Published:Updated:

சமுத்திரக்கனி இயக்கத்தில் விஷால்! - இது ஆக்‌ஷன், ஆனால் ஆன்மிகப் படம்

எம்.குணா

15 ஆண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் எழுதிய நாவல், `சிவம்'. தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் சிலை கடத்தல் சம்பவங்களை அப்போதே தீர்க்கதரிசனத்தோடு விவரித்து எழுதியிருப்பார்.

Samuthirakani - Vishal
Samuthirakani - Vishal

'சிவம்' கதையைப் படித்து நெகிழ்ந்துபோன டைரக்டர் சமுத்திரக்கனி, அந்தக் கதையைத் திரைப்படமாகத் தயாரிப்பதற்கான உரிமையை விலைகொடுத்து வாங்கிவிட்டார். 'சிவம்' கதையில் ஹீரோவாக நடிப்பதற்காக விஷாலை அணுகி கதையைச் சொல்லியிருக்கிறார். சமுத்திரக்கனி சொன்ன கதையை உன்னிப்பாகக் கேட்ட விஷால், துளிகூட யோசிக்காமல் உடனே ஓ.கே சொல்லிவிட்டார். விரைவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார்.

Vishal
Vishal

ஏற்கெனவே, சிலை கடத்தல் விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போலீஸ் அதிகாரி பொன்மாணிக்கவேல் பெயரில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் ஷூட்டிங், தற்போது நடந்து வருகிறது. 'ஒரு போலீஸ் அதிகாரியின் கதையைத்தான் படமாக்குகிறோம். மற்றபடி சிலை கடத்தல்குறித்த கதையை நாங்கள் படமாக்கவில்லை' என்று 'பொன் மாணிக்கவேல்' திரைப்படக்குழு அறிவித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், விஷால்-சமுத்திரக்கனி கூட்டணி இணையும் ஆக்‌ஷன் கலந்த ஆன்மிகப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துவரும் விஷால், ``என்னுடைய 'அயோக்யா' திரைப்படம் பெரிதாக ஓடியிருக்க வேண்டியது. தயாரிப்பாளரின் தவறான அணுகுமுறையால் பட வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது. எனக்கு மனக் காயத்தை ஏற்படுத்திவிட்டது. இனிவரும் நாள்களில், சொந்தக் கம்பெனி தவிர, வெளி பேனர்களில் நடிப்பதில்லை' எனக் கூறியிருந்தார். இப்போது அந்தக் கொள்கையைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, பிற தயாரிப்பாளர் எடுக்க, சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.