Published:Updated:

விக்ரம் - த்ருவ்... மதுரையின் கேங்ஸ்டர்களா? கார்த்திக் சுப்பராஜின் விக்ரம் 60 அப்டேட்ஸ்!

Vikram
Vikram

நடிகர் விக்ரம் தனது 58-வது மற்றும் 59-வது படங்களான `கோப்ரா’ மற்றும் `பொன்னியின் செல்வன்’ படங்களுக்குப் பிறகு 60-வது படத்திற்காக எந்த இயக்குநரோடு இணையப்போகிறார் என்கிற பேச்சு இப்போதே ஆரம்பமாகிவிட்டது. 

`சேது' பட வெற்றியின் மூலம் பல தடைகளை உடைத்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் `சீயான்' விக்ரம். தொடர் ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக உயர்ந்த விக்ரமுக்கு சமீப காலமாக தொடர் சறுக்கல்கள். ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும், அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களுடன் சேர்ந்துவருகிறார்.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் `கோப்ரா’ படத்தில் நடித்துவந்தார் விக்ரம். இந்தப் படம் மே மாத ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு, ரஷ்யாவில் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படமாக்கியபோதுதான், கொரோனாவால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்குத் திரும்பினர். மீதமிருக்கும் க்ளைமேக்ஸ் காட்சிகளை சென்னையில் செட் போட்டு எடுக்கலாம் என்கிற யோசனையில் இருந்தவர்கள், நிலைமை சரியானதும் ரஷ்யாவுக்குச் சென்றே படமாக்கிக் கொள்ளலாம் என தற்போது முடிவெடுத்திருக்கிறார்கள். அதனால், `கோப்ரா’வின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. இதற்கிடையில்தான், `கோப்ரா’ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கே தனது 60-வது படத்தையும் தயாரிக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார், விக்ரம்.

விக்ரம், த்ருவ் விக்ரம், கார்த்திக் சுப்பராஜ்
விக்ரம், த்ருவ் விக்ரம், கார்த்திக் சுப்பராஜ்

இந்தப் படத்திற்கான இயக்குநர் தேடலில் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கேங்ஸ்டர் கதை அனைவருக்கும் பிடித்திருப்பதால், தற்போது கார்த்திக் சுப்பராஜை உறுதி செய்திருக்கிறது, தயாரிப்புக்குழு. கார்த்திக் சுப்பராஜ், தனுஷை வைத்து இயக்கியிருக்கும் `ஜகமே தந்திரம்’ படம் மே 1-ம் தேதி ரிலீஸ் என பிளான் செய்திருந்ததால், அந்தப் படத்தின் 90 சதவிகித வேலைகளை அவர் லாக்டெளன் ஆரம்பிப்பதற்கு முன்னரே முடித்துவிட்டார். இந்த லாக்டெளன் நாள்களிலும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவந்ததால், `ஜகமே தந்திரம்’ படத்தை ரிலீஸுக்குத் தயார் செய்துவிட்டார். தற்போது, அவர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் `பெண்குயின்’ படம் அமேசான் தளத்தில் நேரடியாக ஜூன் 19-ம் தேதி வெளிவரயிருக்கிறது. அந்தப் படத்தின் ரிலீஸ் வேலைகளை முடித்த பிறகு, விக்ரம் படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் கார்த்திக் சுப்பராஜ் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் விக்ரமுக்காக சொல்லியிருக்கும் கதை, முழுக்க முழுக்க மதுரை கேங்ஸ்டர் கதையாம். `ஜிகர்தண்டா’, `பேட்ட’, `ஜகமே தந்திரம்’ என தொடர்ந்து தன் படங்களில் மதுரையையும், கேங்ஸ்டர்களையும் படமாக்கிவரும் கார்த்திக் சுப்பராஜுக்கு, இது பழக்கப்பட்ட ஏரியா. இந்தப் படத்தில் ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை, சிறு வயதில் இருந்து ஆரம்பித்து அவன் எப்படி டான் ஆகிறான் என்பது வரைக்கும் இருக்குமாம். இந்தப் படத்தில் விக்ரமிற்கு சால்ட் அண்டு பெப்பர் மிடில் ஏஜ் லுக் மற்றும் வயதான லுக் என இரண்டு தோற்றங்கள் இருக்குமாம். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், விக்ரமின் இளவயது போர்ஷனில் அவரின் மகன் த்ருவ் விக்ரமே நடிக்கவிருக்கிறாராம். `ஆதித்ய வர்மா’ படத்திலேயே த்ருவ் விக்ரமின் தோற்றம், `சேது’ படத்தில் விக்ரம் இருந்ததைப் போலவே இருக்கிறது எனப் பேசப்பட்டது. அதனால், இந்தப் படத்தில் விக்ரமின் இளவயது தோற்றத்துக்கு த்ருவ் விக்ரமை நடிக்க வைப்பது சரியானத் தேர்வாக இருக்கும் என உறுதிசெய்திருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் எனத்தெரிகிறது.

த்ருவ் விக்ரம்
த்ருவ் விக்ரம்

`கோப்ரா’ படத்தைப் போல் `பொன்னியின் செல்வன்’ படத்தையும் லாக்டெளன் முடிந்ததும் உடனடியாக ஆரம்பிப்பதற்கு சில சிக்கல்கள் இருக்கிறது. `பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்குள், வேறு ஒரு படத்தை இயக்கலாம் என அரவிந்த் சாமிக்காக ஒரு காதல் கதையை மணி ரத்னம் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால், லாக்டெளன் முடிந்ததும் விக்ரம் - கார்த்திக் சுப்பராஜின் படத்தின் ஷூட்டிங்தான் முதலில் தொடங்கும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு