Published:Updated:

'அது பொற்காலம்' - டி.ஆர். ராஜகுமாரி

T.R.Rajakumari

விரல் நடிகர் படிக்க வேண்டிய கட்டுரை...!

Published:Updated:

'அது பொற்காலம்' - டி.ஆர். ராஜகுமாரி

விரல் நடிகர் படிக்க வேண்டிய கட்டுரை...!

T.R.Rajakumari
T.R.Rajakumari
T.R.Rajakumari

திரைப்பட உலகில் நான் புகுந்த காலத்தையும், அல்லும் பகலும் அதில் பாடுபட்டு உழைத்த காலத்தையும் இன்று எண்ணும்போது, அது ஒரு பொற்காலம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. உழைப்பும், உண்மையும், உயர்ந்த எண்ணமும் நிறைந்த காலம் அது. உழைத்தால் தான் உயர முடியும்; திறன் இருந்தால்தான் திரையுலகில் பிரகாசிக்க முடியும்; எண்ணம் சிறந்திருந்தால்தான் எடுத்த காரியம் எதிலும் வெற்றி காண முடியும் என்றிருந்த பொற்காலம் அது. 

T.R. Rajakumari
T.R. Rajakumari

இன்று நினைத்துக் கொண்டாலும் பல நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. 1938ம் ஆண்டு என்று நினைக்கிறேன். திருமதி. எஸ். டி. சுப்புலட்சுமி அவர்கள் புகழ்தான் எங்கும். அவரும் டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்களும் திறந்த காரில் மெரீனா கடற்கரையில் செல்வார்கள். அவர்களைக் காணவென்று நானும் என் தம்பியும் கடற்கரைக்குப் போய்க் காத்திருப்போம். அவரைக் கண்டவுடன் பெருமகழ்ச்சி! சாதாரணமானவரா அவர்! பெரிய நட்சத்திரம் அல்லவா? தியாக பூமியின் கதாநாயகி அல்லவா? அப்பொழுது நானும் நடித்து ஓரளவு புகழும் பேரும் அடைவேன் என்று நினைக்கவேயில்லை. 

T.R.Rajakumari
T.R.Rajakumari

நான் நடித்த முதல் படம் ‘குமார குலோத்துங்கன்’ வெளிவராமலேயே போய் விட்டது! புதிய ஒலி முறை ஒன்றை அதில் கையாண்டு பார்த்தார்கள்! மிகத் துணிகரமான முயற்சி தான் ஆனால் துரதிருஷ்டவசமாக அது வெற்றி அளிக்காமல் போய் விட்டது!  குமார குலோத்துங்கன் படத்தில் நடிக்கும்போது எனக்கு ராஜலட்சுமி என்றுதான் பெயர். ராஜாயி என்று அழைப்பார்கள். அந்தக் காலத்தில் திருமதி. டி. பி. ராஜலட்சுமி அவர்கள்  பிரபலமாயிருந்தார்கள். எனவே தான் குமார குலோத்துங்கன் தயாரிப்பாளர் திருவாளர் ராஜா ராவ் அவர்கள், எனக்கு ராஜகுமாரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நிலைத்து, நல்லதொரு புகழையும் எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டது. குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். அதன் பிறகு எனக்கு ஒப்பந்தமான படங்கள் சூர்யபுத்திரி, மந்தாரவதி, கச்சதேவயானி. குறிப்பாக எனது முதல் படமான ‘கச்சதேவயானி’ தான் எனக்குப் புகழை வாங்கித் தந்தது. அந்தப் புகழுக்கெல்லாம காரணமானவர், டைரக்டர் கே. சுப்பிரமணியம் அவர்கள்தான். திருவாளர்கள் கொத்தமங்கலம் சீனுவும், கொத்தமங்கலம் சுப்புவும்தான் என்னுடன் நடித்த முதல் நட்சத்திரங்கள். அப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்குப் போய் வருவதென்பது  கிட்டத்தட்ட பள்ளிக்கூடத்திற்குப் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக கிளம்பினால், ஒரு கம்பெனிக்குச் சென்று ஒத்திகை முடித்துக் கொண்டு, அய்யர் கம்பெனிக்குப் படப்பிடிப்புக்குப்போவேன். அதை முடித்துக்கொண்டு மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பெனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போல்தான் நாங்கள் பழகுவோம். டைரக்டர், நடிகை, வசனகர்த்தா, காமிராக்காரர், லைட் பாய் என்ற முறையில் பாகுபாடே கிடையாது. எல்லோரும் ஒன்றுதான். சாப்பாட்டின்போது டைரக்டர் கே. எஸ். பக்கத்தில் ஒரு லைட் பாயும் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்த அளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்டிருந்த பொற்காலம் அது. 

