Published:Updated:

"என் டிப்ரஷனுக்கு முக்கிய காரணமே சூரிதான்" - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

நில மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. இது குறித்து விஷ்ணு விஷாலிடம் பேசினேன்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யுமான ரமேஷ் குட்வாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடிகர் சூரி நிலமோசடி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து சூரி புகார் கொடுத்த ஒரு சில மணி நேரங்களில் விஷ்ணு விஷால் தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. பிரச்னை குறித்து நடிகர் விஷ்ணு விஷாலிடம் பேசினேன்.

"இந்தப் பிரச்னை மூணு வருஷமா போயிட்டிருந்தது. அதனாலதான், நான் சூரியோட நடிக்கிறதையே நிறுத்திட்டேன். அவர் இப்படி பண்ணுவார்னு நினைக்கவேயில்ல. என்னதான் இருந்தாலும் ஒன்னா நடிச்சிருக்கோம். அதனாலதான் என் தரப்புல இருந்து எதுவும் சொல்லாமல் இருந்தேன். இவர் சொன்னதுக்கு பிறகு, நானும் சூரி என்னெல்லாம் பண்ணார்னு பேச ஆரம்பிச்சேன்னா எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும். உண்மை என்னனு நான் சொல்றதை விட இன்னும் கொஞ்ச நாள்கள்ல விசாரணையில தெரியவரும்" என்றவரிடம் தொடர்ந்து பேசினேன்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
பா.காளிமுத்து

"நாலு வருஷத்துக்கு முன்னாடி 'வீரதீரசூரன்'னு ஒரு படம். அந்தப் படத்துடைய சமயத்துல ஆரம்பிச்ச பிரச்னை இது. அன்புவேல் ராஜன் அப்படிங்கிறவரை என் அப்பாவுக்குத் தெரியும். ஒருநாள் நான் படம் தயாரிக்கணும்னு ஆசைப்படுறேன்னு அப்பா மூலமா என்கிட்ட பேசினார். அப்படி ஆரம்பிச்ச படம்தான் 'வீரதீரசூரன்'. அவர் சூரியை ஷூட்டிங் ஸ்பாட்ல நாலஞ்சு முறை பார்த்திருக்கார். அப்படி பழக்கமாகி சூரி அவர்கிட்ட நிலம் வாங்கியிருக்கார். எங்கக்கிட்ட வந்து 'அவர்கிட்ட நிலம் வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். எல்லா விவரமும் பேசிட்டேன். நாளைக்கு வாங்கப்போறேன். அதை உங்கக்கிட்ட சொல்லணும். அவர் ஆள் எப்படி?'னு கேட்டார். 'ரெண்டு வருஷ பழக்கம். படத்தை சேர்ந்து தயாரிக்கணும்னு சொன்னார். ஓகேனு சொன்னோம். அவ்ளோதான். உங்களுக்கு பேப்பர் எல்லாம் சரியா இருக்கானு பார்த்திடுங்க'னு சொன்னோம். எல்லாம் சரியா இருக்குனு சொன்னார். 'அப்போ உங்களுடைய லீகல் நபர் யாரோ அவரை வெச்சு நீங்க பேசிக்கோங்க. எங்களுக்கும் நிலத்துக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்கும் படத்துக்கும் மட்டும்தான் சம்பந்தம்'னு தெளிவா சொல்லியாச்சு. திடீர்னு ஒரு நாள் வந்து 'என்னை அவர் ஏமாத்திட்டார்'னு சொன்னார். அப்புறம் அப்பாவை வந்து மீட் பண்ணார். என்னாச்சுனு கேட்டா, 'இந்த நிலத்தை அவர்கிட்ட வித்தவர் என்கிட்ட பேசினார். எனக்கு இவர் அதிக விலைக்கு வித்து என்னை ஏமாத்திட்டார்'னு சொன்னார், சூரி.

'ஏங்க இதுதானே பிஸினஸ். ஆறு கோடிக்கு படம் எடுத்து பத்து கோடிக்கு வித்தா, நீங்க ஆறு கோடிக்கு தானே படம் எடுத்தீங்கனு சொல்வீங்களா?'னு கேட்டேன். ஆனாலும், சூரிக்காக அன்புவேல் ராஜன்கிட்ட எங்க அப்பா பேசினார். அப்புறம், கொஞ்ச நாள் கழிச்சு வந்து 'அவர் மேல கேஸ் போடணும். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசுங்க'னு சொன்னார். அவர் 'இது சிவில் விஷயம். ஒரு போலீஸா இந்த மாதிரி விஷயத்தை யார்கிட்டயும் சொல்லி பண்ணமாட்டேன். பண்ணதும் கிடையாது. நாங்க உங்களை நிலத்தை வாங்க சொல்லலை. நீங்களே எல்லாமே பேசிட்டு எங்ககிட்ட வந்தீங்க. நாங்க என்ன பண்றது'னு சொல்லிட்டார். அவர் இப்போ புகார் கொடுத்திருக்கார்னு தகவல் தெரிஞ்சதும் ஷாக்கா இருந்தது.

சூரி 'உங்களை நம்பித்தான் நிலத்தை வாங்கினேன்'னு சொல்றார். இதுல என்ன நியாயம் இருக்கு? இந்த நிலத்தை வாங்கியே ஆகணும்னு யாராவது கட்டாயப்படுத்தினாங்களா? எல்லாமே இவர் பண்ணிட்டு, எனக்கு காசை திருப்பி வாங்கிக்கொடுங்கன்னு மூணு வருஷமா எங்களை கேட்டுட்டு இருக்கார். விசாரணையில இதுல சம்பந்தப்பட்டவங்க எல்லோரையும் கூப்பிடுவாங்க. அப்போ உண்மை தெரியும்.

அந்த நிலம் எங்க இருக்குனு கூட எனக்கு தெரியாது. நான் 'கவரிமான் பரம்பரை' படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை அவர் எப்படி வெளியே சொல்றார்னா, தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி பண்ன முதல்ல இந்தப் பணத்தை வெச்சுக்கோங்க. மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமா திருப்பித் தரேன்னு சொல்லி கொடுத்திருக்கேன்னு மாத்தி சொல்றார். 'கவரிமான் பரம்பரை' படமே நடக்கலை. எனக்கு அந்த அட்வான்ஸை திருப்பி கொடுத்திடுங்கனு கேட்க ஆரம்பிச்சேன். ஆனா, இப்போ வரை எனக்கு அந்த அட்வான்ஸ் பணம் திரும்ப வரலை. மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு. ஆனாலும், நான் நடிகர் சங்கத்திலேயோ, தயாரிப்பாளர் சங்கத்திலேயோ எங்கேயும் புகார் கொடுக்கலை. என்ன பிரச்னைனாலும் நமக்குள்ள பேசி முடிச்சுக்கணும். ஒருமுறை பிரச்னை வெளியே போயிடுச்சுனா, அவர் என்னைப் பத்தி பேச, நான் அவரைப் பத்தி பேசனு மாறிமாறி போய்க்கிட்டே இருக்கும். தேவையில்லாமல் எங்களுடைய இமேஜ் வெளியில பாதிக்கும். உண்மை என்னனு எங்களுக்கும் சூரியை சார்ந்த சில பேருக்கும் தெரியும்.

தந்தையுடன் விஷ்ணு விஷால்
தந்தையுடன் விஷ்ணு விஷால்

சூரி ரொம்ப தவறா நடந்துக்கிட்டு இருக்கார். என் மேலயும் எங்க அப்பா மேலயும் தேவையில்லாம புகார் கொடுத்திருக்கார். எங்க மேல தவறு இருந்தா ஏன் இவர் மூணு வருஷமா புகார் கொடுக்கலை. என் அப்பா ரிட்டையர் ஆனதும் ஏன் கொடுக்கணும்... காரணம் புரியுதா? உண்மை என் பக்கம் இருக்கும்போது, அப்பா பதவில இருந்தாலும் இல்லைனாலும் நாங்க பயப்படமாட்டோம். நான் அவர் மேல வழக்கு தொடர்வேன். படம் ஒண்னா பண்ணியிருக்கோம். என் கரியர் ஆரம்பத்துல இருந்து அவர் கைக்கொடுத்திருக்கார்ங்கிற ஒரே காரணத்துக்காக நான் அமைதியா இருந்தேன். இவர் இந்தளவுக்கு போகும்போது எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

நான் ஒரு கேள்வி கேட்குறேன். இதே சூரி அண்ணன் இந்த நிலத்தை வெச்சு 10 கோடி ரூபாய் சம்பாதிச்சிருந்தார்னா, நான் அவர்கிட்ட 'நான் சொல்லித்தான் இந்த நிலத்தை வாங்குனீங்க. எனக்கு 5 கோடி கொடுங்க'னு கேட்டா அவர் என்ன சொல்லியிருந்திருப்பார்? "உங்க மூலமா வாங்கலையே. அந்த ஆள் ஓகேவானு ஒரு சின்ன ஐடியா மட்டும்தானே கேட்டேன்"னு சொல்வார்ல. நான் சினிமாவுல மட்டும்தான் இருக்கேன். சூரி சினிமாவைத் தாண்டி ஊர்ல ஹோட்டல் பிஸினஸ் பண்றார். காசை டபுளாக்கணும் ட்ரிபிளாக்கணும்னு நினைக்கிறது அவர்தான். நீங்க பேராசைப்பட்டா கொஞ்சம் அடிபடத்தான் செய்யும். அதுதான் வாழ்க்கை.

அதிக விலைக்கு நிலத்தை விக்குறார்னா அதை வாங்காமலே இருந்திருக்கலாம்ல. இந்த மூணு வருஷத்துல எங்கெல்லாம் எங்களை அவமானப்படுத்த முடியுமோ பண்ணிட்டார். என் பெயரையும் அப்பா பெயரையும் உள்ளே இழுத்தா, நான் காசு கொடுத்திடுவேன்னு நினைச்சுட்டு இருக்கார். அந்த தயாரிப்பாளர் அன்புவேல்ங்கிற பெயர் நிறைய மீடியாவுல சொல்லலை. என் அப்பாகிட்ட சூரி தனிப்பட்ட முறையில எவ்வளவோ உதவி வாங்கிருக்கார். அதெல்லாம் நான் வார்த்தைகள்ல சொல்லமுடியாது. சூரி சொன்னார்னு நிலத்தை வித்தவர்கிட்ட பேசுனா, 'நீங்க ஏன் உள்ள வர்றீங்க? நான் கழுத்துல கத்தி வெச்சு மிரட்டி நிலத்தை வாங்க வெச்சேனா? இல்லை போலி பேப்பர் கொடுத்தேனா? எல்லாம் சரியா இருக்குனு பார்த்து ஓகே சொல்லித்தானே நிலத்தை வாங்குனார்? எனக்கும் அவருக்குமான பிரச்னை. நான் பார்த்துக்கிறேன்'னு சொன்னார். அப்போ இருந்து இப்போவரை நாங்க அவர்கிட்ட பேசலை. 'வீரதீரசூரன்' படமும் டிராப் ஆகிடுச்சு. எனக்கும் அதனால ஒரு வருஷம் கேப் விழுந்திடுச்சு. அப்புறம், அந்தப் படத்தை 'கதாநாயகன்'னு மாத்தி நான் முடிச்சேன். எனக்கும் அந்தப் படம் நஷ்டம். நான் சூரிக்கிட்ட எனக்கு நஷ்டமாகிடுச்சு காசை திருப்பி கொடுங்கன்னு கேட்கமுடியுமா? ஓரளவாவது நியாயமா இருக்கணும்.

அப்படியே எங்க அப்பா சம்பாதிக்கணும்னு நினைச்சாலும் சூரிக்கிட்டயா சம்பாதிக்கணும்னு நினைப்பார். என் வேதனை புரியுதா உங்களுக்கு? சினிமாவுடைய சில விஷயங்கள் சினிமாவுக்குள்ளதான் இருக்கணும்னு நினைக்கிறவன் நான். நம்மளை நிறைய பேர் ஃபாலோ பண்றாங்க. நம்ம பிரச்னையை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தால் நமக்குதான் அசிங்கம். இதுவரைக்கும் அவர் கொடுத்த பேட்டி எல்லாம் பாருங்க. விஷ்ணு சூப்பரான ஆள், இப்படிப்பட்டவன்னு பேசிட்டு, இன்னிக்கு என்னை இப்படி சொன்னா அதுவே பொய்தானே. உனக்கு என்மேல கோபம் இருந்திருந்தால் நான் தப்பு பண்ணிருக்கேன்னு நினைச்சா 'கதாநாயகன்' படத்துல நடிக்கவோ, ப்ரோமோஷனுக்கோ ஓகே சொல்லியிருக்கக்கூடாது.

சூரி
சூரி

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நான் டிப்ரஷன்ல இருந்தேன்னு சொல்லியிருந்தேன். இப்போ யோசிச்சு பார்த்தா சூரி அதுல முக்கியமான காரணமா இருந்திருக்கார். தினமும் எனக்கு போன் பண்ணி என்னை 'நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட'னு டார்ச்சர் பண்ணி, என்னை புலம்ப வெச்சு ஒரு மாதிரியாக்கிட்டார். இதுல நான் கத்துக்கிட்ட விஷயம் ஒண்ணுதான். சினிமாவுல யார்கூடவும் ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கக்கூடாது. இதுதான் என் தரப்பு விஷயம். இதுக்கு பிறகு, சட்டப்படி என்ன பண்ணமுடியுமோ நான் பண்ணுவேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு