சினிமா
தொடர்கள்
Published:Updated:

விசித்திரன் - சினிமா விமர்சனம்

விசித்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
விசித்திரன்

பூர்ணா, மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள். பாடல் காட்சிகளைத் தவிர அவர்களின் பங்களிப்பு வேறெதிலும் பெரிதாக இல்லை

மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தை அப்படியே தலைப்பை மட்டும் மாற்றி தமிழுக்கு இறக்கினால் அதுதான் ‘விசித்திரன்.’

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ஆர்.கே.சுரேஷுக்கு பொழுதெல்லாம் குடிப்பதிலேயே போகிறது. சர்வீஸில் இருந்தபோது இவர் காட்டிய புத்திசாலித்தனத்தை நினைவில் வைத்து அவ்வப்போது சிக்கலான கேஸ்களுக்கு துப்புத் துலக்க இவரை டிபார்ட்மென்ட் கூப்பிட, உதவி வருகிறார். இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவி விபத்தில் மரணமடைய, அவர் வாழ்க்கையில் வெறுமை இன்னமும் அதிகமாகிறது. யதேச்சையாக மனைவியின் விபத்தை அவர் விசாரிக்கத் தொடங்க, வெளிச்சத்திற்கு வருகிறது ஒரு மாபெரும் குற்றச்செயல். அந்தக் குற்றத்தின் வேரைத் தேடி அவர் பயணப்படுவதுதான் மீதிக்கதை.

விசித்திரன் - சினிமா விமர்சனம்

ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் அமைதியாய் ‘மாயன்’ கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். ஆனால் அவரின் உடல்மொழியில் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு நிதானம் தென்படுவது உறுத்தல். சோகக் காட்சிகளில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதிலும் தடுமாற்றம் தெரிகிறது. தமிழ்சினிமாவில் மிக அரிதாய்த் தோன்றும் கதாபாத்திரங்களுள் ஒன்று பக்ஸுக்கு. தன்னால் இயன்ற அளவிற்கு அதற்கு நியாயம் சேர்க்க முயல்கிறார் பக்ஸ்.

பூர்ணா, மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள். பாடல் காட்சிகளைத் தவிர அவர்களின் பங்களிப்பு வேறெதிலும் பெரிதாக இல்லை. இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ் மரியான் எனத் தேர்ந்த நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் கதாபாத்திரங்களில் கவனிக்கத்தக்க அம்சங்கள் என எதுவுமில்லை.

பின்னணி இசையில் ஏமாற்றும் ஜி.வி ஒரே ஒரு பாடலில் மட்டும் தன் முத்திரை பதித்திருக்கிறார். மலைப்பிரதேசத்தின் இயல்பான அழகை அப்படியே தன் கேமராக்கண்களில் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன்.

விசித்திரன் - சினிமா விமர்சனம்

மலையாளத்தில் இயக்கிய ஜி.பத்மகுமாரே இந்தப் படத்திற்கும் இயக்குநர். தமிழுக்கேற்றாற்போல ஏகப்பட்ட மாற்றங்களைப் புகுத்தாமல் அசலின் அதே விறுவிறுப்பைத் தக்க வைத்திருக்கிறார். இதனால் படமும் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. ஆனால் கதையின் போக்கில் நகராமல் சட் சட்டென வெட்டப்படும் காட்சிகள் படத்தின் ஜீவனைச் சிதைக்கின்றன.

சினிமாவில் அதிகம் பேசப்படாத சிவப்புச் சந்தையைப் பற்றி சினிமாத்தன்மை இல்லாமல் பேசமுயன்றதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் மாட்டக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் இருக்கக்கூடிய அதே ஊரில் ஏன் திரும்பத் திரும்ப அதேவகை குற்றங்கள் நிகழவேண்டும் போன்ற லாஜிக் கேள்விகள் நிறைய எழுவது உறுத்தல். இறுதி நீதிமன்றக் காட்சியில் இன்னமுமே தெளிவாய் இயக்குநர் விவரித்திருக்கலாம்.

அந்நியத்தன்மை விடுத்து கொஞ்சம் இயல்பாய் இருந்திருந்தால் விசித்திரன் ரசிக்க வைத்திருப்பார்.