T.R.Rajakumari
T.R.Rajakumari

நான் அநேகமாக எல்லாப் பிரபல கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறேன். திரு. எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களுடன் நடித்த ‘சிவ கவி’யும்’ ஹரிதாஸு ’ம் என் நினைவிலிருந்தும் சரி, தமிழ்ப்பட உலக ரசிகர்களின் நினைவிலிருந்தும் சரி என்றென்றும் நீங்க முடியாதவை, ஹரிதாஸ் படத்தைப் போன்று ஒரே கொட்ட கையில் வருஷக் கணக்கில் ஓடிய படம் இன்னொன்று வரப்போகிறதா என்ன! குபேர குசேலா, மனோன்மணி, கிருஷ்ண பக்தி ஆகிய படங்களில் திருவாளர் பி. யு. சின்னப்பா அவர்களுடன் நடித்திருக்கிறேன்.

சின்னப்பா அவர்களே ஒரு சாதாரண நடிகர் என்று சொல்லி நிறுத்திவிட முடியாது. அவர் ஒரு பிறவி நடிகர். வசனம் சொல்வதிலும் சரி, நடிப்பிலும் சரி, பாட்டிலும் சரி, கத்திச் சண்டை, சிலம்பு சுற்றுதல் ஆகியவற்றிலும் சரி, அவர் ஈடு இணையற்றே விளங்கினார். 

T.R.Rajakumari
T.R.Rajakumari

வால்மீகி, சதிசுகன்யா போன்ற  படங்களில் ஹொன்னப்ப பாகவதர் அவர்களுடன் நடித்தேன். இன்னும் எம்.ஜி.ஆர். அவர்களுடன் புதுமைப்பித்தின் என்ற படத்திலும், சிவாஜி கணேசன் அவர்களுடன் மனோகரா, அன்பு ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறேன்.

அன்பு படத்தில் நடிக்கும்போதே, வருங்காலத்தில் சிவாஜி கணேசனை விடச் சிறந்த நடிகர் இன்னொருவர் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் நான்.

என் அன்றைய முடிவு இன்று சரியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏறக்குறைய முப்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் நான். ஹிந்தியிலும், தெலுங்கிலும் கூட நடித்திருக்கிறேன்.

இத்தனையிலும் நான் பெருமைப்படும் விஷயம் ஒன்று உண்டு. அதுதான் நேரம் தவறாமை! காலை ஏழு மணிக்கு ‘கால்ஷீட்’ என்றால், ஏழாவது மணிக்கு நான் அங்கு இருந்தாக வேண்டும். ‘லேட்’டாகப் போனால் நானே வெட்கப்பட்டுக் கொள்வேன்.

இன்றும் எதிலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதில்தான் நான் அதிக கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக, திரைப்பட உலகில் நேரத்தைக் காப்பாற்றுவது மிகமிக அவசியமான ஒன்று. ஒரு நடிகை தாமதித்து வந்தால், அதன் விளைவு யார் யாரை எந்த எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை அவரே சிந்தித்துப் பார்த்தால், ஆயிரக்கணக்கில் பணம் புரளும் திரைப்படத்தொழிலுக்கு நேரத்தைக் காப்பாற்றுவது எந்த அளவுக்குத் தேவை என்பது புரியும். 

T.R.Rajakumari
T.R.Rajakumari

தமிழ் நட்சத்திரமாக மட்டும் திகழ்ந்த என்னை, அகில இந்திய நட்சத்திரமாக, ஏன், முதல் சர்வதேச நட்சத்திரமாக ஆக்கியவர் திருவாளர் எஸ். எஸ். வாசன் அவர்கள்தான். ஸ்ரீ. எஸ். எஸ். வாசன் அவர்களும், டைரக்டர் ஸ்ரீ. கே. சுப்பிரமணியம் அவர்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவள். 

