Published:Updated:

பராசக்தி முதல் பரியேறும் பெருமாள் வரை.. `தமிழ் சினிமாவும் அரசியலும்’ சர்வே முடிவுகள்! #VikatanSurvey

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சினிமாவில் இருந்து வந்தவர்களை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுப்பது இங்கு தொடர்கிறது. சினிமா கலைஞர்களும் தொடர்ந்து மக்களுக்கான அரசியலைப் பேசி வருகின்றனர். அதைப்பற்றி, சில நாள்களுக்கு முன், விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்!

சர்வே முடிவுகள்
சர்வே முடிவுகள்

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. 'பராசக்தி' காலம் முதல் தற்போதைய 'பரியேறும் பெருமாள்' காலம் வரையும், அதைத் தாண்டியும், தமிழ் சினிமாவில் அரசியல் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. இயக்குநர்களும், எழுத்தாளர்களும், அரசியலைத் தொடர்ந்து தங்கள் படைப்புகள் வழியாகவும், மக்கள் மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவும் அரசியலும்!
தமிழ் சினிமாவும் அரசியலும்!

இந்த அரசியல் - தமிழ் சினிமா காம்போ பற்றி, சில நாள்களுக்கு முன் விகடன் தளத்தில் பிரத்யேகமாக சர்வே ஒன்றை எடுத்திருந்தோம். அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்குப் பலரும் பதிலளித்திருந்தனர். அந்த சர்வே முடிவுகளைப் பார்ப்போம்...

பிடித்த அரசியல் இயக்குநர்கள்!

பாரதிராஜா, கே.பாலசந்தர், மணிவண்ணன், மணிரத்னம் என முந்தைய தலைமுறை இயக்குநர்கள் முதல் தற்போதைய தலைமுறை அரசியல் இயக்குநர்களான பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், ராஜூ முருகன், லெனின் பாரதி, கோபி நயினார் ஆகியோர்வரை, இந்தக் கேள்விக்கான பதில்களில் கொடுத்திருந்தோம்.

பிடித்த அரசியல் இயக்குநர்கள்!
பிடித்த அரசியல் இயக்குநர்கள்!

இதில் பெரும்பாலானோர் இயக்குநர் மணிவண்ணனைத் தேர்ந்தெடுத்திருந்தனர். மணிவண்ணனுக்கு அடுத்தடுத்த இடங்களில், எஸ்.பி.ஜனநாதன், ஷங்கர், ராஜூமுருகன், பா.இரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருப்பத் தேர்வாகக் கொடுக்கப்படாதவர்களுள், கமல்ஹாசன், செல்வராகவன் ஆகியோரும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

பிடித்த அரசியல் திரைப்படங்கள்!

'வேதம் புதிது', 'தண்ணீர் தண்ணீர்', 'பராசக்தி', 'அமைதிப்படை', 'முதல்வன்', 'ஆயுத எழுத்து', 'பேராண்மை', 'காலா', 'அறம்', 'ஜோக்கர்', 'மேற்குத் தொடர்ச்சி மலை', 'வடசென்னை', 'சர்கார்', 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்கள் விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்பட்டன.

பிடித்த அரசியல் திரைப்படங்கள்!
பிடித்த அரசியல் திரைப்படங்கள்!

எப்படி பிடித்த அரசியல் இயக்குநர்களில் மணிவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதேபோல, அவரின் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான 'அமைதிப்படை' திரைப்படம் முதலிடத்தைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் அடுத்தடுத்து, ஷங்கர் இயக்கிய 'முதல்வன்', ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்', மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' முதலான திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்படாதவற்றுள், 'மெட்ராஸ்', 'எல்.கே.ஜி', 'தனி ஒருவன்', 'புதுப்பேட்டை', 'ரமணா' ஆகிய திரைப்படங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

பிடித்த அரசியல் வசனங்கள்!

'பராசக்தி' படத்தின் இறுதிக் காட்சி வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. துணிச்சலான அரசியல் வசனங்கள் பேசும் திரைப்படங்களுக்கு எப்போதும் மக்களிடம் பாராட்டுகள் கிடைத்து வந்திருக்கின்றன. `வேதம் புதிது', 'அமைதிப்படை', 'இந்தியன்', 'பேராண்மை', 'காலா', 'பரியேறும் பெருமாள்' முதலான படங்கள் விருப்பத் தேர்வாகக் கொடுக்கப்பட்டன.

பிடித்த அரசியல் வசனங்கள்!
பிடித்த அரசியல் வசனங்கள்!

'இந்தியன்' திரைப்படத்தில், 'மத்த நாட்ல எல்லாம் கடமைய மீர்றதுக்குத்தான் லஞ்சம் வாங்கறான். நம்ம நாட்லதான் கடமைய செய்யறதுக்கு லஞ்சம் வாங்கறீங்க!' என்ற வசனம் பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தை எழுதியவர், மறைந்த எழுத்தாளர் சுஜாதா. இதற்கு அடுத்தபடியாக, 'ஜோக்கர்', 'அமைதிப்படை', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பிடித்த அரசியல் பாடல்கள்!

அரசியல் இயக்குநர்கள், திரைப்படங்கள்,வசனங்கள் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில், அரசியல் பேசிய சினிமா பாடல்களில் பிடித்தவற்றைக் கேட்டிருந்தோம். 'ஜனகன மண' (ஆயுத எழுத்து), 'போராடுவோம்' (காலா), 'நான் யார்?' (பரியேறும் பெருமாள்), 'என்னங்க சார் உங்க சட்டம்?' (ஜோக்கர்), 'ஒரு விரல் புரட்சியே' (சர்கார்) முதலான பாடல்கள் கொடுக்கப்பட்டன.

பிடித்த அரசியல் பாடல்கள்!
பிடித்த அரசியல் பாடல்கள்!

இதில் பெரும்பான்மையாக, 'ஜோக்கர்' திரைப்படத்திற்காக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய 'என்னங்க சார் உங்க சட்டம்?' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'ஒரு விரல் புரட்சியே' (சர்கார்) , 'அச்சம் என்பது மடமையடா!' (மன்னாதி மன்னன்), 'ஜனகன மண' (ஆயுத எழுத்து), 'நான் யார்?' (பரியேறும் பெருமாள்) ஆகியன அடுத்தடுத்த இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

எந்த அரசியலைப் பற்றித் திரைப்படங்கள் பேச வேண்டும் என விரும்புகிறீர்கள்?

திரைப்படங்கள் பேச வேண்டிய அரசியல்!
திரைப்படங்கள் பேச வேண்டிய அரசியல்!
சமூக நீதி குறித்த திரைப்படங்கள் அதிகம் வெளிவர வேண்டும் என மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர்!

ஏதேனும் அரசியல் கருத்துகளை மையமாகக் கொண்டே அரசியல் திரைப்படங்கள் இயக்கப்படுகின்றன. இதில் கொடுக்கப்பட்ட விருப்பத் தேர்வுகளில், சமூக நீதி குறித்த திரைப்படங்கள் அதிகம் வெளிவர வேண்டும் என மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். தண்ணீர், மொழி குறித்த மக்கள் பிரச்னைகள் அடுத்த இடத்திலும், பொதுவுடைமை, தேர்தல் அரசியல், விவசாயம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்கு வெளியே, நிகழ்ச்சிகளில் / மேடைகளில் / பேட்டிகளில் எந்த நடிகர் அரசியல் பேசும்போது பிடித்திருக்கிறது?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அரசியல் வருகைக்கான சிக்னல்களை வெளிப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. திரைப்படங்கள் தவிர்த்து ஆடியோ லான்ச், சக்சஸ் பார்ட்டி, ரசிகர்கள் சந்திப்பு உட்பட பொது மேடைகளில் நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகின்றனர். அவர்களுள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரை விருப்பத் தேர்வுகளாகக் கொண்டு கேட்கப்பட்டது.

திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் நடிகர்கள்!
திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் நடிகர்கள்!

விஜய் சேதுபதி பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி, சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இரண்டாவது இடத்தில் இருக்க, அடுத்தடுத்த இடங்களில், விஜய், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திரைப்படங்களுக்கு வெளியே, நிகழ்ச்சிகளில் / மேடைகளில் / பேட்டிகளில் எந்த இயக்குநர் அரசியல் பேசும்போது பிடித்திருக்கிறது?

நடிகர்களைப்போலவே, இயக்குநர்களும் தற்போது தங்கள் அரசியலைத் தங்கள் படைப்புகள் மட்டுமன்றி, பொது மேடைகளிலும் பேசி வருகின்றனர். எஸ்.பி.ஜனநாதன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம், லெனின் பாரதி, கோபி நயினார், ராஜூ முருகன், நவீன், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோரைப் பட்டியலிட்டிருந்தோம்.

திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் இயக்குநர்கள்!
திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் இயக்குநர்கள்!

திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் இயக்குநர்களுள் கரு.பழனியப்பன் அதிகமானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அடுத்தடுத்த இடங்களில், சமுத்திரக்கனி, பா.இரஞ்சித், எஸ்.பி.ஜனநாதன், ராம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.

சர்வேயில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் அனைத்து டாப் பதில்களிலும் ராஜூமுருகனின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 'பிடித்த அரசியல் இயக்குநர்' என்ற கேள்வியிலும், ராஜூமுருகன் பலரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். திரைப்படங்களில் அரசியல் பேசுவதன் அவசியம் குறித்து அவரிடம் பேசினோம்.

