Published:Updated:

நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்... ஜுவாலா கட்டா விஷ்ணு விஷால் கல்யாணம் எப்போ?!

ஜுவாலா கட்டா -  விஷ்ணு விஷால்
ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால் ( Twitter )

இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷால்.

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வந்த பத்து வருடங்களில் ஏராளமான பேர் சொல்லும் படங்களில் நடித்திருக்கிறார். 2010-ம் ஆண்டு நீண்ட காலத் தோழியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மூன்று வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்தனர். இந்த பிரிவுக்குப் பிறகு டிப்ரஷன், ஆல்கஹால் அடிக்‌ஷன் எனப் பாதை மாறிய விஷ்ணு விஷால் தொடர் உடற்பயிற்சிகள் மூலம் அதில் இருந்து மீண்டார்.

ஜுவாலா கட்டா -  விஷ்ணு விஷால்
ஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்
Twitter

இந்த மன அழுத்தம் குறித்தும், அதில் இருந்து மீண்டது குறித்தும் மிக நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார் விஷ்ணு விஷால்.

"என் பர்சனல் வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, 2017-ம் ஆண்டு நானும் என் மனைவியும் பிரிந்தோம். அந்தப் பிரிவு எங்கள் இருவரையும் தனித்தனி வீடுகளில் வாழவைத்தது மட்டுமல்லாமல், பிறந்து சில மாதங்களேயான என் மகனிடமும் இடைவெளியை உருவாக்கியது. என் வாழ்க்கை இவ்வளவு மோசமாக மாறும் என்று நினைக்கவேயில்லை. குடிக்க ஆரம்பித்தேன். ஒவ்வோர் இரவும் நான் மனதளவில் உடைந்து அழும் வரையிலும் குடித்தேன். மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை நோயாளியாக்கின. அதனால், ஒரு மைனர் சர்ஜரியும் செய்யவேண்டி வந்தது.

`ராட்சசன்' சூப்பர்ஹிட் படமாக இருந்தாலும், விவாகரத்து, குழந்தையைப் பிரிந்தது, உடல்நிலையில் பின்னடைவு, பொருளாதார இழப்பு, ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம், குடிப்பழக்கம், தவறான உணவுப் பழக்கம், உடல் எடை அதிகரிப்பு என வாழ்க்கையின் அடித்தளத்துக்கே போய்விட்டேன்" என்று விரக்தியின் உச்சத்தில் இருந்த நேரங்களைப் பகிந்தவர், யோகா, ஜிம் என அதிலிருந்து தான் வெளியே வந்த கதையையும் குறிப்பிட்டிருந்தார். அதன் முடிவில் "எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்கப்போகிறேன்" என்று பாசிட்டிவாக சொல்லியிருந்தார்.

கடந்த சில காலமாகவே விஷ்ணு விஷாலும் இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை வைத்து, இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் வந்தது. அப்போது விஷ்ணுவிடம் கேட்ட போது, "நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பும், புரிதலும் எங்களுக்குள்ள இருக்கு. ஆனா, இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகுதுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்" என்றார். இன்று ஜூவாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'New Beginnings' என்ற கேப்ஷனில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் விஷ்ணு.

இது குறித்து அவரிடம் பேசினேன். "ஆம். நேற்று இரவு எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஏற்கெனவே இருவரும் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று பேசியிருந்தோம். இந்த நிலையில், ஜுவாலாவுடைய பிறந்தநாளுக்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென நினைத்து நள்ளிரவில் சந்தித்து மோதிரம் அணிவித்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். கொரோனா எல்லாம் முடிந்தவுடன் எங்களின் திருமணம் இருக்கும். இருவரும் அவரவருடைய கரியருக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கை நடத்த உள்ளோம்" என்றார்.

ஜூவாலா கட்டா சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியதுமே, 22 வயதிலேயே திருமணம் முடித்தவர். கடந்த 2005-ம் ஆண்டு பேட்மிட்டன் வீரர் சேத்தன் ஆனந்துடன் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், இவர்கள் இருவரும் 2010-ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு