Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயம் ரவி

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

Published:Updated:
ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயம் ரவி

‘‘அண்ணன் உங்கள ஸ்பாட்டுல திட்டுவாரா, இல்ல, தம்பியை பத்திரமா பார்த்துக்குவாரா?’’ - சுதர்சன் காந்தி

‘‘நல்லாவே திட்டுவாரு. ஆனா, மனசு நோகாத மாதிரி எடுப்பார். உதாரணமா, 25 டேக் எடுப்பார். நமக்கு அதோட கஷ்டம் தெரியும். ‘இன்னும் ஒண்ணு... ப்ளீஸ், கமான்... பெட்டர், பெட்டர்’னு போயிட்டே இருப்பார். ஆனா, முதல் டேக்ல நடிச்சதைத்தான் பயன்படுத்துவார். ‘எவ்ளோதான் எடுத்தாலும் முதல் டேக்கைத்தானே யூஸ் பண்ணப் போறே’ன்னு சொல்வேன். அப்புறம் இதுல ஒண்ணு அதுல ஒண்ணுன்னு பொக்கே மாதிரி கோத்து அழகாக் கொண்டுவந்திடுவார். ரெண்டாவது படம் ‘எம்.குமரன்’ல அம்மா இறக்கற சீன்ல நான் அழுவேன். ஆனா, அந்த அழுகை ரியலிஸ்ட்டிக்கா வரல. எனக்கே அது தெரிஞ்சது. அப்போ அண்ணன் வந்து, ‘உண்மையிலேயே அம்மா செத்துப்போயிட்டா இப்படியாடா இருப்பே?’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஷாக் ஆகி இயல்பாவே அழுதுட்டேன். நம்மள பாதிச்ச சந்தோஷம், சோகம் எல்லாத்தையும் வெளிக்கொண்டு வர்றதுதான் நடிப்புன்னு அப்புறம் புரிஞ்சுக்கிட்டேன்.’’

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

‘‘ ‘சந்தோஷ் சுப்ரமணியம்‘ உங்க வீட்டுல நடந்த கதைன்னு சொன்னீங்க. அந்தப் படத்தைத் தெலுங்கில் பார்த்தப்ப உங்களுக்கு என்ன ஃபீல் ஆச்சு?’’ - சனா

‘‘எனக்கு பெரிய சர்ப்ரைஸ் இல்ல. ஏன்னா, அது என் கேரக்டர் கிடையாது. நான் அப்பாவுக்கு பயப்படமாட்டேன். அண்ணன்தான் பயப்படுவார். மரியாதை கலந்த பயமா, இல்ல, பயம் கலந்த மரியாதையான்னு இன்னைக்கு வரை எனக்குப் புரியலை. எப்பவாவது பண்டிகைன்னா அப்பா காலைத் தொட்டுக் கும்பிடுவேன். பெரிய மரியாதை உண்டு. அதனால அந்தப் படத்தின் முதல் பாதியைப் பார்த்ததும் அண்ணன் டென்ஷன் ஆகிட்டார். ‘என்னடா இப்படிப் பண்ணியிருக்கான். நம்ம வீட்டுக் கதைடா’ன்னு சொன்னார். அண்ணனை சமாதானப்படுத்தினேன். ஆனா, க்ளைமாக்ஸைப் பார்த்துட்டு எங்க அண்ணன் உடைஞ்சிட்டார். அப்படியே போய் பாஸ்கர் அண்ணாவைக் கட்டிப்பிடிச்சிட்டார். ‘இந்த க்ளைமாக்ஸ் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. க்ளைமாக்ஸ் மட்டும் தப்பா இருந்திருந்தா நான் ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன்’ன்னார். அதுக்கு பாஸ்கர் அண்ணா, ‘இந்தக் கதையோட க்ளைமாக்ஸை எழுதின பிறகுதான் கதையையே ஆரம்பிச்சேன்’னார். அதனால எந்த ஒரு கசப்பான அனுபவமும் கிடையாது. அது ஒரு அழகான, எப்போவும் என்னால மறக்க முடியாத படம்.’’

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

‘‘சமூகத்தின்மீது கோபப்படும் இளைஞராகப் பல படங்களில் நடிச்சிருக்கீங்க. நிஜத்தில் அப்படிக் கோபம் வந்திருக்கா? எந்தச் சூழல்களில்?’’ - கே.ஜி.கார்த்தி

‘‘கோபம்னு சொல்றதைவிட வருத்தம்தான் நிறைய இருக்கு. கோபப்பட்டா முதல்ல என் மேலதான் கோபப்படணும். நானும் குப்பையைக் கீழே போட்டிருக்கேன். குப்பைத்தொட்டி இருக்கு. ஆனா, அதுல குப்பையைப் போடணும்ங்கிற மென்டாலிட்டி இல்லை. சிக்னல் இருக்கு. அதுல நிக்கணும்ங்கிற பக்குவம் இல்லை. மற்ற நாடுகளில் நைட் 2 மணிக்கு சிக்னல் விழுந்தால்கூட, ரோடு காலியாக இருந்தாலும் நின்னு அப்புறம்தான் போறாங்க. நாம அப்படி இருக்கோமா? நானும் தப்பு பண்ணியிருக்கேன். அதுக்கு வருத்தப்படுறேன். இதெல்லாம் சரியாகணும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு. அடுத்த தலைமுறைக்கு அதை சரியா சொல்லிக் கொடுப்போம் அப்படிங்கறதுதான். அவங்க சரியாகிட்டாங்கன்னா எல்லாமே சரியாயிடும். நாம பண்ணின தப்பை அடுத்த தலைமுறை பண்ணாமல் அவங்களை பாசிட்டிவாக் கணும்கிறதுதான் என் ஆசை.''

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

`` ‘ஜெயம்' ரவிக்கும் ‘பொன்னியின் செல்வன்' ரவிக்குமான பயணத்துல உங்களுக்குள்ள நடந்திருக்கிற மாற்றங்கள் பத்திச் சொல்லுங்க?’’ - சரண்

‘‘18 வருஷத்துடைய சாரம்சத்தைக் கேட்கிறீங்க. ரொம்ப அழகான பயணமா இருக்கு. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத விஷயம். நான் பாக்கியசாலின்னு நினைக்கிறேன். எனக்குக் கிடைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய கிஃப்ட் அப்படிங்கிறதைப் புரிஞ்சுக்காமல் இருந்தேன். அதனால, கொஞ்சம் அசால்ட்டா சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சேன். சிலருக்கு திடீர்னு கரியர்ல சரிவு வர்றதைப் பார்க்கும்போது, எனக்குள்ள பயம் வந்தது. என்னதான் சினிமாவுக்கு வந்துட்டாலும் மக்கள் ஏத்துக்கிட்டாலும் தோல்வியும் பயமும் எப்போ வேணாலும் யாருக்கு வேணாலும் வரலாம்னு புரிஞ்சுது. ‘ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரி பாரு. நமக்குத் தெரிஞ்சிடுச்சுன்னு நினைக்காதே. அப்போதான் வளர முடியும்'னு அப்பா அடிக்கடி சொல்லுவார். அதைக் கடைப்பிடிச்சேன். ஒரு கட்டத்துல என்னடா, ஒரே மாதிரி பண்ணிட்டு இருக்கோமேன்னு தோணுச்சு. அப்போதான், ‘பேராண்மை'. ‘பூலோகம்', ‘ரோமியோ ஜூலியட்', ‘டிக் டிக் டிக்', ‘மிருதன்'னு வெரைட்டியா பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம், சமூகம் சார்ந்த படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். எந்த ரூட் எடுத்தாலும் போகிற இடம் ஒண்ணுதான். நல்ல படங்கள் பண்ணணும்; நேர்மையா வேலை செய்யணும் அவ்வளவுதான். இந்தப் பயணத்தை ரொம்ப ரசிச்சு வேலை செய்யறேன். 18 வருஷத்துல 25 படங்கள்தான் பண்ணியிருக்கேன். குறைவுதான். நல்ல படங்களா பண்ண நினைக்கிறேன்.’’

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

`` `பொன்னியின் செல்வன்' செட்லயே நீங்கதான் ரொம்ப அழகா இருந்தீங்கன்னு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். உங்க பார்வையில யார் ரொம்ப அழகா இருந்தாங்க அந்தத் தோற்றத்துல?’’ -- சுதர்சன் காந்தி

‘‘ரவியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவர் ஃப்ரேம்ல எல்லோரும் ரொம்ப அழகாதான் இருப்பாங்க. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி வெச்சிருக்கார். உண்மையாவே அவர் ரவிவர்மன்தான். அவர் அப்படிச் சொல்லியிருக்கார்னா ரொம்ப சந்தோஷம். நான் ஐஸ்வர்யா ராயின் பெரிய ரசிகன். அவங்க உலக அழகி பட்டம் வாங்கும்போது டி.வி-யில பார்த்தேன். சின்ன வயசில இருந்தே அவங்களைப் பிடிக்கும். அவங்களை ஷூட்டிங் ஸ்பாட்ல பார்க்கிறதுக்கான சந்தர்ப்பமே அமையலை. அவங்களைச் சந்திக்கக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னப்பவும் வேண்டாம்னு மறுத்துட்டேன். ‘அவங்க என்னைப் பார்க்கும் போது, நான் அந்த ராஜா வேஷத்துல வரணும். எப்போ நடக்குதோ நடக்கும்’னு சொல்லிட்டேன். அப்படியொரு நாள் வந்தது. நான் நினைச்ச மாதிரியே அவங்க எதிர்ல வரும்போது நான் அந்தக் கேரக்டர்ல இருந்தேன். நான் அவங்ககிட்ட பேசலாம்னு போனா, அவங்க என்கிட்ட ‘what a character you are playing!'னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. இந்தப் படத்துல மட்டுமல்ல, எப்போவும் அவங்க அவ்வளவு அழகு!’’

`` `ஆதிபகவன்' ரொம்ப மெனக்கெட்டு நடிச்ச படம். அதனுடைய தோல்வி உங்களை பாதிச்சதா?’’ - மோனிகா

‘‘எனக்கு வருத்தம் இல்ல. என் வேலையை ஒழுங்காக செஞ்சேன். அதேமாதிரி, ஒரு படம் ஓடினாலும் ஓடாமப்போனாலும் அப்போவே மறந்துருவேன். அப்பதான் அடுத்த வேலை செய்ய முடியும். வெற்றிதான் மிகப்பெரிய சுமை. அதைத் தூக்கிட்டு நடந்தா நகரவே முடியாது. அதேமாதிரி தோல்வி மிகப்பெரிய லாக். அதுல சிக்கிட்டா வெளிய வரவே முடியாது. அதனால, அது ரெண்டையும் ரிலீஸ் அன்னைக்கே தூக்கி எறிஞ்சுருவேன். ரிலீஸ் வரைக்கும் படம் என்னுடையது. உழைப்பேன், கஷ்டப்படுவேன். ரிலீஸ் அன்னைக்கு ஆடியன்ஸுடையது. கொண்டாடுறதும் விட்டுட்டுப் போறதும் அவங்க முடிவு. ‘ஆதிபகவன்' எல்லாப் படமும் மாதிரிதான் கஷ்டப்பட்டேன். அந்தப் படத்துக்குப் பிறகு மூணு வருஷம் படம் இல்லாம இருந்தேன். ஆனா, அடுத்து மூணு படம் ஹிட் கொடுத்தேன். தோல்வின்னு உட்கார்ந்திருந்திருந்தா மூணு வெற்றி கொடுத்திருக்க முடியாது. வேலையை ஒழுங்கா செஞ்சிட்டு, அன்னைக்கே அதை மறந்திருங்க. அதுதான் பெஸ்ட்.’’

விகடன் பிரஸ்மீட்: “ஐஸ்வர்யா ராய் ஆச்சரியத்தோட ஒரு விஷயம் சொன்னாங்க!” - ஜெயம் ரவி

``உங்கள் படங்கள் பார்த்துட்டு, உங்க மேல உரிமை எடுத்துக்கிட்டு அடிக்கடி போன் பண்ணிப் பாராட்டுற, திட்டுற செலிபிரிட்டி யார்?’’ - அரவிந்த்ராஜ்

‘‘பிரபுதேவா சார்தான். உரிமையா, `என்ன ரவி, இப்படிப் பண்ணியிருக்கீங்க’ன்னு கேட்பார். அவரே, செலிபிரிட்டின்னு நினைக்க மாட்டார். ‘ரோமியோ ஜூலியட் படத்துல டான்ஸ் பண்ணியிருந்தீங்க, கேரக்டரோட இருந்து இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம்’னு சொல்லுவார். ‘இந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி நல்லால்ல. நல்லா பூஸ்ட் பண்ணுங்க’ன்னு சொல்லுவார். மனசார வாழ்த்தக்கூடியவர். ‘சார், என்னைப் பேச விடுங்க சார்’னு கெஞ்சணும். படபடன்னு பாராட்டித் தள்ளிட்டு போனை வெச்சிருவார். நான் பேச நினைக்குறத சொல்லவே விட மாட்டார். அரவிந்த்சாமி சாரும் அப்படிதான். உரிமையா சொல்லுவார். ‘வெயிட் மெயின்டெயின் பண்ணு, டயட் பாலோ பண்ணு’ன்னு சொல்லுவார். ஜெயராம் சார் ரொம்ப க்ளோஸ். என் குருசாமி மாதிரி. என் வளர்ச்சில அதிக அக்கறை எடுத்துக்குவார். அன்பால் வழிநடத்துவார். அண்ணன் மாதிரின்னு சொல்லுவார். ‘பொன்னியின் செல்வன் லுக்ல எப்படியிருந்த தெரியுமா ரவி!’ன்னு சொன்னார். மனைவி ஆர்த்திக்கு போன் பண்ணி, ‘அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடு’ன்னு சொன்னார்.’’

``2003-க்குப் போய் அப்போது இருந்த ரவிக்கு அட்வைஸ் சொல்லணும்னா, ஒரு சீனியரா என்ன சொல்வீங்க?’’ - மெளரீஷ்

‘‘ஒரே ஒரு யுனிவர்சல் அட்வைஸ்தான். ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.' இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்ல. எல்லாம் அதுவா நடக்கும்.’’