Published:Updated:

``ஜுவாலா கட்டா கூட நல்ல புரிதல் இருக்கு... ஆனா?!" - விஷ்ணு விஷால் #VikatanExclusive

புதிய படங்கள், மன அழுத்தம், ரிலேஷன்ஷிப்... விஷ்ணு விஷால் ஷேரிங்க்ஸ்!

`இன்று நேற்று நாளை', `முண்டாசுப்பட்டி', `ராட்சசன்' எனத் தமிழ் சினிமாவின் பேட்டன் பிரேக்கிங் படங்களுக்குச் சொந்தக்காரர் விஷ்ணுவிஷால். காமெடி, சீரியஸ் என அடுத்தடுத்து வித்தியாசமான கதைத்தேர்வுகளில் கவனிக்க வைத்தவர் பர்சனல், ப்ரொஃபஷனல் என இரண்டிலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் பாசிட்டிவ் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால்

சினிமாக்குள்ள வந்து 10 வருடங்கள் ஆகுது. எப்படி இருக்கு இந்தப் பயணம்?

"நடிப்புன்னா என்னான்னு தெரியாத ஒருத்தனாதான் சினிமாக்குள்ள வந்தேன். கிரிக்கெட்னா என்னான்னே தெரியாத ஒருத்தன் கிரவுண்ட்ல இறங்கினா எப்படி இருக்குமோ அப்படித்தான் என் நிலைமையும் ஆரம்ப காலத்துல இருந்தது. இந்தப் பத்து வருஷத்துல நிறைய கத்துக்கிட்டேன். வெளிய இருந்து நான் சினிமாவைப் பார்த்த விதமும், உள்ள வந்து நான் சினிமாவைப் பார்க்குற விதமும் மொத்தமா மாறியிருக்கு. சினிமாக்குள்ள வந்தபோது நான் பட்ட கஷ்டங்கள், ஆரம்ப காலத்துல என்னை மத்தவங்க நடத்தின விதம் இதை எல்லாம் நான் மத்தவங்களுக்குப் பண்ணிடக்கூடாதுங்கற விஷயத்துல தெளிவா இருக்கேன். அதேமாதிரி, இண்டஸ்ட்ரிக்குள்ள வர நிறைய இளைஞர்கள் கூட சேர்ந்து படம் பண்ணணும் அவங்களுக்கும் வாய்ப்பு தரணுங்கற ஆசை இருக்கு, அதுக்கான முயற்சிகளும் எடுத்துட்டுதான் இருக்கேன். ஆரம்ப காலத்துல எனக்கு அடுத்தடுத்து படங்கள் எல்லாம் உடனே அமையலை. மக்கள் மனசுல எனக்கான இடம் பிடிக்க நேரம் எடுத்துச்சு. கஷ்டமான ட்ராவலா இருந்த அதே சமயம், திரும்பிப் பார்க்கும்போது இன்ட்ரஸ்ட்டிங்கான ஒண்ணாவும் இருக்கு."

`` `நீர்ப்பறவை', `ராட்சசன்' மாதிரியான சீரியஸ் படங்களும் பண்றீங்க. 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', 'முண்டாசுப்பட்டி' மாதிரியான காமெடி படங்களும் பண்றீங்க. கதைகள் தேர்வு செய்யும் போது எந்த மாதிரியான விஷயங்களைக் கவனத்துல வெச்சுப்பீங்க?''

``நான் பர்சனலா ரொம்பவே எமோஷனலான, அமைதியான ஆளு. சினிமா பேக்ரவுண்டு இல்லாத குடும்பத்துல இருந்து வந்ததால, வித்தியாசமான, வெரைட்டியான கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது மூலமா நானும் நடிப்பு கத்துக்கிட்டேன். எமோஷனல், காமெடினு வெரைட்டியா நடிக்கும்போது ஒரு ஸ்டேஜுக்கு மேல எனக்கே என்மேல நம்பிக்கை வர ஆரம்பிச்சது. அந்தத் தன்னம்பிக்கை வந்ததுக்குப் பிறகு பண்ணின படம்தான் `ராட்சசன்'. அதுக்குப் பிறகு FIR படம். இப்ப இந்தப் படத்துல காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்னு எல்லாமே என்னால ஹேண்டில் பண்ண முடியுது. இதுக்குக் காரணம் என்னன்னா, இதுக்கு முன்னாடி படங்கள்ல நான் பண்ணின முயற்சிகள்தான். ஒரு நடிகருக்கான அடிப்படை இப்ப தெரிஞ்சிருக்கு. இயக்குநர்கள் வழிகாட்டுதலோட இன்னும் பெட்டரா பண்ணணுவேன்."

