாங்க. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆரம்பம் ரொம்பவே நல்லா அமைஞ்சது!''
அப்துல் கபூர், நாகர்கோவில்.
''ஜெயலலிதா அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?''
''நான் மட்டும் இல்ல... ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்றுவேன்னு அவர் ஒரே ஒரு உத்தரவாதம் மூலம் உறுதிப்படுத்திட்டாரே!'தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமா மாற்றுவேன்’னு அவர் சொல்லி, அதைச் சாத்தியமாக்க முனைப்புடன் செயல்படுறார். கண்டிப்பா, அவரால் அதைச் சாதிக்க முடியும். சாதிச்சுக் காட்டுவார். அரசியல் அரங்கில் அவர் எப்பவுமே தமிழ் மக்களுக்கு நிழல் தரும் ஆலமரம்!''
கே.முத்து, செய்யாறு.
''ரஜினி - கமல் ஒப்பிடுங்கள்?''
''சிங்கம் - புலி... வேறென்ன சொல்ல!''
ஆர்.பாரி, செங்கல்பட்டு.
''சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று இருக்கும் ரஜினி பற்றி..?''
''வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவலையில் இருக்கோம். யாரைச் சந்தித்தாலும், பேச்சு ரஜினி சார்ல ஆரம்பிச்சு, ரஜினி சார்லதான் முடியுது.பெர்சனலா நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்க்ரீன்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாத மாதிரி ஸீன் வந்தாலே, கத்திக் கூப்பாடு போடுற ஆளு நான். இப்போ நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கவே முடிய லைண்ணா. சூப்பர் ஸ்டார் ரொம்ப சீக்கிரமே ஹெல்த்தியா திரும்பி வந்திருவார். 'ராணா’ படத்தை ரசிகர்களோட ரசிகனா தியேட்டர்ல உக்காந்து நானும் பார்ப்பேன்!''

சி.கேசவன், மதுரை.
''உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?''
''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''
எல்.ராஜன், தஞ்சாவூர்.
''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''
''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''
எஸ்.எம்.ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.
''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''
விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...S - சிந்திப்பேன்.M - மௌனமாகிடுவேன்.S - சிரிப்பேன்.
ஆ.முத்து, செய்யாறு.
''எப்பண்ணா கட்சி தொடங்கப் போறீங்க?''
''அவசரப்படாதீங்கண்ணா!''
இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்து இருப்பது ஆரோக்கியமான விஷயமா?''
''அது அவரோட தனிப்பட்ட முடிவு!''
வி.பிரகதீஸ்வரன், தூத்துக்குடி.
''உங்கள் ரசிகர்கள் இன்று மக்கள் இயக்கத் தொண்டர்கள்... என்ன வித்தியாசத்தை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்?''
''தோரணம் கட்டுறது, போஸ்டர் ஒட்டுறதுன்னு என் படம் ரிலீஸாகும்போது சந்தோஷப்பட்டுக்கிறவங்க என் ரசிகர்கள். அப்பவே நான் அவங்க கிட்ட ஒரே ஒரு விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருப்பேன். 'முதல்ல உங்க அம்மா, அப்பா, குடும்பத்தைக் கவனிங்க. உங்க வேலையைக் கவனமா செய்யுங்க. ரசிகர் மன்றப் பணிகளை அப்புறம் நேரம் இருக்குறப்ப பார்த்துக்கலாம்’னு கட்டாயப் படுத்திட்டே இருப்பேன். அவங்க எப்பவும் 'ரசிகன்’னு ஒரு அடையாளத் தோடு, அதே நிலைமையில் தேங்கிடணும் என்பதில் எனக்கு எப்பவும் உடன்பாடு இல்லை.இப்போ எங்க ரசிகர் மன்றம், 'மக்கள் இயக்க’மாக ஒரு வடிவம் எடுத்துருச்சு. இப்போ எந்தச் சின்ன காரியத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் யோசிச்சு தான் செயல்படுறாங்க. ஊருக்கு ஒரு பிரச்னைன்னா, அதுக்குக் குரல் கொடுக்க முன்னாடி நிக்கிறாங்க. அந்த அளவுக்கு அவங்க பார்வை விரிவு அடைஞ்சு இருக்கு. என் ரசிகர்கள் அவங்களை அறியாமல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துட்டு இருக்காங்க. அதை ரொம்ப சீக்கிரமே அவர்களும் உணர்வார்கள்!''

