சினிமா
Published:Updated:

விவேக் 1961 - 2021: Wake... Wake... விவேக்!

விவேக்
பிரீமியம் ஸ்டோரி
News
விவேக்

5.10.2003 ஆனந்த விகடன் இதழில்...

“ இனிமே ஹீரோக்களைத் தொட்டு நடிக்கமாட்டேன், நைட்டீஸ் போட்டு நடிக்கமாட்டேன் - இதைச் சொன்னது யாரு? ஜோவா, சிம்ரனா, இல்லை கிரணா? அட... நம்ம இளமைப்புயல்... சுள்ளிக்காட்டு சூறாவளி... அதாங்க பரவை முனியம்மா போட்ட கண்டிஷன் இது! “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் பரவைக்குத்தான் கரெக்டா பொருந்துது! அறுபது வயசுக்கு மேல ஆண்டவன் அட்டகாசமா அனுக்ரகம் பண்றான். சந்தோஷமா இருக்கு,

ஆனால், மரங்களுக்கு நீர் பாய்ச்சும் இறைவன் ஏன் மலர்களைக் கருக்குகிறான்? பசுக்களுக்கு அமுதம்... ஆனால், சிசுக்களுக்கு விஷமா?

கடந்த 22.9.03 அன்னிக்கு சென்னை அப்போலோ கான்சர் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். என்னோடு சினேகாவும் வந்திருந்தாங்க. அன்னிக்கு ரோஸ் டே! அதாவது ரோஜாக்களின் தினம்.

உடனே என்னையும் சினேகாவையும் இணைச்சு துணுக்கு மண்ணுச்சாமி, கிசுகிசு சீதா, வைர சிதறல்னு யாரையாவது வுட்டு எதையாவது கன்னாபின்னான்னு எழுத வெச்சுடாதீங்க. மேட்டர் என்னன்னா அன்னிக்கு உலகப் புற்றுநோய் தினம்! அதைத்தான் நாசூக்காக ‘ரோஸ் டே’ன்னு கடைப்பிடிக்கிறாங்க.

உள்ளே நுழைந்த எங்களை ஒரு ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. வரைஞ்சது யாருன்னு கேட்டதும் அதைவிட அழகான அசையும் ஓவியங்களைக் காட்டினாங்க. ஆம்... குழந்தைகள்!

அத்தனையும் கான்சரின் கோரப்பிடியில் சிக்குண்டு கிடக்கும் சின்னச் சின்ன முத்துக்கள். புன்னகைக்கும் புத்துக்கள்.

அடிவயிற்றிலிருந்து சோகம் கிளம்பி தொண்டையை அடைச்சுது. குழந்தைகளுக்கு ரோஸ் கொடுக்கச் சொன்னாங்க. கிஃப்ட் கொடுக்கச் சொன்னாங்க. பிரஸ் வந்திருந்தாங்க. பேசச் சொன்னாங்க. என்கிட்டே ஒரு வீக்னஸ். ஒழுங்கா பேசத் தெரியாது. பேச ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாது. ஆனால், வாழ்க்கையில் முதன்முறையா வார்த்தை வராமல் தவிச்சேன். கண் அழுதா வாய் பேசிடும். மனசு அழுதா..?

‘Ignorance is bliss’னு சொல்வாங்க. அதாவது அறியாமை இறைவனின் அருள்கொடை. கோழைகள் தினமும் இறக்கிறார்கள். வீரன் ஒருமுறைதான் மரணத்தைத் தழுவுகிறான். ஆனால், விஷயம் தெரியாத இந்தப் பிஞ்சுகளோ விளிம்பில் நின்று விளையாடுகிறார்கள். இவர்கள் பயப்படத் தெரியாதவர்கள். இவர்கள் தெரிந்துகொண்டுவிடுவார்களோ என்று நமக்கு பயமாக இருக்கிறது.

விவேக் 1961 - 2021: Wake... Wake... விவேக்!

ஐந்து மாடிகளிலும் சிகிச்சை பெறும் குழந்தைகளை தரிசிக்க விருப்பம் தெரிவித்தேன். ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற ஒரு சிறுவன் கார் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனுடைய ஒரே கேள்வி - “என்னை ஏன் வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்கிறாங்க?” ஒன்றரை வயதுச் சிறுமி ஒருத்தி கழுத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறாள். விரல் தொட்டால் சிரிக்கிறாள். அவள் அம்மா அழுதபடியே இருப்பது ஏனென்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஒரு பெங்காலி சிறுமிக்கு தான் சென்னைக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை. அவளது பெற்றோருக்கு எப்போது கொல்கத்தா போவோம் என்பது தெரியவில்லை.

இன்னொருவர் தலைப் புற்றுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு கோமாவில் ஆழ்ந்து மீண்டிருக்கிறார். ஞாபகசக்தி முழுமையாகத் திரும்பவில்லை. அவருக்காக நர்ஸ்களும் டாக்டர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் என்னைப் பார்த்துவிட்டு ‘விவேக்’ என்றார், எல்லோரும் கைதட்டினார்கள். அவரது மனைவி கண்ணில் ஆனந்தக் கண்ணீர்!

தொண்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டதால் பேச முடியாமல் இருந்த ஒரு நோயாளி பேப்பரில், ‘பல்லாண்டு வாழ்சு’ என்று எழுதி என்னை வாழ்த்தினார். கடந்த பதினாறு ஆண்டுகளில் நான் வாங்கியதில் முதன்மையான விருது, என்னைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் தோன்றிய புன்னகைதான்! (இந்தச் சந்திப்புக்குக் காரணமாயிருந்த மாலா மணியனுக்கு நன்றி!)

கனத்த மனசுடன் கிளம்பிவரும்போது ஒரு சிறுவன் சொன்னான் “அங்கிள்... நெக்ஸ்ட் டைம் நீங்க வரும்போது நான் உங்களுக்கு சாக்லேட் வாங்கி வெச்சிருக்கேன்!”

நெக்ஸ் டைம்?

அது நனவாகும் நிச்சயம்!