சினிமா
Published:Updated:

“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”

சாந்தனு
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தனு

பல ஆட்சிகள் வந்து போனாலும் ராமநாதபுரம் வளரலை. வறண்ட பூமி, பனிஷ்மென்ட் ஏரியாங்கிற அவப்பெயர்தான் சேர்ந்திருக்கு.

விக்ரம் சுகுமாரன், ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர். ஆறு வருடங்களுக்குப் பிறகு ‘இராவண கோட்டம்’ மூலம் திரும்பி வருகிறார்.

“சாதியை எதிர்த்த மதயானைக் கூட்டத்தை சாதிப் படம்னு சொல்லிட்டாங்க. சொல்லிப் புரிய வைக்குறதுக்குள்ளே படம் தியேட்டரை விட்டுத் தாண்டிப் போயிடுச்சு. இப்ப `இராவண கோட்டம்' ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அசலான வாழ்க்கையைச் சொல்ல வருது. அந்த எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாடு, அவர்களைச் சூழ்ந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல், காதல், மத்தவங்க அவங்களைப் பயன்படுத்திக்கொண்ட அவலம் எனப் பலவற்றை கரிசனத்துடனும் காட்டமாகவும் சொல்ல வருது ‘இராவண கோட்டம்’. அரசியல்வாதிகள் எப்படி சாதியைத் தூண்டிக் கூட்டம் சேர்த்து, ஓட்டு போட வச்சு பிரச்னை செய்கிற மக்களாகவே அவங்களை உருவாக்கி வச்சிருக்காங்கன்னு படம் பின்னணியாகப் பேசும். என்னுடைய சினிமாவின் மனிதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால் அவர்கள் படுகிற துயரம் அசாதாரணமானது.’’ வர்ணம் தீட்டும் லாகவத்தோடு வார்த்தைகளைக் கோத்துப் பேசுகிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”
“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”

`` ‘இராவண கோட்டம்’ எதைப்பற்றிய விரிவான அரசியலை முன்வைக்குது?’’

“இது சாதிப்படமோ, சாதியைத் தூக்கிப் பிடிக்கிற படமோ இல்லை. ஆனால் குரு பூஜை, அதைச்சுற்றி இருக்கிற அரசியல் பத்தியும் பேசியிருக்கோம். முக்கியமா ராமநாதபுர மாவட்டத்தில் மண்டிக் கிடக்கும் கருவேலமரம் அரசியல் பத்திப் பேசியிருக்கோம். 1958-ல் இங்கே கருவேலம் விதைகளை விதைச்சாங்க. அதை ஏன் இன்னும் அழிக்காமல் வச்சிருக்காங்கன்னு தெரியலை. கருவேலம் ஆபத்தான மரம். எதையும் வளரவிடாது. எந்த விவசாயத்தையும் சரிவர செய்ய விடாது. அதை ஏன் அழிக்காமல் அப்படியே விட்டு வச்சிருக்கோம் என்பதிலும் அரசியல் இருக்கு. கருவேலத்தால் தண்ணீர், காற்று எல்லாமே மாசடைந்துவிட்டது. இங்கே பல ஊர்கள்ல வீடுகளெல்லாம் நிறைய இருக்கு. ஆனால் வசிக்க மனிதர்கள் இல்லை. எல்லாரும் நகரத்தை நோக்கிப் போயிட்டாங்க. தூத்துக்குடி பக்கத்தில்கூட இப்படி ஒரு கிராமத்தைப் பத்தின வீடியோ வைரலாகச் சுத்திக்கிட்டு இருக்கு. வருங்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்ன ஆகும்ன்னு தெரியலை. இது அறுபது வருஷமா வெளியே சொல்லாத, தெரியாத விஷயம். இதைச் சுத்தித்தான் கதையே நடக்குது.

பல ஆட்சிகள் வந்து போனாலும் ராமநாதபுரம் வளரலை. வறண்ட பூமி, பனிஷ்மென்ட் ஏரியாங்கிற அவப்பெயர்தான் சேர்ந்திருக்கு. சாதிக்கலவரம், துப்பாக்கிச் சூடு நடக்குற இடம்னு ஆகிப்போச்சு. இது நான் பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணை வெச்சு ஒரு கதை சொன்னால் வழி பிறக்கும்னு பட்டது.”

சாந்தனு, விக்ரம் சுகுமாரன்
சாந்தனு, விக்ரம் சுகுமாரன்

`` `இராவண கோட்டம்’ - பெயர்க்காரணம்?’’

“தமிழ்நாடுன்னுதான் பெயர் வச்சிருக்கணும். ராவணன் தமிழ் அரசன்தான். அவன் கட்டுப்பாட்டிலிருந்த ஏரியா இது. அதனால் `இராவண கோட்டம்'னு வச்சிருக்கோம். ராவணன் ஆண்ட பகுதிக்கு ராமநாதபுரம்னு ஏன் பெயர் வந்தது என்பதுகூட ஒரு அரசியல் தான். நான் பாலுமகேந்திரா பள்ளியில் படித்தவன். அவர் சினிமாவைப் பயன்படுகிற கலையாகத்தான் பார்த்தார். அதேமாதிரிதான் வெறும் கல்லா கட்டுறதுக்கு மட்டும் படம் எடுக்கிறது என் நோக்கம் இல்லை. என்னுடைய முதல் படமும், இந்தப் படமுமே என்னை பாதித்த, உணர்ந்த விஷயங்கள்தான்.”

``ஹீரோ சாந்தனு எப்படி?’’

“என் மண்ணின் மைந்தனாகவே அவரை மாத்திட்டேன். எங்க ஊரு ஹேர்ஸ்டைலுக்கு ரெடியாகவே ஆறு மாசம் ஆச்சு. அப்புறம்தான் ஷூட்டிங் போனோம். அப்படியே கொளுத்துற வெயில்ல உட்கார வச்சு அவர் நிறத்த எங்க ஊர் நிறத்துக்கு மாத்தினோம். செருப்பு போடாமல் நடந்து ஊர்க்காரன்மாதிரியே ஆகிட்டார். இங்கே கொளுத்துற வெயில்ல் மண்ணுக்குள்ளே விளையாடி முட்டி தேய்ந்து ஆறி, அதுவே அடையாளம் மாதிரி ஆகிப்போச்சு.

“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”
“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”
“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”
“கருவேல அரசியலுக்கு எதிரான கதை!”

பிரபு சார், இளவரசு, தீபான்னு மண்ணின் வசமாகி நடிச்சுட்டுப் போனாங்க. அழகியல் அப்படி இப்படின்னு எதையும் பார்க்கலை. முழுசா ஒரு வாழ்க்கையை முன்னே வந்து வைக்க முடியுமான்னு பார்த்திருக்கோம். அதிலே இந்த மண்ணு, வறட்சி, வெயில் எல்லாம் தெரியணும். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனும் காட்டியிருக்கார். `கயல்’ ஆனந்திதான் கதாநாயகி. இதில் நல்ல உழைப்பைச் செலுத்தியிருக்கார். இசையை ஜஸ்டின் பிரபாகரனும் எடிட்டிங்கை லாரன்ஸ் கிஷோரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். தயாரிப் பாளராக கண்ணன் ரவி நிறைய அக்கறை காட்டினார். மண்வாசனையும் அரசியல் குரலும் இணைந்த படமாக இருக்கும் இந்த ‘இராவண கோட்டம்’. ’’

எதிர்பார்ப்பைத் தூண்டுகிறார் விக்ரம் சுகுமாரன்.