ஏ.எஸ்.நடராஜ், சிதம்பரம். ''நடிப்பில் உங்களுக்குப் போட்டி யார்?'' ''மக்கள் மனசைச் சந்தோஷப் படுத்தி, ஓஹோன்னு ஓடி ஜெயிக்கிற ஒவ்வொரு படமும் எனக்குப் போட்டி தாங்ணா. ஆனா, இது ஆரோக்கியமான போட்டி!'' ஜி.குப்புசாமி, சங்கராபுரம். ''மனம்விட்டு அழுத சம்பவம்?'' எனக்கு அழுகை பிடிக்காது. அதுவும் அழுறவங்களைப் பிடிக்கவே பிடிக்காது. என்னோட லைஃப்ல ஒரே ஒரு முறைதான் அழுதேன். அது என் அன்புத் தங்கச்சி வித்யா, சின்ன வயதில் இறந்தப்போ!'' ஆ.பாஸ்கரன், விழுப்புரம். ''விழுந்து விழுந்து சிரிக்கவெச்ச சினிமா?'' ''இப்போ, 'பாஸ் (எ) பாஸ்கரன்’. சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாச்சு. 'அவனவன் பத்துப் பதினஞ்சு ஃப்ரெண்டுகளை வெச்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கான். ஆனா, ஒரே ஒரு ஃப்ரெண்டை வெச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே... அய்யய்யய்யய்யோவ்’னு சந்தானம் புலம்புற டயலாக்கை ரசிச்சுப் பார்த்தேன்!'' டி.மணிபாலா, ஆரணி. ''நீங்கள் முதல்வரானால், கையெழுத்துப் போடும் முதல் உத்தரவு?'' ''இதுபோல எடக்கு மடக்காக் கேள்வி கேட்கிற வங்களுக்கு, ஆறு மாசம் ஜெயில் என்கிற உத்தரவில் கையெழுத்துப் போடுவேன்!''
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
ஜெம்முலு பிப்புலு, பெரியகுளம்.
''நேரில் சீரியஸ்... திரையில் மட்டும் காமெடிக் காட்சிகளில் அசத்துறீங்களே... எப்படிங்ணா?''
''எப்பவுமே காமெடின்னா ரொம்பப் பிடிக்கும். ஜாலியா, கலகலன்னு பேசுற கேரக்டர்களை ரொம்ப ரசிப்பேன். நான் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் எப்பவுமே என்னைச் சுத்தி ஜாலியாப் பேசுற நண்பர்கள் கூடவே இருக்காங்க. நண்பர்களோடு மனம்விட்டுப் பேசிச் சிரிச்சா, மனசுல இருக்குற பாரம் எல்லாம் அப்பிடியே ஐஸ் கட்டி மாதிரி கரைஞ்சு லேசாகிடும். என்னை மாதிரியே மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்காகத் தான் என்னோட படத்தில் காமெடி ஸீன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 'வேலாயுதம்’ பாருங்க... விளையாடி இருக்கோம்!''
ஆர்.செந்தில்குமார், சென்னை.
''வில்லன் வேஷத்தில் விஜய்யைப் பார்க்க ஆசை?''
''ஏற்கெனவே 'பிரியமுடன்’ படம் நடிச்சேனே? அந்தப் படத்தைப் பார்த்த எங்க அம்மா 'இனிமேல் இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’னு சொன்னாங்க. அதுக்கு அப்புறமும் நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் தேடி வந்துச்சு. அம்மாவோட அன்புக்காக நடிக்காமத் தவிர்த்துட்டேன். ஆனாலும் செந்தில்... நீங்க ஆசைப்படுற மாதிரி எனக்கும், வில்லன் வேஷத்து மேல ஆசை இருக்கு!''
மரியாசேகர், சேலம்.
''அவுட்டோர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது என்ன செய்வீர்கள்?''
''கிராமங்களுக்கு கார்ல போறப்ப, வழியில் இருக்கும் பாலங்கள், அணைக்கட்டுகள், ஏரி, குளம்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் பார்த்துக் கிட்டே போவேன். மனசுக்குப் பிடிச்ச இடத்தில் இறங்கி நின்னா... ஆசையா ஓடி வர்ற மக்களிடம் பேசுறது வழக்கம். அப்போ, 'இந்தப் பாலத்தை காமராஜர் கட்டினார்... காமராஜர் இல்லேன்னா, இந்த அணைக்கட்டு வந்து இருக்காது’னு அவரை வாயார, மனசார வாழ்த்துவாங்க. இன்னிக்கு இருக்குற மாதிரி ஹைடெக் வளர்ச்சி அப்போ கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில, விவசாயத்துக்காக அய்யா காமராஜர் செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்தால்... ஆச்சர்யமா இருக்கும். எல்லோரும் பாராட்டுற மாதிரி காமராஜர்... ஒரு கர்ம வீரர் மட்டும் இல்லே... விவசாய விஞ்ஞானியும்தான்!''