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

``தமிழ் சினிமால முக்கியமான இயக்குநர்களுடைய படங்கள்ள இன்னும் நடிக்க ஆரம்பிக்கலைன்னு வருத்தம் இருக்கா?''

``அந்த மாதிரியான வருத்தமோ, ஆசையோ சுத்தமா எனக்குக் கிடையாது. நல்ல கதைகள், அதைச் சரியா எடுத்துட்டுப் போகக் கூடிய ஒருத்தர்கூட சேரணும்னு ஆசைப்படுவேன். பெரிய இயக்குநர்கள் கிட்ட போனாலே பிசினஸ், பட்ஜெட், சம்பளம்னு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு. இப்படி வேணா சொல்லலாம், நான் படங்கள் பண்ணின, இயக்குநர்கள் எல்லாருமே அடுத்தடுத்து பெரிய ஹீரோக்கள் கூட படம் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ, 'இன்று நேற்று நாளை' இயக்குநர் அடுத்து சிவகார்த்திகேயன் கூட, 'ராட்சசன்' இயக்குநர் அடுத்து தனுஷ் கூட, சுசீந்திரன் சார் 'வெண்ணிலா கபடிக்குழு'வுக்குப் பிறகு அடுத்து கார்த்தி கூட படம் பண்ணார்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உங்க கரியர்ல சின்ன பிரேக்குக்குப் பிறகு வர இருக்க படம் FIR (Faizal Ibhrahim Raiz) கதைக்குள்ள வந்தது எப்படி?''

``வேறவொரு தயாரிப்பாளர் மூலமாதான் இந்தப் படத்தை ஆரம்பிச்சோம். இந்தக் கதை கேட்கும்போது, பர்சனலா எனக்கு கனெக்ட் ஆச்சு. கன்டென்ட்டாவும் நல்லா இருந்தது. கதை நாங்க ஆரம்பிச்சபோது எப்படி இருந்ததோ, அதை அப்படியே கொண்டு போயிருக்கோம். சி.ஏ.ஏ மாதிரியான பிரச்னைகள் இப்ப போயிட்டு இருக்குங்கறதுக்காகப் படத்துல வலிந்து எதையும் திணிக்கலை".

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

''கெளதம் மேனன் என்ன சொன்னார்?''

``இந்தப் படத்துடைய இயக்குநர் மனு ஆனந்த், கெளதம் சார் கிட்ட வொர்க் பண்ணினவர். கதை சொல்லும்போது `அந்த பவர்ஃபுல்லான கேரக்டருக்கு கெளதம் சார் பண்ணினா நல்லா இருக்கும். உங்க குருதானே, கேளுங்க'ன்னு சொன்னேன். கதை கேட்டுட்டு அவரும் ஒத்துக்கிட்டார். கெஸ்ட் ரோல் மாதிரி இல்லை. படம் முழுக்க இருப்பார். கெளதம் மேனன் சார் படங்கள் ரொம்ப பிடிக்கும். யார் படங்களைப் பார்த்து ரசிச்சேனோ, அவரே என்னுடைய புரொடக்‌ஷன்ல நடிக்கறதுங்கறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். லைஃப்ல கொஞ்சம் பிரச்னைகள்னால மன அழுத்தத்துல இருந்தபோது, 'வாரணம் ஆயிரம்' பட வசனங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அதை அவர்கிட்ட சொல்லுபோது, 'யாரையோ நான் இன்ஸ்பையர் பண்ணிருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு'னு சொன்னார்."

`` `காடன்' படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?''