சந்திரலேகா படத்தையும், அதன் படப்பிடிப்பையும் இப்பொழுது நினைத்துக் கொண்டாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய துணிகர முயற்சியை எவராலும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது என்றுதான் சொல்லுவேன்.

அதன் வெற்றிக்காக வாசன் அவர்கள் எதைச் சொன்னாலும் செய்யக் காத்திருந்தேன். நான் மட்டுமா? சகோதர நடிகர்கள் ராதா, ரஞ்சன், காமிராமேன் கமால்கோஷ், இன்னும் ஏனைய கலைஞர்களும் அவர் பேச்சுக்கு மறுபேச்சின்றி  உழைத்தோம். சர்க்கஸ் காரியாக மாற வேண்டுமா, தயார் சர்க்கஸில் பார் வேலை செய்ய வேண்டுமா, தயார். மலை மேல் ஏற வேண்டுமா, ரெடி. சறுக்குப் பாறையில் இறங்க வேண்டுமா தயார் என்று எதையும் செய்யச் சித்தமாயிருந்தேன். அப்படி உழைப்பதிலும் ஒரு இன்பம் இருந்தது. அந்த உழைப்பிற்குத் தகுந்த பலனும் இருந்தது.

அந்தப் படத்தை முடித்து விட்டு வெளியே வந்தபோது, உண்மையில் ஒரு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வருகிற நிலையில் தான் இருந்தேன் நான். அது வெற்றிமேல் வெற்றி பெறுகிறது என்பதைக் கேள்விப்பட்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது. வடநாட்டில் அவ்வளவு வெற்றி முரசம் கொட்டிய போது கூட, எங்கும் போய் நான் மகிழ்ச்சியில் கலந்து கொள்ளவேயில்லை. பம்பாய்க்கோ, கல்கத்தாவுக்கோ, டெல்லிக்கோ நான் இதுவரை போனதே கிடையாது.  

T.R.Rajakumari
T.R.Rajakumari

ஒய்ச்சல் ஒழிவின்றி நான் திரைப்பட்த்தில் நடித்தபோதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதில்லை. என் செளகரியத்திற்காக நான் அப்படிச் செய்ததில்லை. என்னேப் போன்றவர்களுக்கு நிறைய செளகரியங்கள் இருக்கின்றன.

கார் வசதி இருக்கிறது; விடுமுறை நாளாயிருந்தால் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறோம். ஆனால் மற்றவர்கள் நிலை! பாவம், வாரம் ஒரு நாள் அவர்களுக்குக் கிடைக்கும் ஒய்வு அல்லவா போய் விடுகிறது. வாரமெல்லாம் உழைத்த அவர்கள், ஒரு நாள் மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிக்க விரும்பமாட்டார்களா? அந்த நாள் பார்த்து தயாரிப்பாளர் படப்பிடிப்பு வைத்துக் கொண்டால், அதற்கு நானும் பல சிப்பந்திகளின் நிம்மதியை அல்லவா நான் குலைப்பவளாக ஆகிறேன்.

அதனால்தான்,  நானே ஞாயிற்றுக் கிழமைகளில் படப்பிடிப்புக்குப் போவதில்லை என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டேன்.எந்தப் படமும் வெற்றி அடைவது பலரது ஒத்துழைப்பையும் பொறுத்துத்தானே இருக்கிறது. இதே காரணத்தினால்தான் என்னை யாரேனும் அதிகமாகப் புகழ்ந்தாலும் கூட, நான் சந்தோஷப்படுவதில்லை. ஏதோ எனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது, நடித்தேன் என்று தான் சாதாரணமாக எடுத்துக் கொள்வேன். 

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். அதை அவரவர் நன்கு பயன்படுத்திக் கொண்டு, எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய வேண்டுமென்பது தான் என் சிற்றறிவுக்குத் தோன்றிய எண்ணம். 

அந்தப் பொற்காலத்தை எனக்கு அளித்ததற்காக கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.  

- டி.ஆர்.ராஜகுமாரி

(05.06.1960 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)