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
''உங்க மானசீக குரு யார்?''
''என்னோட அப்பா!''
ச.சத்தியநாராயணன், அயன்புரம். ''நடிப்பில் பொறாமைப்படவைக்கும் நடிகர்கள் யார்... யார்?''
''உலக நாயகன் கமல் சார்தான்!''
த.சத்தியநாராயணன், சென்னை.
'' 'காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?''
''எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நான், 'மக்கள் இயக்கம்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அப்போ இருந்தே எங்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு சமூக நற்பணிகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டப்போ, அதுக்கு மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தோம். மீன் பிடிக்கப்போன தமிழர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்றதைக் கண்டிச்சு நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இது மாதிரி எத்தனையோ விஷயங்களை சமூக அக்கறையோட செய்திருக்கோம். எவ்வளவோ உதவிகளை, நல்ல விஷயங்களை தமிழ்நாடு முழுக்கச் செய்துட்டே தான் இருக்கோம். இதுல சுயநல அரசியல் எங்கே இருக்குங்க? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுற மாதிரிதான், சில பேர் 'காவலன்’ பட ரிலீஸ் பிரச்னையையும் அம்மாவை நான் ஆதரிச்சதையும் சம்பந்தப்படுத்திப் பேசுறாங்க!''

பி.கீர்த்தனா, காரைப்பட்டி. ''வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?''''
'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’னு ஊர் உலகமே சொல்ற புரட்சித் தலைவரைப் பார்த்து!''
அ.யாழினி பர்வதம், சென்னை.
''அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?''
''வெற்றி முகத்தோடு இருக்காங்க. சிரிச்ச முகத்தோடு பேசினாங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும்கிற வேட்கை அந்த வேங்கையின் முகத்தில் தெரிஞ்சது!''
சு.சங்கர், போத்தனூர்.
''உங்களுக்கு பைக் ரைடிங் பிடிக்குமா? ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பைக்கை எடுத்துக்கொண்டு எங்கே செல்வீர்கள்?''
''ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நான் பைக் பைத்தியம். நான் வேகமா பைக் ஓட்டுவேன்னு பயந்து, அப்பா காரில்தான் காலேஜுக்கு அனுப்புவார். இப்போகூட சிட்டிக்குள் ஷூட்டிங்னா, ஹெல்மெட் மாட்டிக் கிட்டு பைக்லயே கிளம்பிப் போயிருவேன். அப்பப்போ, ஈ.சி.ஆர். ரோட்டில் கடற்கரைக் காற்று வாங்குறதுக்காக பைக் ரைடிங் போவேன். மக்கள் மனநிலையை அறிவதற்காக, ஹெல்மெட் மாட்டிக்கொண்டு மார்க்கெட், தியேட்டர், பஸ் ஸ்டாப்களில் பைக்கில் சுற்றி வந்திருக்கேன்!''
ஜி.குப்புசாமி, விழுப்புரம்.
''வெளிநாட்டில் நீங்கள் அடிக்கடி செல்லும் இடம் எது... ஏன்?''
''லண்டன். அது ஏன் என்பது உங்களுக்கே தெரியுமே!''
கே.மணிபாலா, ஆரணி.
''முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது எது? டாக்டர் கலைஞரிடம் பிடித்தது எது?''
''முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!''
ஆர்.வினோத்குமார், சென்னை.
''சினிமா, அரசியல் தவிர உங்களுக்கு ஆர்வமான வேறு துறை எது?''
''கிரிக்கெட்!''

வை.ஆ.சுரேஷ், துறையூர்.
''உங்களோடு போட்டோ எடுக்க ஆசை ஆசையா நிறையப் பேர் வருவாங்க. இவரோடு போட்டோ எடுத்துக்கவில்லையேனு நீங்க ஆசைப்பட்ட யாராச்சும் உண்டா?''
''கருணை உள்ளத்தால்... சமூக சேவையால்... உலகையே தன்வசம் ஈர்த்தவர் அன்னை தெரசா. அவங்க பக்கத்தில் நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை!''
கே.சுகுணா, மதுரை.
''உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?''
''வள்ளலார் சொன்ன 'விழித்திரு, தனித்திரு, பசித்திரு!''
எஸ்.சிவஞானம், செய்யாறு.
''சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதுபற்றி..?''
''நிறுத்திவைக்கப்படவில்லை. மேலும் செழுமையாக்குவதற்காகத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது!''
ச.குமார், வந்தவாசி.
''கல்லூரி படிக்கும்போது காதல் வந்திருக்கா? அதை எங்ககிட்ட சொல்ல முடியுமாங்ணா..?''