``இயற்கை நம்மகிட்ட கோபப்பட்டா அவ்வளவுதான். காடும், காட்டுக்கு யானையும் எவ்வளவு முக்கியங்கறதை `காடன்' பேசும். காடு, கடல், மின்னல், மலைன்னு எனக்கு சின்ன வயசுல இருந்தே பயம். `நீர்ப்பறவை' பண்ணினபோதெல்லாம் ரொம்ப பயந்தேன். `கும்கி' படம் பார்த்து யானை கூட படம்லாம் பண்ணவே கூடாதுன்னு இருந்தேன். ஆனா, கடைசில சிக்கவச்சிட்டீங்களே'னு பிரபு சார்கிட்ட சொன்னேன். அப்படி இருக்கும்போது எனக்கு 'காடன்' ஒரு டஃப்பான எக்ஸ்பீரியன்ஸ். காட்டுக்குள்ள ஒரு யானையோட ஷூட் பண்றதுங்கறது ஈஸியே கிடையாது. சவாலான இந்த விஷயத்தைக் கைல எடுத்துட்டுப் பண்ணினோம். படத்துல இருக்க யானை பேரு உன்னி கிருஷ்ணன். அவரோட பழக்கம் வரதுக்காக ஷூட்டிங் இல்லாத சமயத்துல யானையைக் குளிப்பாட்டி விடற வேலையை நான்தான் பார்த்துக்கிட்டேன். எல்லா பக்கமும் அதைத் தேச்சு குளிப்பாட்டி விட்டு, எனக்கு பாடிபில்டிங் பண்ணி, ஆர்ம்ஸ் வராத குறைதான். எனக்கும் ராணாவுக்கும் உன்னி கிருஷ்ணன் கூட இருக்க கெமிஸ்ட்ரிதான் படத்துடைய ஹைலைட்.''

காடன்
காடன்

நீங்க மன அழுத்ததுல இருந்தப்ப நண்பர்களுடைய சப்போர்ட் எந்த அளவுக்கு முக்கியமானதா இருந்தது?

"முதல்ல எனக்குக் குடி பழக்கம் இருக்கு, டிப்ரெஷன்ல இருந்தேன்ங்கறதை நண்பர்கள்கிட்ட ஓப்பன் அப் பண்ணேன். ஏன்னா இனிமேல், அந்தப் பக்கம் போகக் கூடாதுங்கறதுக்கு எனக்கு நானே குடுத்துக்கிட்ட ரிமைண்டர் அது. எந்த ஒரு விஷயத்தையும் நாம கன்ட்ரோல்ல வச்சிருக்கணும். அது நம்மை கன்ட்ரோல்ல எடுத்துக்கும்போதுதான் பிரச்னை. இந்தக் காலகட்டத்துல என்னை மீட்டு வரதுல உதவியா இருந்தது என் அப்பா, என்னுடைய நெருங்கிய நண்பன் சயத், ட்ரெய்னர் ஹரி இவங்க மூணுபேரும்தான்."

'' '83' படத்துல ஜீவா நடிக்கிறார். அந்த மாதிரி எந்த ஸ்போர்ட்ஸ் பர்சனுடைய பயோபிக்ல நீங்க நடிக்கணும்னு ஆசை?''

"கிரிக்கெட்டர் ஶ்ரீகாந்த் வட இந்திய முகங்களுக்கு இடையில் எப்படி போய் சர்வைவ் ஆகி ஜெயிச்சார்ங்கற கதையையே தனியா பயோபிக்கா எடுத்தா இன்னும் நல்லா இருக்கும். அதுமட்டுமல்லாம, வெற்றிக்குக் கிட்ட வந்து மிஸ் பண்ணினவங்க கதைகளைக் கண்டுபிடிச்சு படங்களா பண்ணணும்."

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
``விலகிடலாம்னு முடிவெடுக்கும் முன்னாடி, ஏன் ஆரம்பிச்சோம்னு யோசிங்க!" - விஷ்ணு விஷால்

''பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாகூட ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்க போல?''

"சமீபத்தில்தான் அவங்களைச் சந்திச்சேன். நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பும், புரிதலும் எங்களுக்குள்ள இருக்கு. ஆனா, இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகுதுன்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்".

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு