Published:Updated:

விகடன் பொக்கிஷம்: கொழுத்த மீனுக்காக காத்திருக்கிறேன்

விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்

12.03.2000 ஆனந்த விகடன் இதழில்

விகடன் பொக்கிஷம்: கொழுத்த மீனுக்காக காத்திருக்கிறேன்

12.03.2000 ஆனந்த விகடன் இதழில்

Published:Updated:
விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் பொக்கிஷம்

``நான் காலேஜ் படிச்சிட்டிருந்த சமயம்... எங்க பக்கத்து வீட்டுலதான் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இருந்தார். ராத்திரி நேரங்கள்ல காத்து வாங்கலாமேனு வாசல்ல வந்து நின்னேன்னா, உதயகுமார் என்னைப் பார்த்து சிரிப்பார். `ஏம்ப்பா... நீ ஏன் நடிக்கக் கூடாது’ம்பார். `எனக்கு இஷ்டம் இல்லை’ம்பேன். `என்ன செய்யப்போறேம்’பார். `துணி ஏற்றுமதி பிசினஸ் பண்ணப் போறேன்’னு சொல்வேன். அவர் சிரிப்பார். சினிமா வாய்ப்புங்கற விஷயம் எனக்குக் கைக்கு எட்டுற தூரத்துல இருந்ததாலோ என்னவோ நான் பிடிவாதமா முடியாதுன்னு மறுத்திட்டிருந்தேன். பிசினஸ் கத்துக்கறதுக்காக நெல்சன் மாணிக்கம் ரோடுல ஒரு கம்பெனியில வெறும் சரவணனா போய்ச் சேர்ந்தேன். நடிகர் சிவகுமார்தான் எங்க அப்பான்னு நான் யார்கிட்டயும் சொல்லலை.

விகடன் பொக்கிஷம்: கொழுத்த மீனுக்காக காத்திருக்கிறேன்

ஒரு மாசம் கழிச்சு கம்பெனியில அவங்களா தெரிஞ்சுட்டு `என்னப்பா ஒரு வார்த்தைகூடச் சொல்லாம பூனை மாதிரி இருந்துட்ட’ன்னு கேட்டாங்க. ஆறு மாசத்துல அங்கே தறிக்கு ஆர்டர் பண்றது, பட்டன் வைக்கிறது, டைமிங் பண்றது, தைக்கிறதுன்னு துணி வியாபாரம் பற்றி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். திடீர்னு ஒரு நாள் தினம் தினம் ஒரே வேலையைப் பண்றோம்னு தோணுச்சு. ஒரு மாற்றம் வேணும்னு நினைச்சேன். அப்போதான் வசந்த் சார் ‘நேருக்கு நேர்’ல நடிக்கக் கூப்பிட்டார். செய்து பார்க்கலாமேன்னு ஒத்துக்கிட்டேன். அப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும் `விஜய் எதிர்த்தாப்ல வருவாரு... முறைக்கணும்... சண்டை போடணும்’னு அவர் சொல்லச் சொல்ல அது மாதிரி செஞ்சிட்டேன். ஆனா `சிம்ரனை மடியில உட்கார வெச்சு நெத்தியில தொடங்கி முத்தம் கொடுத்துட்டே பேசணும்’னு சொன்னதும்தான் நடுங்கிப் போய்ட்டேன். `மத்த விஷயங்கள்லாம் நான் சொல்லிக் கொடுத்திடுவேன். ரொமான்ஸ் நீயேதான் பண்ணணும்’னு சொல்லிட்டாரு. படிச்சது முழுக்க பாய்ஸ் ஸ்கூல். பாய்ஸ் காலேஜ். அம்மாவையும் தங்கையையும் தவிர வேறு எந்தப் பொண்ணு கூடவும் அதிகமா பேசினதுகூட இல்லை. கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது. ரொம்பக் கூச்சமா இருந்தது. திக்கித்திணறி பண்ணிட்டேன். திரையில் பாக்குறப்போ `நல்லாவே பண்ணலை’ன்னு தோணுச்சு.

விகடன் பொக்கிஷம்: கொழுத்த மீனுக்காக காத்திருக்கிறேன்

இதுவரை ஒரு பெரிய பிரேக் கிடைக்கலையேன்னு வருத்தம்தான். ஆனா நான் நிச்சயம் ஜெயிச்சிருவேன்னு என் உள்மனசு சொல்லுது. ஜெயிச்சே ஆகணும்னு ஒரு பெரிய ஆக்ரோஷம் வந்திருக்கு. பொதுவா பெரிய சந்தோஷம், பெரிய துக்கம்னு எதையுமே நான் கண்டுக்கமாட்டேன். ஆனா நடிப்பு விஷயத்தில் என்னால் முடியும்ங்கிற நம்பிக்கையும் பிடிவாதமும் வந்திருக்கு. கொஞ்சம் கொஞ்சமா என்னைத் தகுதிப் படுத்திக்கிட்டிருக்கேன். டான்ஸ், சண்டை கத்துக்கிறேன். ஜிம்முக்குப் போறேன். கூத்துப்பட்டறை கலைஞர்களிடம் நடிப்பு கத்துக்கிறேன். இது எல்லாத்தையும் செய்யச் சொல்லி அப்பா ரொம்ப வருசமா சொல்லிட்டிருக்கிறார். எப்பவுமே நம்ம அப்பாவும் அம்மாவும் ஒரு விஷயத்தைச் சொன்னா `சரிதான் போ’ன்னு சொல்வோம். அதே விஷயத்தை பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னா `சரி’ன்னு ஒப்புக்குவோம். அது மாதிரிதான் அப்பா சொன்னப்போ ‘முடியாது’ன்னு சொல்லிட்டு நாசர் சார் சொல்லி ஒப்புக்கிட்டேன்.

இப்போ நிறைய கத்துட்டு ‘உயிரிலே கலந்தது’ படத்துல பார்த்து பார்த்து பண்ணிட்டிருக்கிறேன். என்னோட கடின உழைப்பு கட்டாயம் ஜெயிக்கும். அதுக்காகத்தான் காத்துட்டு இருக்கிறேன்.

கொழுத்த மீனுக்காக தவமிருக்கிற கொக்கு மாதிரி... என்னோட தவம் முழுக்க வெற்றிங்கிற மீன்மேலதான்” என்றார் சூர்யா.

- செல்லா, தயாமலர்