இயக்குநர் ராஜூமுருகன்
இயக்குநர் ராஜூமுருகன்

"சினிமா என்பது பொதுவான கலை வடிவம். அதில் நாம் எதை நினைக்கிறோமோ, அதைச் சொல்ல முடியும். உலகத்தில் எத்தனை விதமான உணர்ச்சிகள் இருக்கிறதோ, அத்தனையையும் சினிமா மூலமாகச் சொல்ல முடியும். நாடகம், கவிதை, கதை, சினிமா ஆகிய கலை வடிவங்கள் அனைத்துமே இப்படியானவை. அரசியல் என்பதும் பெரிய உணர்ச்சிதான். அரசியல்ரீதியான உணர்ச்சியோடு, மக்களைத் தொடர்புகொள்ளும் படைப்பாளிகள் அரசியல் படங்களை இயக்குகின்றனர்" என்றார் ராஜூமுருகன்.

தேர்தல் அரசியலை மட்டும், அரசியலாகக் கருதுவதுதான் இங்கு நிலவும் பிரச்னை. தேர்தல் அரசியலுக்கும், பெரியாரின் அரசியலுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், தேர்தலில் போட்டியிடாத பெரியாரின் அரசியல்தான், தமிழ்நாட்டை வழிநடத்துகிறது.
இயக்குநர் ராஜூமுருகன்.

தொடர்ந்து, `` `மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளும் அரசியலோடு தொடர்புடையது' என்கிறார், மார்க்ஸ். இந்த உலகம் பொருளாதாரமாக, உணர்வுகளாக, பிரிவினைகளாகப் பிரிந்திருக்கிறது. இவை எல்லாமே அரசியல்தான்! 'காதல்' என்று ஒரு படம் வந்தது. அதன் தலைப்பே, 'காதல்'தான். ஆனால் அது மிகச்சிறந்த அரசியல் படம். மனித வாழ்க்கையே அரசியல்தான். தேர்தல் அரசியலை மட்டும், அரசியலாகக் கருதுவதுதான் இங்கு நிலவும் பிரச்னை. தேர்தல் அரசியலுக்கும், பெரியாரின் அரசியலுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் தேர்தலில் போட்டியிடாத பெரியாரின் அரசியல்தான், தமிழ்நாட்டை வழிநடத்துகிறது. தேர்தலில் வெல்லும் பதவிகளை விரும்பாத அம்பேத்கரின் அரசியலும், காந்தியின் அரசியலும் வழிநடத்துகின்றன. குடும்பம், அன்பு, உணர்வு ஆகிய அனைத்துமே அரசியலோடு தொடர்புடையது. ஒரு படைப்பாளி உண்மையாக அணுகும்போது, அது அரசியல் படைப்பாக வெளிவருகிறது" என்றார்.

திரைப்படங்களுக்கு வெளியே அரசியல் பேசும் இயக்குநர்களுள் அதிகமானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கரு.பழனியப்பனிடம் பேசினோம். சினிமாவிலும், மேடைகளிலும் தொடர்ச்சியாக அரசியல் பேசுவதன் காரணத்தைக் கேட்டபோது அவர், "நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே அரசியல் பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவுக்கு வந்தபிறகு, கூடுதல் வெளிச்சம் கிடைத்திருக்கிறது." என்றார்.

இயக்குநர் கரு.பழனியப்பன்
இயக்குநர் கரு.பழனியப்பன்

மேலும், "எனக்குச் சரியென்று தோன்றுவதைப் பேச வேண்டும் என நினைக்கிறேன். சினிமாவில் இருப்பவர்கள், வியாபாரத்தில் இருப்பவர்கள், பணம் புரளும் இடத்தில் இருப்பவர்கள், அரசியல் பேசத் தயங்குவதன் காரணம், அதிகாரத்தில் இருப்பவர்களால் தனக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தினால்தான். ஆனால், அனைவருக்கும் ஓர் அரசியல் கருத்து உண்டு. எனக்கு அந்த அச்சம் இல்லாததால், அரசியல் பேச வேண்டும் என நினைத்தேன்" என்று, தாம் அரசியல் பேசுவதற்கான காரணத்தைக் கூறினார் கரு.பழனியப்பன்.

'மற்ற கலைகளைவிட, சினிமா நமக்கு மிகவும் முக்கியமானது!' என்றார் ரஷ்யப் புரட்சியாளர், லெனின். தமிழ் சினிமா, தமிழ்நாட்டு மக்களிடமும், அரசியலிலும் ஏற்படுத்தும் தாக்கம், லெனின் சொன்னதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை