
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.
``ஸ்கிரிப்ட்ல இல்லாமல், ஸ்பாட்டுக்குப் போன இடத்துல உள்ள மக்களை கவனிச்சுப் பண்ணின விஷயங்கள் இருந்தா சொல்லுங்களேன்?’’ - சுதர்சன் காந்தி
‘‘எங்கே போனாலும் டீக்கடை மக்களை ரொம்ப கவனிப்பேன். ஏன்னா, காலையில ஒவ்வொரு டீக்கடையிலும் பல பேர் ஒவ்வொரு தினுசா உட்கார்ந்திருப்பாங்க. அங்கே நிறைய பேர்களோட வாழ்க்கையைப் பார்க்க முடியும். அதுல இருந்து ஒண்ணைப் பிடிச்சாலே போதும். சிலர் கெத்தா பின்னாடி கைகட்டிக்கிட்டே உட்கார்ந்திருப்பாங்க. அதை ‘பருத்திவீரன்'ல செய்திருப்பேன்.
காலையில ஷூட் போற டைம்ல நிறைய பார்ப்பேன். அதைப் போல டாஸ்மாக்ல உட்கார்ந்திருக்கற கோஷ்டி, ரயில் பயணிகள்னு இவங்களைக் கவனிக்கப் பிடிக்கும். ஆனா, இப்ப ரயில்ல போக முடியல. முத்தையா சார் டீக்கடையில வேலை செய்தவர் என்பதால அவர் அவ்ளோ கேரக்டர்ஸ் வச்சிருக்கார். எல்லாமே அவர் பார்த்த விஷயங்கள். வடிவேல் சார் எத்தனையோ வெரைட்டி பார்த்திருக்கார். ஸ்கூல் போறப்ப பஸ்லதான் போனேன். செயின்ட் பீட்ஸ்ல படிக்கறப்ப பக்கத்துல உள்ள ஹவுசிங் போர்டுல பார்த்த இளைஞர்களின் மேனரிசங்களைத்தான் ‘மெட்ராஸ்'ல கொண்டு வந்தேன். அதுல இரஞ்சித்தோட மேனரிசங்களை நிறைய எடுத்துக்கிட்டேன். அவர் நல்லா நடிப்பார்.''

``நீங்களும் சந்தானமும் சேர்ந்து நிறைய ஹிட் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் சந்தானத்துக்குமான நட்பு பத்தி?’’ - நிவேதா
‘‘நாங்க பேசும்போது ‘ஓய்'னுதான் கூப்பிட்டுப்போம். சந்தானம் அம்மாவுக்கு என் படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஃபேமிலியா படம் பார்த்துட்டு, படம் நல்லா இருந்தால் என்னைக் கூப்பிட்டுப் பேசுவாங்க. ‘சிறுத்தை'யில் ஆரம்பிச்சு நிறைய படங்கள் பண்ணியிருக்கோம். ‘சிறுத்தை 2' பண்ணணும்னு அப்ப நிறைய பேசிட்டிருந்தோம். ‘Rush Hour' படம் ரெண்டு பேருக்கும் பிடிக்கும்.''

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க யாரோட ரசிகர்... அவர் படம் பார்த்த தியேட்டர் மொமன்ட் ஒண்ணு?’’ - துளசிதரன்
‘‘ரஜினி சார் படங்கள் பார்த்துதான் தியேட்டர்கள்ல என்ஜாய் பண்ணியிருக்கேன். என்னோட நாலஞ்சு வயசில இருந்து ரஜினி சார் பாட்டு ‘மைநேம் இஸ் பில்லா' எப்போ டி.வி-யில வந்தாலும், நான் உடனே டிரெஸ்ஸை மாத்திட்டு அவரை மாதிரி ஆடுவேன்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. முதல்நாள் முதல் ஷோ பார்த்தது ‘தளபதி.' ஆனா, ‘பாட்ஷா' ரொம்பப் பிடிக்கும். திருப்பூர்ல படம் பார்த்தேன். நூறு ஆட்டோக்கள்ல அந்த பிலிம் ரோல்களை எடுத்துட்டு ஊர்வலமா வந்தாங்க. இதுல ஆச்சர்யம், ரெண்டு தியேட்டர்கள்ல படம் ஓடுச்சு. ஆனா, ஒரு பெட்டிதான் இருந்துச்சு. முதல் ரீலை ஒரு தியேட்டர்ல போட்டதும் அந்த ரீலை அடுத்த தியேட்டருக்குக் கொண்டு போய்க் கொடுத்திடுவாங்க. தீபாவளி வேற. தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். படம் முழுவதும் சீட்டு மேல நின்னுக்கிட்டுதான் பார்த்தேன். செம எக்ஸ்பீரியன்ஸ்.''

``அமலா மேல உங்களுக்கு பயங்கர க்ரஷ்ஷாமே!’’ - சுதர்சன் காந்தி
‘‘அமலா மேம் சான்ஸே இல்லை. அவங்க வேற லெவல். அவங்க டான்ஸ், நடிப்புல அவ்ளோ அழகு இருக்கும். முக பாவனைகளுக்காகவே பார்த்துட்டே இருக்கலாம். டிடி-யுடைய ஷோவுல ‘அமலா மேம்தான் என் பால்ய வயது க்ரஷ்’னு சொல்லியிருந்தேன். ‘தோழா' பட பூஜையின்போது, அமலா மேம் என்கிட்ட ‘நான் பார்த்தேன்'னு சொன்னாங்க. எனக்கு என்ன சொன்னாங்கன்னு புரியலை. ‘டிடி ஷோவுல நீங்க சொன்னதைப் பார்த்தேன்'னு சொன்னாங்க. பகீர்னு ஆகிடுச்சு. நாகார்ஜுனா சார் வேற பக்கத்துல இருக்கார். அந்த இடத்தை விட்டு உடனே எஸ்கேப்பாகிட்டேன்.’’

`` ‘பொன்னியின் செல்வ'னுக்கு அப்புறம் ஜெயம் ரவியும் நீங்களும் ரொம்ப நெருக்கமாகிட்டீங்கன்னு அவர் சொன்னார். உங்க இருவரின் நட்பு பற்றி?’’ - அருந்ததி
‘‘இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன்தான் ரவி எனக்கு. தாய்லாந்துல ‘பொன்னியின் செல்வன்' முதல் நாள் ஷூட்ல பார்க்கும்போது, அவ்வளவு அழகா இருந்தான். ‘சத்தியமா செம அழகா இருக்க மச்சி. சுத்திப்போடணும்டா'ன்னு சொன்னேன். சின்ன வயசுல இருந்தே எனக்கும் ரவிக்கும் பழக்கம் இருந்தாலும், இந்த ஷூட்லதான் நிறைய பேசிக்கிட்டோம். ‘அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்கீங்க'ன்னு மணிரத்னம் கேட்பார். எனக்கு ஷூட் இல்லாமல் ரவிக்கு இருந்தால், நானும் ஸ்பாட்டுக்குப் போயிடுவேன். அதே மாதிரி என் ஷூட் டிங்குக்கு ரவி வந்திடு வான். நானும் அசிஸ்டென்டா இருந்திருக்கேன். அவனும் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்திருக்காங்கிறதால டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் பேசுவோம்.’’

``ஏன் அறிமுக இயக்குநர்களுக்கு நீங்கள் அதிகம் வாய்ப்பு தருவதில்லை?’’ - தமிழ்ச்செல்வன்
‘‘ ‘சகுனி', `தேவ்'னு ரெண்டு படங்கள்ல அறிமுக இயக்குநர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். என் அனுபவத்துக்கு ஒரு படமாவது பண்ணியிருந்த இயக்குநர்னா, எனக்கு அவங்களோட உரையாட ஈஸியா இருக்கும்னு தோணுது. முழுக்க முழுக்க ஃப்ரஷ்ஷா இருக்கும்போது, என் படத்துக்கு இருக்கிற எதிர்பார்ப்புக்கு என்னால அவங்களோடு எந்த அளவு ஒர்க் பண்ண முடியும்னு தெரியலை.’’
``சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணின்னு தொடர்ச்சியா நான்கு படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கலை. அப்போ உங்க மனநிலை என்ன?’’ - சீனிவாசன்
‘‘ரொம்ப கஷ்டமா இருந்தது. மொத்தமா தோல்வின்னு சொல்ல மாட்டேன். ‘சகுனி’ படம் பார்த்துட்டு நிறைய பேர் இப்போ போன் பண்ணிப் பாராட்டுவாங்க. அப்போ சரியா போகல. எல்லாரும் ‘சிறுத்தை’ மாதிரி இருக்கும்னு நினைச்சுட்டு வந்துட்டாங்க. தோல்விதான் நாம யாருன்னு புரிய வைக்கும். நம்முடைய வலிமை, எதை நோக்கிப் போகணும்னு எல்லாம் தோல்விதான் சொல்லிக் கொடுக்கும். இதுக்குள்ள போயிட்டு வெளியே வர்றப்போ திரும்பவும் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் தைரியம் கிடைக்கும். ‘அழகுராஜா’ படம் இப்போ மீம் கன்டென்ட். இந்தப் படம் எதனால பிடிக்காமப் போயிருச்சுன்னு இப்ப கேக்கறாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் இப்படித் தான்.’’
``உங்களுக்கு வர்ற கதைகளை அப்பாகிட்ட சொல்லிக் கருத்து கேட்கிறதுண்டா ?’’ - சரண்
‘‘அப்படி இதுவரை நடந்ததில்லை. அண்ணனுக்கு ஆரம்பத்துல ரெண்டு படங்களுக்கு மட்டும்தான் அப்பா கதை கேட்டாங்க. அப்புறமா, ‘இல்லப்பா. உங்க தலைமுறைக்கான சினிமா வேற. நீங்க முடிவு பண்ணுங்க. அப்போதான் கத்துக்க முடியும்'னு சொல்லிட்டார். அப்பா நேரடியா எதுவும் கத்துக்கொடுத்ததில்லை. அப்பாவுடைய ஒழுக்கம், நேர்மை, சின்சியாரிட்டி பத்தி அம்மா சொல்லிக் கத்துக் கொடுத்தாங்க. மத்தபடி தலையீடே இருக்காது.’’

``சூர்யா, ஜோதிகா ரெண்டு பேருமே சில கருத்துகளை முன் வைக்கும்போது அரசியல் ரீதியாக நெருக்கடிகள் வந்தது. அப்போ உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’’ - சுகுணா திவாகர்
‘‘அரசியல் ரீதியான நெருக்கடின்னு சொல்ல முடியாது. இன்னைக்கு சோஷியல் மீடியா இருக்கிறதால கருத்துகள் நிறைய வருது. எதிர்மறையான சில கருத்துகள் வரும்போது, சரியாதான் சொல்றாங்கன்னு அண்ணனுக்கு ஆதரவாகவும் நிறைய ஆழமான கருத்துகள் வருதே! ஆரம்பத்துல இதை எப்படி எடுத்துக்கிறதுன்னு நமக்குத் தெரியலை. ட்ரோல் பண்ணும்போதும் திட்டும்போதும், ‘என்ன சம்பந்தமே இல்லாமல் எதுக்குத் திட்டுறாங்க’ன்னு நமக்குப் புரியாமல் இருக்கும். போகப்போக அதுக்கு ரியாக்ட் பண்றதை நிறுத்திக்கிறோம். இல்லைன்னா, நம்மளை பாதிச்சுக்கிட்டே இருக்கும். அதனால, அதையெல்லாம் தவிர்த்திடணும். கருத்துச் சொல்லலைன்னா, ‘பாரு... அவன் சம்பாதிச்சுட்டுப் போயிட்டே இருக்கான். எதுவுமே சொல்லலை'ன்னு சொல்வாங்க. கருத்து சொன்னா, அதுக்கும் விமர்சனம் வரும். அண்ணன் கல்வி தொடர்பான விஷயத்துக்காக மட்டும்தான் பேசுறார். அவருக்கு அதைப் பத்தித் தெரியும். பத்து வருஷத்துக்கு மேல கல்வி சார்ந்து அவர் வொர்க் பண்ணிட்டு இருக்கார். அதனால பேசுறார். நான் EIA பத்திச் சொல்றேன்னா, அதை முழுக்கப் படிச்சு முடிச்சுட்டு தான், அதைப் பற்றிய என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.’’

``நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய நீங்கள், சங்கத் தேர்தல்களில் ஈடுபடக் காரணம் என்ன?’’ - சனா
‘‘நண்பன் விஷால்தான். முதல்ல டிரஸ்ட் எப்படி இயங்கும்னு தெரியல. அசோசியேஷன்னா என்னன்னும் தெரியல. ரெண்டுக்கும் இருக்குற ரூல்ஸ் உட்பட எல்லாம் வேற. பொதுக்குழு எப்படி நடத்தணும்னு தெரிஞ்சிக் கிட்டேன். அரசியல் ரீதியாகவும் நிறைய விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் இந்த அசோசியேஷனுக்குள்ள போயிதான் தெரிஞ்சிக் கிட்டேன். ஆக்சுவலி கூட இருந்து சப்போர்ட் பண்ண ரெடியா இருந்தேன். ஆனா, வெளியே இருந்து சப்போர்ட் பண்ணுனா சரியா இருக்காதுன்னு சொல்லி விஷால்தான் சங்கத் தேர்தலுக்கு இழுத்துக்கிட்டுப் போனார். நடிகர் சங்கத்துக்குப் போனதுக்குப் பிறகு நிறைய உறவுகள் கிடைத்தது. பலருடைய வாழ்க்கைத் தரம் புரிஞ்சது. நம்ம பார்த்து ரசித்த பலரும் எப்படியிருக்காங்கன்னு புரிஞ்சிக்க முடிந்தது. நாசர், கருணாஸ், பூச்சி முருகன், பசுபதி, பொன்வண்ணன் எல்லாம் கூட இருக்காங்க. ஒரே அலைவரிசையில் இருக்காங்க. இந்தக் கட்டடம் முடிஞ்சிருச்சுன்னா பெரிய விஷயம்.
நடிகர் சங்கப் பணிகளில் ஈடுபட முடிவெடுத்தப்போ ‘நல்ல பேர் வாங்கணும்னு நினைச்சு மட்டும் போயிராத'ன்னு அப்பா சொன்னார். பொதுக் காரியம்னு இறங்கிட்டா திட்டு வாங்க வேண்டியிருக்கும்னு சொன்னார். அண்ணா எப்போதும் கூடவே இருந்தார். ரஜினி சாரும் கமல் சாரும் அப்படித்தான். சமீபத்தில் பார்த்தபோதுகூட ‘நடிகர் சங்கக் கட்டடம் எப்போ முடிக்கப் போறீங்க’ன்னு கமல் சார் கேட்டார்.’’
``எந்தக் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கீங்க? அதே சமயம் எந்தக் கேரக்டர்ல நடிக்கும்போது செம ஜாலியா இருந்தீங்க?’’ - அதியமான்
‘‘ரொம்ப ஜாலியா பண்ணுன கேரக்டர் ‘தோழா.' எல்லாக் காட்சியும் என்ஜாய் பண்ணினேன். என் தங்கச்சி பொண்ணு, ‘என்னுடைய எக்ஸ்பிரஷனைத்தானே காப்பி அடிச்சீங்க’ன்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கும். மிலிட்டரி கேம்ப் போயிட்டு எல்லாம் கவனித்து ‘காற்று வெளியிடை' பண்ணினேன். வந்தியத்தேவன் கேரக்டரும் ரொம்ப சவாலா இருந்தது.’’
`` ‘நான் மகான் அல்ல' படத்தில் சின்ன ரோலில் விஜய் சேதுபதி உங்க ஃப்ரெண்டா நடிச்சிருப்பார். அப்ப அவரைக் கவனிச்சீங்களா? அவரோட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?’’ - வெங்கட்
‘‘அந்தப் படத்தில் நடிச்சப்போ ‘தென்மேற்குப் பருவக்காற்று' படத்துல அவர் நடிச்சிட்டிருந்தார். பெருசா அவர்கிட்ட அப்போ பேசினதில்ல. இப்போ, அவருடைய பேச்சு, வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற விதம் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி போன்ல பேசுவேன். கீழே இருந்து வந்த ஒருத்தரால சாதிக்க முடியும்னு நிரூபிச்சிருக்கார். பலருக்கும் அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். அவரும் என் படம் பார்த்துட்டு, கூப்பிட்டுப் பேசுவார்.’’

`` `சர்தார்'ல போலீஸ் ரோல்ல நடிக்கிறீங்க. ரத்னவேல் பாண்டியன், தீரன் கதாபாத்திரம் மாதிரி ‘சர்தார்'ல என்ன ஸ்பெஷலா இருக்கும் ?’’ - அரவிந்த்ராஜ்
‘‘ஏற்கெனவே ரெண்டு போலீஸ் கேரக்டர் பண்ணியாச்சு. அது மாதிரி இருக்கக்கூடாதுன்னு பேசினோம். எடிட்டிங் பார்த்துட்டு வித்தியாசமா இருக்குன்னு மித்ரன் சொன்னார். `சர்தார்' கேரக்டர் பெயர் விஜி. வழக்கமான போலீஸ் கேரக்டரா இல்லாம வித்தியாசமா இருக்கும். அப்பா கேரக்டரும் பண்ணியிருக்கேன்.அதுதான் கஷ்டமா இருந்தது. தினமும் ரெண்டு மணி நேரம் மேக்கப் போடணும். அப்போலாம் கமல் சார் ‘இந்தியன்' படத்தை மனசுல நினைச்சுக்குவேன். அவரது மெனக்கெடல் எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன்.’’
``திரையுலகில் இதுவரை கற்ற பாடம் என்ன? ’’ - நிவேதா
‘‘தப்பு பண்ணாமக் கத்துக்க முடியாது. அப்படிக் கத்துக்கிட்டா அடுத்த முறை அந்தத் தப்பைப் பண்ணக் கூடாது. தவறுகள் செஞ்சது ஒருவகையில நல்லதுதான். அதனால்தான் என்ன மாதிரி படங்கள் பண்ணணும், முடிவுகள் எடுக்கணும்னு தெரிஞ்சது. என்னைச் சந்திக்க நிறைய பேர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. அவங்க ரொம்ப சந்தோஷமா வருவாங்க. ஆனா, என் சூழல் காரணமா அவங்களை வரவேற்க முடியாமப்போயிடும். இந்த மாதிரி சமயத்துல ரொம்பக் கஷ்டமா இருக்கும்.’’