கட்டுரைகள்
சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் பொக்கிஷம்: மாலினி முதல் புன்னகை வரை - ஜெமினி கணேஷ்

ஜெமினி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெமினி கணேஷ்

06.01.1972 ஆனந்த விகடன் இதழில்

‘என்னுடைய எதிர்காலம் என்ன?’

இந்தக் கேள்வி நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாளிலேயே எனக்குள் ஏற்பட்டது. படிப்பு முடிந்து கிறித்துவக் கல்லூரியில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றியபொழுதும் இந்தக் கேள்விதான்.

என் தாயாரும் மற்றவர்களும் நான் ஒரு கலெக்டராக அல்லது ஒரு பெரிய அரசாங்க அதிகாரியாக வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் என்னுடைய ஆசை அதுவல்ல. காரணம் அந்த வாழ்க்கை எல்லாமே இயந்திர வாழ்க்கை. இதுதான் நமக்கு வேலை இவ்வளவுதான் நமக்கு முன்னேற்றம் என்று முன்கூட்டியே நமக்குத் தெரிந்துவிடும்.

நான் விரும்பியது வேறு. எந்த வேலை பார்த்தாலும் அதில் இன்னும் எப்படி மேலே போவது என்கிற முடிவு தெரியாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை ருசிக்கும். அதற்கு எந்தத் தொழில் செய்தால் நல்லது? பைலட் ஆகலாமா? டாக்டர் வேலை? ஆசிரியர் தொழில்? என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதில் சேரலாமா என்ற எண்ணம்.

படே குலாம் அலிகான் கச்சேரியைக் கேட்டால் நாம் அது மாதிரி ஆக முடியாதா? டாக்டர் ரங்காச்சாரி பற்றி யாராவது புகழ்ந்து பேசினால் நாமும் அவரைப்போல் வந்தால் என்ன? கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைப் பார்த்தால் கிரிக்கெட்டியராகக்கூட வரலாம் போலிருக்கிறதே... இப்படி உள்ளத்தில் ஆசைகள் அலைமோதும். ஆனால் ஒரு மனிதனால் இவ்வளவு பேராக ஆக முடியுமா? முடியும். அதற்கு ஒரே வழி நடிகனாவதுதான்.

இன்றைக்கு டாக்டராக நடிக்கலாம். அந்த நடிப்பு முடிக்கிற வரையிலாவது டாக்டர் என்ற உணர்வோடு வாழ முடியும். அடுத்த நாள் என்ஜினியர் வேடம். மூன்றாம் நாள் வக்கீல் அல்லது ஜட்ஜ். அதற்கு அடுத்த நாள் ஒரு தோட்டி அல்லது ஒரு கூலியாள். இப்படி வாழ்க்கையில் தினந்தோறும் வெவ்வேறு உணர்வுகளோடு, உருவத்தோடு வாழ்வதற்கு நடிகன் ஒருவனால் தானே முடியும். அப்படியானால் நாமும் ஏன் நடிகனாகக் கூடாது? இந்த எண்ணம்தான் என்னை நடிகன் ஆக்கியது.

விகடன் பொக்கிஷம்: மாலினி
முதல் புன்னகை வரை - ஜெமினி கணேஷ்

இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன, நான் நடிகனாக வந்து. கால் நூற்றாண்டு ‘மிஸ் மாலினி’ யிலிருந்து ‘புன்னகை’ வரை எத்தனையோ படங்கள். ஏதேதோ வேஷங்கள். இவைதான் நான் சினிமாத்துறையில் கண்ட பயனா? பிரமாதமாக நான் எதை சாதித்துவிட்டேன்?

ரசிகர்களின் ஆதரவோடும், அபிமானத்தோடும் ஒரு நடிகன் இருபத்தைந்து ஆண்டுகள் நடித்துக் கொண்டிருப்பதே பெரிய சாதனைதான். நான் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக நூறாவது நாள் என்றும் 25 வாரம் என்றும் ஓடியிருக்கின்றனவே, அது பெரிய சாதனை இல்லையா?

விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் ரன்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்பது கிரிக்கெட் பழமொழி. அதுபோல் நானும் இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேனே. அது சாதனைதானே! பெருமைக்காகச் சொல்லவில்லை. நல்ல ரசிகர்கள் என்னை நல்ல நடிகன் என்று பாராட்டுகிறார்கள். என் தாயார் ஆசைப்பட்டதுபோல் நான் கலெக்டராகியிருந்தால், மாதத்திற்கு மூவாயிரமோ நாலாயிரமோதான் சம்பாதிப்பேன். ஆனால் இப்போது அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன். கார், பங்களா, புகழ் இவை எல்லாம் இருக்கின்றன. இந்த மனத் திருப்தி எனக்கு நிறைய உண்டு.

ஒருமுறை இந்தி நடிகர் அசோக் குமாரிடம் கேட்டேன்:

“ ஏன் தாத்தா, திரை உலகில் நீங்கள் இவ்வளவு காலமாக நிலைத்து இருக்கும் ரகசியம் என்ன?’’

“இயற்கையாக நடி. ஓவர் ஆக்ட் பண்ணாதே! எந்த வேஷத்தையும் அலட்சியப்படுத்தாமல் ஏற்றுக்கொள். மற்றவர்களுக்கு நீ ஒரு வாய்ப்போ, வசதியோ கொடுக்க முடியாமல்போனாலும், அதைக் கெடுக்காதே” என்று அவர் புத்திமதி கூறினார்.

ஆரம்பத்திலிருந்தே என் திரைப்பட வாழ்க்கை இப்படித்தான் இருந்துவந்திருக்கிறது. ஏதோ எனக்குத் தெரிந்தவரை இயற்கையாக நடிப்பேன். எந்த வேஷத்தையும் அலட்சியப்படுத்தியதில்லை. மற்றவர்கள் முன்னேற்றத்துக்குக் குறுக்கே நின்றதில்லை. ‘ஏதோ ஐயா, பாவம் வருவார்; தன் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்’ என்றுதான் பொதுவாக என்னைப் பற்றிச் சொல்வார்கள்.

காரணம் நான் என்னைப் பற்றி எப்போதுமே உயர்வாக நினைத்துக்கொண்டது இல்லை. எனக்கு கஷ்டம் வந்தால் என்னுடைய கவனக் குறைவு என்று நினைப்பேன். நல்லது நடந்தால் ஆண்டவன் அருள். ஏதோ பைத்தியக்காரன் பாவம் நன்றாக இருக்கட்டும் என்று கடவுள் கருணை காட்டியிருக்கிறார் என்றுதான் நம்புவேன்.

எனக்குள்ள வசதி, புகழ் இவற்றில் எனக்கு மனத்திருப்தி உண்டு. ஆனால் ஒரு விஷயத்தில் நான் பேராசைக்காரன். சுயநலவாதி. மற்றவர்கள் என்மீது அதிகமான அன்பும் பரிவும் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். ஆம். அந்த இரண்டும் எனக்கு நிறைய தேவை.

சினிமாவிலிருந்து நான் எப்பொழுது ரிட்டயர் ஆகப்போகிறேன்? அந்தப் பிரச்சினைக்கே இடமில்லை. எனக்கென்று இருக்கும் ரசிகர்களும், என்னை வைத்துப் படம் எடுக்க விரும்பும் டைரக்டர்களும் பட முதலாளிகளும் என்னுடன் நடிக்க ஆசைப்படும் கலைஞர்களும் இருக்கும் வரையில் நான் நடித்துக்கொண்டுதான் இருப்பேன்.

இடையில் படங்கள் குறைந்தாலும் பரவாயில்லை. படங்களே இல்லாமல் போனாலும் கவலை இல்லை. நன்றாக நடித்து நல்ல பெயர் வாங்கியும்கூட அசோக்குமாருக்கு சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தனவே, அதை நினைத்து மனதை ஊக்கப்படுத்திக் கொள்வேன். சினிமாத் துறையில் உள்ள இளைஞர்களுக்கும் இத்தகைய ஊக்கம் வர வேண்டும். இந்த உணர்ச்சிதான் என்னை 25 ஆண்டுகள் நடிகனாக வைத்திருப்பதோடு, இன்னும் அப்படியே என் கடைசி நாள் வரை இருக்கச் செய்யும்.

ஆ! கடைசி நாள் என்றதும் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“எனக்கு மிக நல்ல பாத்திரம் ஒன்று கிடைத்து அதனுடைய கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த செட்டிலேயே என் உயிர் பிரிந்துவிட வேண்டும். அடுத்த ஜென்மத்தில் நான் மீண்டும் ஒரு நடிகனாக வரவேண்டும்!”

இதுதான் என் ஆசை!

விகடன் பொக்கிஷம் தொகுப்பு: ரவி பிரகாஷ்