''காதல் உண்டுங்ணா. ஆனா, இப்போதைக்குச் சொல்ல முடியாதுங்ணா!''
எஸ்.நாராயணன், சென்னை.
''எவ்வளவு கடினமான நடன அசைவுகளாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அனாயாசமாக ஆடிவிடுகிறீர்களே, அதன் ரகசியம் என்ன விஜய்?''
''இதில் ரகசியம் எதுவும் இல்லை. உங்கள் வெளிப்படையான கைத்தட்டல்தான் காரணம்!''

பாரதி, சேலம்.
''நீங்கள் நெடுநாளாகச் சந்திக்க விரும்பும் நபர் யார்?''
''சேலம் பாரதி, உங்களைத் தான்!''
எம்.சங்கர், திருச்சி.
''தியேட்டரில் வந்து படம் பார்த்து இருக்கிறீர்களா? சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?''
''அடிக்கடி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பேன். சமீபத்தில் 'கோ’ படம் பார்த்தேன். தியேட்டருக்கு நான் வருவதும் தெரியாது... போவதும் தெரியாது!''
துரை சுப்ரமணியம், திருச்சி.
''தளபதியே, கடந்த தேர்தலில் நீங்கள் ஏன் வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய வரவில்லை? அறிக்கைகூடத் தரவில்லையே?''
''நான் வேறு... என் மக்கள் இயக்கம் வேறு இல்லை. நான் என் மனசில் என்ன நினைச்சேனோ... அதைத்தான் என் அப்பா பிரசாரம் செய்தார். என்னோட மக்கள் இயக்கத் தொண்டர்களும் என் எண்ணத்தைப் புரிஞ்சுக் கிட்டு செயல்பட்டாங்க!''
ஆ.செந்தில்குமார், காஞ்சிபுரம்.
''ஒருவரின் பலம், பலவீனம் என்ன?''
''பலவீனத்தைப் புரிந்துகொண்டால் பலம். பலத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் பலவீனம்!''\
க.சிவாஜி மூக்கையா, தர்க்கால்.
'' 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கு’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, அவங்களைச் செயல்பட விடுறது இல்லையே?''
''அது உண்மைதாங்ணா. இளைஞர்களை உற்சாகப்படுத்தச் சொல்றதோட சரி... பெரும்பாலான குடும்பங்களில் தனக்கு ஆர்வம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க இளைஞர்களுக்குப் பெற்றோர்களே தடையா இருக்காங்க. 'இதில்தான் ஃப்யூச்சர் இருக்கு’ன்னு பெத்தவங்க தங்களோட விருப்பத்தைப் பிள்ளைங்க மேல திணிக்கிறாங்க. இதனால பிடிக்காத துறையைப் படிக்கிற இளைஞர்களால் எதிர்காலத்தில் பிரகாசிக்க முடியாமப் போயிடுது. இளைஞர்கள் தங்களோட எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கிற மாதிரி பெத்தவங்க வழிவிடணும். அப்போதுதான் 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்கிற வாசகம் நடைமுறையில் வரும். சரிங்களா?''
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.''ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு யார் காரணம்? ஹீரோவா, டைரக்டரா?''
''படத்தின் கதை, இயக்குநர் இரண்டு விஷயங்கள்தான்!''
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.''சினிமாவில் உங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?''
''சினிமாவில் நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு ஒரு பட்டியல் எழுதினா, அன்னிலேர்ந்து இன்னிக்கு வரை என்கூடவே இருக்கும் காலேஜ் நண்பர்கள்தான் பாஸ்!''
சு.சங்கர், போத்தனூர்.''கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?''
''மனைவி மட்டும் அல்ல... ரசிகர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். அவங்களை வெறுமனே சினிமாவுக்கு பேனர் கட்டும் ரசிகர்களாக இல்லாமல், மக்கள் இயக்கத் தொண்டர்களாக மாற்றி இருக்கேன். அவங்களை இன்னும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அவங்களுக்கு சமுதாயத்தில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கணும். நாலு பேருக்கு நல்லது செஞ்சா, நமக்கான மரியாதை தானே கிடைக்கும். அதுதான் என்னோட அடுத்த இலக்கு!''
அ.பிரபாகரன், சேலம்.''சாதிகள் ஒழியாதா?''
''சாதியை மையமாவெச்சு அரசியல் நடத்தினவங்களுக்கு, இந்தத் தேர்தல்ல மக்கள் மரண அடி கொடுத்து இருக்காங்க. சாதி நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைச்சுட்டுப் போயிடும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுடும். மக்கள் விரும்பறது 'சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதியாரின் வரிகளைத்தான்!''
- விகடன் டீம்