Published:Updated:

சினிமா விமர்சனம்: மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை & ஜாம்பி

Movie review
Movie review

விவேகானந்தர், அம்பேத்கர், பெரியார், விபூதி, ருத்திராட்சம், 'புதிய திராவிடம்', சார்லி சாப்ளின், சாவித்ரிபாய் பூலே, சாரு நிவேதிதா எனப் படம் முழுக்கத் தொடரும் குழப்பம் பாத்திரங்களுக்கு மட்டுமா, இயக்குநருக்குமா?

'மகாமுனி'

* கொலைத்தொழில் பழகும் ஒருவன், அன்பும் சிவமுமாய் வாழும் ஒருவன்... இவர்கள் இருவரையும் வாழ்க்கை ஏற்றி, இறக்கி, தீண்டி விளையாடும் பரமபத ஆட்டமே இந்த 'மகாமுனி.' திரைவாழ்க்கையில் நினைவு வைத்துக் கொள்ளும்படியான பாத்திரங்கள் ஆர்யாவுக்கு. காத்திருந்ததுபோல மொத்தத் திறமையையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். காதல், பயம், பதற்றம், சோகம், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் தன் கண்களிலேயே கடத்தியிருக்கிறார் இந்துஜா.

மகாமுனி
மகாமுனி

சாந்தகுமாரின் உடலுக்குள் புகுந்து அவரின் கண்களாகவே மாறிக் கதை சொல்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் பத்மநாபன். இயக்குநரின் குரலில் தொடங்கி முடியும் கதைக்கு இவரின் ஒளிப்பதிவு பெரிய பலம். தெளிவாய்த் தொடங்கி முடியும் காட்சிகள் ஒவ்வொன்றும் குறுங்கதைகள். தேர்ந்த எழுத்தாளராய் படம் முழுக்க ஒளிர்கிறார் இயக்குநர். காட்சியமைப்புகளில் கவனம் செலுத்திய சாந்தகுமார் கதாபாத்திர வடிவமைப்பில் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். விவேகானந்தர், அம்பேத்கர், பெரியார், விபூதி, ருத்திராட்சம், 'புதிய திராவிடம்', சார்லி சாப்ளின், சாவித்ரிபாய் பூலே, சாரு நிவேதிதா எனப் படம் முழுக்கத் தொடரும் குழப்பம் பாத்திரங்களுக்கு மட்டுமா, இயக்குநருக்குமா? > விரிவான விமர்சனத்துடன் ஆனந்த விகடன் அளித்த மதிப்பீட்டையும் அறிய > சினிமா விமர்சனம்: மகாமுனி https://cinema.vikatan.com/tamil-cinema/cinema-review-magamuni

சிவப்பு மஞ்சள் பச்சை

* ஸ்ட்ரீட் ரேஸரும் டிராஃபிக் போலீஸும் சந்தர்ப்ப வசத்தில் மாமன் - மச்சான் ஆகி, சண்டக்கோழி யானால் அது 'சிவப்பு மஞ்சள் பச்சை.' கடமை, கண்ணியம், காவல்துறை காவல் அதிகாரியாக சித்தார்த். மிடுக்கான உடல்மொழியும் துடுக்கான பேச்சுமாக ஆச்சர்யப்படுத்துகிறார். அக்காவின் அன்புத் தம்பியாக, அக்காவுக்கு அன்புத்தகப்பனாக, ஸ்ட்ரீட் ரேஸ் ஓட்டும் ரேஸராக ஜி.வி.பிரகாஷ். முதிர்ச்சியில்லாத பதின்பருவத்துக் கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார். கதையின் அச்சாணியான ராஜி பாத்திரத்தில் கொஞ்சமும் பிசிரில்லாமல், பிரமாதமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார் அறிமுக நடிகை லிஜோமோல் ஜோஸ். நல்வரவு!

சிவப்பு மஞ்சள் பச்சை
சிவப்பு மஞ்சள் பச்சை

சசியின் படங்களில் சமூக அக்கறையுடன் சென்டிமென்ட் கலவை இருக்கும். இந்தப் படத்திலும் அதே. முதிரா இளைஞனின் முரட்டுத்தனத்தையும் உறவுகளின் முரண்பாடுகளையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் சசி. ஆனால் சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகிப்போனதில் சீரியல் வாடை அடிக்கிறது. > விரிவான விமர்சனத்துடன் ஆனந்த விகடன் அளித்த மதிப்பீட்டையும் அறிய > சினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை https://cinema.vikatan.com/tamil-cinema/cinema-review-sivappu-manjal-pachai

ஜாம்பி

* வழக்கமாக ஜாம்பி படங்களின் கதை என்னவாக இருக்குமோ, அதேதான் இந்த 'ஜாம்பி' படத்தின் கதையும். பிஸ்டல் ராஜ் எனும் ரௌடி கதாபாத்திரத்தில் யோகிபாபு. அவர் அடிக்கும் சில கவுன்டர்கள் 'குபீர்' ரகம். ஆனால், நடிக்கும்போது வாயில் பபிள்கம்மை மென்றுகொண்டு டப்பிங்கில் ஒப்பேற்றினாற்போல் வசனங்களும் வாயசைவும் ஒட்டவேயில்லை.

காமெடி நடிகர்கள் ஃப்ரேமில் வந்து நின்றாலே அது காமெடிப்படம் என இயக்குநர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வீ பாவம்!

ஜாம்பி
ஜாம்பி

மீம் பேஜ்கள், யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா ஏரியாக்களிலும் டிரெண்ட் ஆனவற்றை வைத்துப் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் புவன் நல்லான். படத்தில் புதுமை எல்லாம் ஒன்றுமில்லை. > விரிவான விமர்சனத்துடன் ஆனந்த விகடன் அளித்த மதிப்பீட்டையும் அறிய > சினிமா விமர்சனம்: ஜாம்பி https://cinema.vikatan.com/tamil-cinema/zombie-movie-reviews

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு