Published:Updated:

``முதல்வர் கமல்ஹாசனின் முதல் நாள்'' - விகடன் பிரஸ்மீட்டில் நடந்தது என்ன?! #VikatanPressMeet #Kamal

கமல்ஹாசனுடனான விகடன் பிரஸ்மீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன் ( Vikatan )

தமிழகத்தில் ஒரு நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பை யாருடன் நிகழ்த்த முடியும்? எல்லாக் கேள்விகளுக்குமே பதிலளிக்கூடிய நபர் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்? அரசியல், சினிமா, சமூகம் என எல்லாவற்றையும்பற்றி பேசக்கூடிய அனுபவம் யாரிடம் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக நம்முன் இருப்பவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுடன் தொடங்கியது விகடன் பிரஸ் மீட்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள ரெய்ன் ட்ரீ ஹோட்டல்தான் பிரஸ்மீட்டுக்கான இடம். 11 மணி முதல் 1 மணி வரை என்பதுதான் கமல்ஹாசன் விகடனுக்கு கொடுத்திருந்த நேரம். ஹோட்டல் ரெய்ன் ட்ரீயில் பிரஸ்மீட் தொடங்கயிருந்த காலையில் சென்னை முழுக்க ரெயின். மழை வந்ததும் வழக்கம்போல வாகன நெரிசலில் தத்தளிக்க ஆரம்பித்தது சென்னை. கிரீன்வேஸ் சாலையிலிருந்து அண்ணாசாலைக்கு கமல் நேரத்துக்குப் புறப்பட்டுவிட்டார். ஆனால் ஹோட்டலுக்குள் வந்து நுழைய 11.30 மணி ஆனது. ``எதிர்பக்கம் நின்னுகிட்டு ஹோட்டலையே கால் மணி நேரமா பாத்துட்டு இருந்தேன்... டிராஃபிக்ல கார் நகரவே இல்லை'' என்றார் கமல்.

முதலில் போட்டோஷூட். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் காபி லவுஞ் போட்டோக்கள் எடுக்கத் தயாராக இருந்தது. நேரு ஜேக்கெட்டில் கமல்... போட்டோகிராபர் ராஜசேகரின் ஃப்ரேமுக்குள் கமல்ஹாசன் பளபளப்பாகிக்கொண்டிருந்தார்.

போட்டோஷூட் முடிந்ததும் தொடங்கியது விகடன் பிரஸ்மீட். முதல் கேள்வி கதாநாயகனாக கமல்ஹாசனின் முதல்நாள் எப்படியிருந்தது என்பதுதான். கதாநாயகனாக அறிமுகமான `உணர்ச்சிகள்' படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதோடு, ஷூட்டிங்கைத் தொடங்கிவைத்த அவரது மிகப்பெரிய ரசிகையைப் பற்றியும் சுவாரஸ்ய செய்திகள் சொன்னார்.

கமல்ஹாசனின் படத்தில் இடம்பெற்று சர்ச்சைக்குள்ளான பாடல் பற்றிய கேள்விவந்தது. நான் மட்டுமல்ல, இந்தப் பாடலுக்குக் காரணமான மூவரின் சார்பிலும் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் கமல்.

``கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்'' என்கிற சிரஞ்சீவியின் அறிவுரைக்கு உங்கள் பதில் என்ன என்கிற கேள்விக்கு நாகேஷுடன் நடந்த சம்பவத்தைச் சொல்லி ஒரு பளிச் பதில் வந்தது.

kamal hassan
kamal hassan
Vikatan / K.Rajasekaran

கூட்டணி அமைக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அந்த ஒன்றை எதிர்பார்க்கிறோம். அது சரியாக அமைந்துவிட்டால் கூட்டணிக்குத் தயார் என்று அறைகூவலும் விடுத்தார்.

``ஒருபக்கம் அமித் ஷா இந்தி மொழித்திணிப்பை முன்னெடுக்கிறார்... இன்னொருபக்கம் மோடி புறநானுறு சொல்வது, குறள் சொல்வது எனத் தமிழை முன்னிலைப்படுத்துகிறார்... இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வேட்டி கட்டியவர் பிரதமராக வர வேண்டும் என்று சொன்ன கமல், ``வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா?"' என்ற கேள்வியோடு மோடி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னார். முதல்வரானால் கமல்ஹாசனின் முதல் நாள் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது.

கேள்விகளுக்கிடையே சில குறும்புகளும் இருந்தன. `தசாவதாரம்' படத்தின் 10 கெட்-அப்கள். ஒவ்வொரு கெட் அப்பிலும் கமல்ஹாசனின் புகழ்பெற்ற வெவ்வேறு வசனங்கள். ``என் கண்ணு வேணும்னு கேட்டியாமே... கொண்டு வர்றவங்களுக்கு 5 லட்சம்னு சொன்னியாமே'' இந்த `வேட்டையாடு விளையாடு' ராகவன் டயலாக்கை கோவிந்த் வாய்ஸில் சொல்ல வேண்டும். ``கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன்... இருந்தா நல்லாயிருக்கும்னுதானே சொல்றேன்'' இது கலிஃபுல்லா கான் வாய்ஸில். ``உனக்குள்ள முழிச்சிக்கிட்டு இருக்கிற அதே மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு'' இந்த வசனம் ரங்கராஜ நம்பிக் குரலில். 10 கமலாகவும் ஆன் தி ஸ்பாட்டில் பேசி அப்ளாஸ் அள்ளினார்.

kamal hassan
kamal hassan

சமீபத்தில் தமிழகத்தில் வைரலான சில புகைப்படங்கள், அந்தப் படங்களுக்கான கமல்ஹாசனின் கமென்ட்டுகள் என களைகட்டியது இன்னொரு செஷன். செல்லூர் ராஜுவின் தெர்மாக்கோல் முதல் சட்டசபையில் கிழிந்த சட்டையோடு கெத்தாக நடந்துவந்த ஸ்டாலின் முதல் பல படங்களுக்கு ஒற்றை வரியில் கமல் `நச்' கமென்ட்டுகள் கொடுத்தார்.

பாபர் மசூதி இடிப்பு விவகாரம் முதல் விஜய் - அஜித் இணைய சண்டைகள் வரை பல கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். விகடன் பிரஸ்மீட்டின் முதல் பகுதி நாளை வெளிவரும் ஆனந்தவிகடனிலும், சினிமா விகடன் யூடியூப் தளத்திலும் வெளியாக இருக்கிறது!

டோன்ட் மிஸ் இட்!

இப்படிக்கு

உங்கள் நாங்கள்!