கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“மதுரைத் தமிழ் கத்துக் கொடுத்தார் விஜயகாந்த்!”

சம்பத்
பிரீமியம் ஸ்டோரி
News
சம்பத்

தெலுங்கில் விக்ரம்குமார் இயக்கும் நாகார்ஜுனா நடிக்கும் படத்துல சின்ன ரோல்தான்... ஆனா, அந்த கேரக்டரின் முக்கியத்துவம் பிடிச்சிருந்தது.

தமிழ் சினிமாவில் ஹேண்ட்சம் வில்லன் சம்பத். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் பிஸியாக இருப்பவர், வெப்சீரீஸ் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார்.

``தமிழில் ஏன் பார்க்க முடியறதில்லை?’’

‘‘இதே கேள்வி எனக்கும் அடிக்கடி தோணும். நான் தெலுங்கில் அதிகம் நடிக்கறதால, தமிழ்ல கூப்பிட்டா அதிக சம்பளம் கேட்பாரோன்னு நினைச்சுக் கூப்பிடாமல் இருக்காங்களோன்னு தோணுது. ஆனா, அப்படியெல்லாம் இல்ல. இங்கே நிறைய நடிக்கணும்னு விரும்புறேன். நல்ல கதை, கேரக்டர்னா நடிக்க ரெடியாவே இருக்கேன்.

தெலுங்கில் விக்ரம்குமார் இயக்கும் நாகார்ஜுனா நடிக்கும் படத்துல சின்ன ரோல்தான்... ஆனா, அந்த கேரக்டரின் முக்கியத்துவம் பிடிச்சிருந்தது. அது எனக்கான ரோல்னு புரிஞ்சதும், நடிக்க சம்மதிச்சேன். அதைப் போல ‘காலா’வுல மெயின் வில்லன் நானா படேகர். பா.இரஞ்சித் என்னை நடிக்கக் கேட்டதும், ‘உங்களுக்கு மெயின் ரோல் கொடுக்க முடியாததுக்கு காரணம் கதையோட அமைப்புதான்’னு சொன்னதால பண்ணினேன். இப்ப தமிழ்ல ‘அக்னிச் சிறகுகள்’ல நடிச்சு முடிச்சிட்டேன். அடுத்து ஒரு படம் ஷூட் போய்ட்டிருக்கு. தவிர, பிரியாவோட வெப்சீரீஸ்ல நானும் பிரகாஷ்ராஜும் நடிக்கறோம். இது தவிர கன்னடம், தெலுங்கில் தலா ரெண்டு படங்கள் பண்ணிட்டிருக்கேன்.’’

“மதுரைத் தமிழ் கத்துக் கொடுத்தார் விஜயகாந்த்!”
“மதுரைத் தமிழ் கத்துக் கொடுத்தார் விஜயகாந்த்!”

``சினிமாவுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத குடும்பப் பின்னணியில் இருந்து நடிக்க வந்தவராமே நீங்க..?’

‘‘உண்மைதான். எங்க அப்பா ஆர்மியில் இருந்தவர். அதனால் ஊர் ஊரா பயணம் பண்ணவேண்டிய சூழல். நான் பிறந்தது லக்னோவில். படிச்சது, வளர்ந்துன்னு பல ஊர்கள் சொல்லலாம். கடைசியா பெங்களூர்ல செட்டில் ஆனோம். காலேஜ் டைம்ல நான் சினிமாவுக்கு வரணும்னு விரும்பினதுண்டு. ஆனா, பொலிட்டிகல் சயின்ஸ்ல முதுகலைப் படிப்பை முடிச்சிட்டு மீடியா துறையிலதான் விளம்பரங்கள், மார்க்கெட்டிங் பிரிவுல இருந்தேன்.

எனக்குள் இருந்த நடிகனைக் கண்டுபிடிச்சது என் நண்பன்தான். நான் பெங்களூர்ல இருந்தபோது, என் நண்பன் கன்னடப் பட ஆடிஷனுக்குப் போயிருந்தார். ஆனா, செலக்ட் ஆகல. அவங்க கேட்கற கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு சொன்னான். அந்த நேரத்துல என் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள். விவாகரத்து ஆகி, என் மகளை வளர்க்கும் பொறுப்பு இருந்தது. ரொம்ப மெலிஞ்சுபோயிருந்தேன். அந்தப் பட கேரக்டருக்கும் அப்படியொரு தோற்றம்தான் தேவைப்பட்டுச்சு. அதனால் என்னை உடனே செலக்ட் பண்ணிட்டாங்க.

தமிழ்ல என் முதல் படம், ‘நெறஞ்ச மனசு.’ சமுத்திரக்கனி இயக்கினது. விஜயகாந்த் சார், மனோரமா ஆச்சி, வினுசக்கரவர்த்தி சார், வெங்கட்பிரபுன்னு முதல் படமே பெரிய ஜாம்பவான்களோடு நடிச்சேன். விஜயகாந்த் சார், ‘இவர் குரல் தனித்துவமா இருக்கு. இவரையே டப்பிங் பேச வைங்க’ன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல், டப்பிங்கின் போது என் கூடவே இருந்து மதுரைத் தமிழில் எனக்குப் பேசவும் டிரெயினிங் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்.”

“மதுரைத் தமிழ் கத்துக் கொடுத்தார் விஜயகாந்த்!”
“மதுரைத் தமிழ் கத்துக் கொடுத்தார் விஜயகாந்த்!”

``உங்களோட குடும்பம் பத்திச் சொல்லுங்க..?’’

‘‘என் மகள்தான் என் உலகம். இப்ப ஆஸ்திரேலியால படிக்கறா. முன்னாடி சினிமா, என் பொண்ணு ரெண்டும்தான் என் வாழ்க்கையா இருந்துச்சு. அவங்க வெளிநாடு போனதால, அவளை ரொம்ப மிஸ் பண்றேன். இந்த லாக்டௌன்ல என் பொண்ணும் நானும்தான் வீட்ல இருந்தோம். ரெண்டு பேருமே வீட்டு வேலைகளைப் பிரிச்சுக்கிட்டோம். இந்த லாக்டௌன் நிறைய விஷயங்களை உணர்த்தியிருக்கு. ‘நம்ம தேவை என்ன... உறவுகளோட மகத்துவம் எப்படிப்பட்டது’ன்னு பல விஷயங்களைப் புரிய வச்சிடுச்சு. நான் வில்லனா நடிச்ச சில படங்கள் என் மகளுக்குப் பிடிக்காது. ‘அந்த கேரக்டர்ல ஏன்ப்பா நடிச்சீங்க?’ன்னு கேட்பா. ‘அதை நடிப்பா மட்டும் பாரு. சினிமாவுல நடிக்கறதாலதான் நீ வெளிநாடு போய்ப் படிக்க முடியுது. காஸ்ட்லியான கார் வாங்க முடியுது’ன்னு சொல்வேன்.’’

- தன் டிரேடுமார்க் சிரிப்பை உதிர்க்கிறார் சம்பத்.