Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

ரகசியம் சொன்ன விகடன் பிரஸ்மீட் - விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

ரகசியம் சொன்ன விகடன் பிரஸ்மீட் - விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

Published:Updated:
கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

ஆக்‌ஷன், எமோஷன், ஹ்யூமர், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டிக் கலக்குவது நடிகர் கார்த்தியின் ஸ்டைல். பருத்திவீரனாக நமக்கு அறிமுகமாகி, இப்போது விருமனாக, வந்தியத்தேவனாக அவதாரம் எடுத்திருக்கிறார். விகடன் பிரஸ் மீட் நிகழ்வுக்கு அழைத்ததும் உடனே ஓகே சொல்லி, நம் கேள்வி மாரத்தானை அசால்டாக எதிர்கொண்டார். அனைத்திற்கும் செம ஜாலியாக அவர் ஸ்டைலிலேயே பதில்கள் கிடைத்தன. அவற்றின் அணிவகுப்பு இங்கே..!

`` `விருமன்' எந்த மாதிரி அனுபவத்தைக் கொடுத்தது? கொம்பையா பாண்டியனுக்கும் விருமனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’’ - சுதர்சன் காந்தி

‘‘ ‘கடைக்குட்டி சிங்கம்' வெளியானதும் தியேட்டர்காரங்க நிறைய பேர் என்கிட்ட பேசினாங்க. ‘இந்தப் படம் வந்த பிறகுதான் கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பமா மறுபடியும் தியேட்டருக்கு வந்திருக்காங்க. ‘கடைக்குட்டி சிங்கம்' மட்டும் வராமலிருந்தால் தியேட்டர்களை நாங்க மூடியிருப்போம் சார்'ன்னாங்க. நானும் கிராமத்துப் படம் நடிக்கலாம்கிற மைண்ட்செட்ல இருக்கும்போதுதான் முத்தையா சார் இந்தக் கதையைச் சொன்னார். ‘அப்பாவுக்கும் பையனுக்கும் ஆகாது... அப்பாவாக பிரகாஷ்ராஜ் சாரை யோசிச்சிருக்கேன்'னு அவர் சொன்னது பிடிச்சிருந்தது. எனக்கும் கிராமங்கள் ரொம்பப் பிடிக்கும். என் பள்ளி நாள்களின் பெரும்பகுதி கிராமத்துலதான். நான் எட்டாவது படிக்கும் போதே, மதியம் டிரெயின்ல போயிடுவேன். எனக்கு முதல் வகுப்புல பயணிக்கறது பிடிக்காது. ராத்திரி முழுக்க டிரெயின் படிக்கட்டுல உட்கார்ந்துட்டு வேடிக்கை பார்த்துட்டே போறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். ஊருக்குப் போனால், அங்கே அப்புச்சி இருப்பார். மாட்டுக்குத் தீவனம் வைப்பார். நானும் அவருடன் மாடு, ஆடுகளைப் பராமரிப்பேன். கன்னுக்குட்டிகளுக்குப் பெயர் வைப்பேன். அவரோடு நிறைய நேரம் செலவிட்டதுல, கிராமம் ரொம்பப் பிடிச்சிடுச்சு. முதல் படம் ‘பருத்தி வீரன்' கிராமத்துக் கதை என்பதால, கிராமம் மனசுக்கு இன்னும் நெருக்கமாகிடுச்சு. இதுல சில நன்மைகளும் இருக்கு. நடிக்க ரெடியாகும்போது தலை சீவுறது, கண்ணாடி பார்க்கறதுன்னு எதுவும் தேவையில்ல. ‘விருமன்' மறுபடியும் ரகளையா இருக்கு. அப்பனை ஒருத்தன் அடிச்சான்னா, அவனுக்கு மோதிரம் போடுற கேரக்டர்தான் விருமன். அதிலும் எதிரே பிரகாஷ்ராஜ் சார் இருக்கும்போது அவரைச் சீண்டிப் பார்க்கறது ஜாலியாகத்தான் இருக்கு.''

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

``இயக்குநர் ஆகணும்னுதான் சினிமாவுக்குள் வந்தீங்க. முதன்முதலில் நடிப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?’’
- சனா

‘‘நான் இன்ஜீனியரிங் படிச்சேன். எதுக்காக படிக்கறோம்னே தெரியாமல் படிச்சு முடிச்சேன். இங்கே கார்மென்ட்ஸ் கம்பெனியில வொர்க் பண்ணியிருக்கேன். வாரத்துல ஆறு நாள் வேலை. நாலாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். ஆனா, என்னோடு படிச்சவங்க பலரும் வெளிநாடு போயிட்டாங்க. அந்த நேரத்துல ‘நாம இப்படியே இருந்தா, எங்கே போகப்போறோமோ’ன்னு வாழ்க்கை பத்தி பயம் வந்திடுச்சு. வாழ்க்கையில மேல வர்றதுக்காக யோசிச்சு, எம்.எஸ் படிக்கத் தீர்மானிச்சேன். வெளிநாடு போய்ப் படிச்சேன். கிராஜுவேஷன் முடிச்சு ஒரு வருஷம் அங்கே இருக்க வேண்டியிருந்தது. நான் அமெரிக்காவில் இருந்தபோது என் பல்கலைக்கழகத்துல பிலிம் ஸ்கூல் இருந்துச்சு. ஒரு வருஷம் அங்கே படிச்சேன். அந்த ஸ்கூல்ல நிறைய படங்கள் பார்த்தேன். ‘சிட்டிசன் கேன்'னு ஒரு படம் பார்த்தேன். அதோட பாதிப்புல ஒரு வாரம் தூங்காம இருந்தேன். ஒரு இயக்குநர்தான் எல்லாத்தையும் உருவாக்குறார்னு உணர்ந்தேன். டைரக்‌ஷன் கத்துக்கணும்னு முடிவோடுதான் இந்தியா வந்தேன். சினிமாவுல சக்சஸ் ரேட் ரொம்பவே குறைவுனால, நான் சினிமாவைத் தேர்ந்தெடுத்ததும் எங்க அம்மா ரொம்பவே பயந்தாங்க. உதவி இயக்குநரா மணி சார்கிட்ட சேர்ந்தேன். நடிக்க வாய்ப்பு வந்தபோது, ‘நடிக்கப் போறேன் சார். அது வொர்க் அவுட் ஆகலைனா மறுபடியும் உங்ககிட்டேயே வந்துடுவேன்'னு சொல்லிட்டுத்தான் ‘பருத்திவீரன்' படத்துக்குப் போனேன்.''

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

``டில்லியும் ரோலக்ஸும் எப்போ நேருக்கு நேர் சந்திச்சுக்குவாங்கன்னு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு நீங்கதான் தொடக்கமும்கூட. `கைதி 2’-க்குத் தயாரா இருக்கீங்களா?’’ - கிருஷ்ணா

``இதை லோகேஷ்கிட்டதான் கேட்கணும். `கைதி 2’ எப்படி லோகேஷ் டிசைன் பண்ணியிருக்கார்னு தெரியல. இன்னும் டிஸ்கஷன் ஆரம்பிக்கல. அண்ணன் ரோலக்ஸ் கேரக்டர் பண்றதுதான் ஆச்சரியமா சர்ப்ரைஸா இருந்தது. ரோலக்ஸ் கெட்டப்புக்குப் பிறகு இவருடைய ஸ்டைல்ல எல்லாம் மாறிருச்சு. சில படங்கள்ல கேமியோ பண்றப்போ அண்ணன் எப்படி இப்படி முடிவு எடுக்குறார்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். திடீர்னு முடிவு எடுத்தார். `கைதி 2’ கதை எழுத ஆரம்பிச்சிட்டேன்னு லோகேஷ் சொன்னார். அவர்கூட படம் பண்ணுறது நல்ல அனுபவம். நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கும்.’’

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

`` ‘பருத்தி வீரன்'ல நீங்க பண்ணின ஹோம் வொர்க்ல சிலது சொல்லலாமே?’’ - கிருஷ்ணா

‘‘கிராமத்து லைஃப்பைத் தெரிஞ்சுக்கணும்னு வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்' படிச்சேன். பாரதிராஜா சார் படம் பார்த்த ஃபீல் இருக்கும். அப்புறம் ‘16 வயதினிலே' படம் தினமும் பார்ப்பேன். அந்தப் படப்பிடிப்பு நடக்கற காலங்கள்ல பேன்ட் அணியறதில்ல. இங்கிலீஷ் பாடல்கள் கேட்க மாட்டேன். முடிஞ்சவரை அந்த கிராமத்து மூடுல இருப்பேன். படத்துல என் டயலாக் மட்டுமல்லாமல் அத்தனை பேரின் டயலாக்கும் என் மைண்ட்ல ஓடிட்டே இருக்கும். முடிஞ்ச வரைக்கும் நான் கதையை விட்டு வெளியே எங்கும் போகாமல் அதே மனநிலையோடு இருந்தேன். அந்தப் படம் என்னை ரொம்ப பாதிச்சது. க்ளைமாக்ஸ் எடுத்து முடிச்சும்கூட மூணு மாசம் அதுக்காக அழுதுக்கிட்டே இருந்தேன். படுத்தால் கண்ணுல தண்ணி வந்துக்கிட்டே இருக்கும். நிறைய நடிகர்கள் சில கேரக்டர்கள் செய்து முடிச்சிட்டு, அதுல இருந்து மீள முடியாமல் மனநல மருத்துவர்கள்கிட்ட போய் ஆலோசனை கேட்டிருக்காங்கன்னு அப்புறம்தான் கேள்விப்பட்டேன். அவ்ளோ நாள் ஒரு கதாபாத்திரத்தோடு வாழும்போது அப்படி ஆகும்.''

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

``பா.இரஞ்சித், லோகேஷ், ஹெச். வினோத்னு உங்களை வெச்சு ரெண்டாவது படம் பண்ற இயக்குநர்களுடைய கிராஃப் எங்கேயோ போயிடுதே! இதை கவனிச்சிருக்கீங்களா ?’’
- தமிழ்ச்செல்வன்

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க ஒவ்வொருவரும் கொடுத்த கதை எனக்கு ரொம்பப் புதுசா இருந்தது. ‘மெட்ராஸ்' ஸ்கிரிப்ட் படிக்கும்போது எனக்கு நாவல் மாதிரி இருந்தது. ஒரு கேரக்டரைப் பத்திச் சொல்லிட்டுதான், அந்தக் கேரக்டரை அறிமுகப்படுத்தியிருப்பார் இரஞ்சித். ஸ்கிரிப்ட்ல எப்படி அந்த கேரக்டர்கள் இருப்பாங்களோ, படத்திலயும் அப்படிதான் இருப்பாங்க. ஆடிஷன் வெச்சுத் தேடி ஒரு மாசம் வொர்க் ஷாப் பண்ணிதான் ஷூட்டிங் போனார். ஒரு சுவரை வெச்சுக் கதை எழுத முடியுமான்னு ஆச்சரியமா இருந்தது. ஒரு செருப்பை வெச்சு ஈரானியப் படம் வந்தால் பாராட்டுறோம். நம்ம ஊர்ல அப்படியொரு கதை வந்தாலும் பாராட்டணும்ல? அந்தக் கதை ஒன்றரை வருஷமா யாரும் நடிக்காமல் சுத்திக்கிட்டே இருந்திருக்கு. ‘இந்த ஸ்கிரிப்ட்டைப் படிச்சுப் பாருங்க’ன்னுதான் என்கிட்ட கொடுத்தாங்க. எனக்குன்னு கொடுக்கலை. நானா என்னைக் கொண்டு போய் அதுல புகுத்திக்கிட்டேன். அது 18 வயசுப் பையன் நடிக்க வேண்டிய கேரக்டர். எனக்காக சில விஷயங்களை மாத்தி, என்னை அதுக்குள்ள சேர்த்துக்கிட்டேன். வினோத், லோகேஷ், சுசீந்திரன், முத்தையா சார்னு எல்லோர் கூடவும் அப்படித்தான். அவங்க கதை ரொம்பப் பிடிச்சுதான் அந்தந்தப் படங்கள் பண்ணினேன். அந்தப் படங்களும் நல்ல படமா வந்தன. அது அவங்களுடைய உழைப்பு. அவங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிறேன்.’’

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

``தொடர்ந்து கிராமத்து ரோல் பண்றது எப்படி இருக்கு?’’
- அரவிந்த்ராஜ்

‘‘கிராமம், நகரத்தைத் தவிர வேற என்ன ரோல் இருக்குது? விண்வெளி இருக்கு. அதுக்கு நாம இன்னும் வரல. கிராமத்து ரோல்கள்ல மெனக்கெடத் தேவையில்ல. ஆனா, நகரத்து ரோல்கள்னா ஃபிட்டா இருக்கணும். ஸ்டைலிங்ல இருந்து லுக் வரைக்கும் எல்லாம் சரியா இருக்கணும். ‘பையா', ‘தேவ்' ரெண்டு படம் தவிர, வேற சிட்டி படங்கள் நான் பண்ணல. சிட்டிங்கற போது அது நாம வாழ்ந்த வாழ்க்கை. ஆனா, கிராமத்து ரோல்னா, தஞ்சாவூர், மதுரைன்னு இடத்துக்கு இடம் மாத்திக்கணும். ஏன்னா, மேனரிசங்கள்ல குட்டிக் குட்டியா வித்தியாசங்கள் இருக்கு.''

``வந்தியத்தேவன்... ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் படைப்பைத் தோளில் சுமக்கிற மாதிரியான கேரக்டர். அப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கப்போகிறோம் என்றதும் உங்கள் மனதில் தோன்றியது என்ன ?’’ - மௌரீஷ்

‘‘சோழர் வரலாறு பற்றி நிறைய படிச்சேன். அரசர்களோட வாழ்க்கை வரலாற்றுல இருக்கு, அந்தக் காலத்துல மக்கள் எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகப் படிச்சேன். ‘பொன்னியின் செல்வன்’ படிச்சவங்ககிட்ட பேசினேன். அதைப் படிச்சவங்க பலருக்கும் எதற்காக வந்தியத்தேவன் கேரக்டர் பிடிச்சதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். குந்தவையும் வந்தியத்தேவனும் மீட் பண்றது குறைவு. இருந்தும், ரெண்டு பேருக்கும் எப்படி பிடிச்சுப் போயிடுச்சுன்னு என் ப்ரெண்டோட மனைவி கிட்ட கேட்டேன். ‘ரெண்டு பேருக்கும் சோழ தேசம்தான் முக்கியம்’னு பதில் சொன்னாங்க. சரியா இருந்தது. இப்படி ஒவ்வொருத்தரின் கண்ணோட்டத்திலிருந்தும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், ஷூட்டிங் ஸ்பாட்ல மணி சார் நமக்குத் தேவையான மீட்டர் செட் பண்ணுவார். ஒரு சீன் ஷூட் பண்ணப் போறப்போ, அந்தக் காட்சி புத்தகத்துல எப்படியிருக்கும்னு படிச்சிட்டுப் போவேன். செட்டில் மணி சார்கிட்ட சந்தேகம் கேட்டா, ‘புத்தகம் படிச்சியா’ன்னு கேட்பார். ஏன்னா, நாவலுக்கும் திரைக்கதைக்கும் வித்தியாசம் இருக்கும் இல்லையா? ரெண்டும் வேற பார்மெட். இருந்தாலும் என்னுடைய புரிதலுக்காக படிச்சிக்கிட்டுப் போவேன்.’’

- அடுத்த வாரம்...

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - ‘ரோலக்ஸ்’ சூர்யா - ‘டில்லி’ கார்த்தி எப்போது சந்திப்பார்கள்?

* ‘ஆய்த எழுத்து’ல சூர்யாவோட தம்பி ரோலுக்கு ஆடிஷனுக்கு வரச் சொல்லி மணிரத்னம் ஆபீஸ்ல இருந்து போன் வந்ததாமே?

* பயோபிக் நடிக்கணும்னு ஆசை இருக்குதா... யாரோட பயோபிக்ல நடிக்கணும்னு விரும்புறீங்க?

* நீங்க ‘பருத்தி வீரன்’ல நடிக்க வர்றதுக்கு முன்னாடி உங்கள வேற யாரும் நடிக்க அணுகினதுண்டா?

* உங்களோட வொர்க் பண்ணின ஹீரோயின்கள்ல செம ஃப்ரெண்ட்லின்னு யாரைச் சொல்வீங்க? அதே போல, உங்க மனைவி ரஞ்சனியும் எந்த ஹீரோயினும் நெருக்கம்?