கட்டுரைகள்
Published:Updated:

விசு என்னும் குடும்பக் கலைஞன்!

விசு
பிரீமியம் ஸ்டோரி
News
விசு

குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் விசு ஏற்ற சீனிவாசராகவன் பாத்திரம் அவரின் தாய் மாமாவின் பிரதிபலிப்பு.

வேறு யாராக இருந்தாலும் அடங்கியும் முடங்கியும்தான் போயிருப்பார்கள். மாரடைப்பு காரணமாக மறைந்த எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என்று மூன்று முகங்கள் கொண்டிருந்த விசுவுக்கு ‘வில் பவர்’ அதிகம்.

சமீப வருடங்களாக வாரத்துக்கு மூன்று நாள்கள் டயாலிசிஸ், அதற்கு முன்பிருந்தே கையில் இன்சுலின் மருந்து, ஊசியுடன்தான் வெளியே வர முடியும் என்ற நிலை. இருப்பினும் மாலை நேரங்களில் நாடகங்கள் பார்க்க வந்துகொண்டிருந்தார். விழாக்களுக்கு அழைத்தால் போனார். மேடையேறிப் பேசினார். அதில் விசு பிராண்ட் நகைச்சுவை தெளித்து சிதறும்.

விசு
விசு

கடந்த ஜனவரியில் விசுவைக் கடைசியாகச் சந்தித்தேன். ‘சியாம ராகம்’ மலையாளப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு மனைவியுடன் வந்திருந்தார். அன்று ஜேசுதாஸ் வருவதற்கு ஒருமணி நேரம் தாமதமானாலும், பொறுமையாக உட்கார்ந்திருந்து படம் பார்த்துவிட்டுப் போனார்.

தனது கலை வாழ்க்கையை நாடக மேடையில் துவக்கியவர் அவர். முதலில் ஓய்.ஜி.பார்த் தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவுடன் சிறிது காலம் இணைந்திருந்தார்.

பின்னர் அங்கிருந்து விலகி தனியாக வீடு கட்டி விளையாட ஆரம்பித்தார். ஆம். அவரின் நாடகங்கள் எல்லாமே மிடில் கிளாஸ் வீடுகளில் நடக்கும் குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட வைதான். வசனங்களில் மிளகாய்ப்பொடி தூவியது மாதிரி அவ்வளவு காரம் இருக்கும். ஒவ்வொரு பாத்திரத்தையும் உளி கொண்டு செதுக்கியிருப்பார் விசு.

நாடகங்களில், பார்ப்பவர்களைக் கண் கலங்க வைத்த குடும்பங்களையே சினிமாவுக்கும் கடத்தி வந்தார். ‘குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்’ என்று ஊர் மெச்சியது.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் விசு ஏற்ற சீனிவாசராகவன் பாத்திரம் அவரின் தாய் மாமாவின் பிரதிபலிப்பு. உலக ஞானமும் பொது அறிவும் அதிகம் கொண்டிருந்த தாய்மாமா, எந்த வேலைக்கும் போகாமல் வீணாகப் பொழுதைக் கழித்தவராம். ‘எங்கேயாவது போய் பிணம் தூக்கியாவது சம்பாதித்து வா’ என்று வீடு விரட்டிவிட, நிஜமாகவே பிணம் தூக்கிய தாய்மாமா, விசுவை ரொம்பவும் பாதித்துவிட, சினிமாவில் மூட்டை தூக்கிப் பிழைப்பவராக சீனிவாசராகவனைப் படைத்துக் கலங்க வைத்தார்.

விசு
விசு

சன் டிவியில் 13 வருடங்கள் அரட்டை அரங்கம், ஜெயா தொலைக்காட்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக மக்கள் அரங்கம் விசுவின் வாழ்க்கையில் மைல்கற்கள். முகம் துடைக்க கையில் கசங்கிய டவல் வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று பலதரப்பட்டவர்களை இந்த நிகழ்ச்சிகள் வாயிலாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் விசு. இதனால் பலனடைந்தவர்கள் பலர் உண்டு.

முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது ஒருமுறை இலங்கைக்கு பயண மானார்.அங்கே கதிர்காமம் முருகன் கோயில் வாசலில் நின்றபடி, ஏற்கெனவே விசு தான் எழுதிய வசனங்களைப் படிக்க, உடன் சென்ற பயணி, ஆசிரியை உமா, “ எதிர்காலத்தில் ஒரு நாள் நீங்கள் பெரிய கதாசிரியராக, வசனகர்த்தா வாக வருவீர்கள்...” என்று வாழ்த்தினாராம். “அதனாலேயே என் எல்லாக் கதாநாயகிகளுக்கும் உமா என்ற அவரது பெயரையே வைத்தேன்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் விசு.

இன்றுவரை விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ அதிகமாக நினைவுகூரப்பட்டும், பேசப்பட்டும் வரும் படம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ஒரு காட்சி, சென்ற வாரம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது - இன்றைய social distancing என்ற பிரயோகத்துக்குப் பொருத்தமாக இருப்பதால்!

இன்று திரும்பிவர இயலாத தொலைவுக்குத் தன் ரசிகர்களிடமிருந்து விசு விலகிச் சென்றுவிட்டது சோகத்தின் உச்சம்!