Published:Updated:

``பக்திப் படங்களின் வருகை குறைந்தது எதனால்?!" கலைஞானம், சுரேஷ் கிருஷ்ணா விளக்கம் 

ரஜினி, கமல், இளையராஜா என 80-களில் ஆக்‌ஷன் ஹீரோ படங்கள், சமூகப் படங்கள் மற்றும் கிராமியப் படங்களை நோக்கி ரசிகர்கள் சென்றுவிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற்போல வந்த பக்திப் படங்களின் நிலை என்ன?!

திருவிளையாடல்
திருவிளையாடல்

பொதுவாகவே கடவுள் பற்றிய தமிழர்களின் கற்பனைகளும், வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. நட்டக்கல்லையும் வணங்குவார்கள், கலைநயம் மிக்க கோயில்களுக்குச் சென்றும் வழிபட்டு வருவார்கள். கூடவே, ஆன்மிகம் குறித்த கதைகளைக் கேட்பதில் பேரார்வம் கொண்டவர்கள். கிராமியத் திருவிழா தொடங்கி, பெருநகரங்கள் வரை நாடகங்களாக மக்கள் விடிய விடிய பார்த்துக் களிப்பார்கள்.

பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்'
பக்திப் படம் 'சம்பூர்ண ராமாயணம்'

குறிப்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு புராணகாலக் கதைகளான ராமாயணம், மகாபாரதம் ஆகட்டும், மண்வாசனைக் கதைகளான `நல்ல தங்காள்', `கண்ணகி சபதம்' வரை பல வகையான நாடகங்கள் தமிழகத்தின் மேடைகளில் தினமும் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறிக்கொண்டே இருந்தன.

கூத்து நாடகமாகி, நாடகம் சினிமாவாக மாறிய பிறகும், ராமாயணம், மகாபாரதமும் அவற்றின் துணைக் கதைகளும், ராஜா - ராணிக் கதைகளுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.

கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் எனப் பாடல்கள் பாடுவதில் வல்லமை பெற்றவர்களின் படங்கள் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தன. `ஹரிதாஸ்' ஒரே தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கொண்டாடியது.

சிவாஜி - நாகேஷ்
சிவாஜி - நாகேஷ்

1952-ல் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த `பராசக்தி'யின் வெற்றி, தமிழ் சினிமாவின் பார்வையை சமூகப் படங்களின் பக்கம் முற்றிலுமாகத் திருப்பியது. ஒன்றிரண்டு பக்திப் படங்கள் வந்தாலும், பெரிதாக வெற்றி பெறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதுநாள் வரை கறுப்புக் கோயிலில் காவல் தெய்வமாக வழிபட்டுவந்த கிராம மக்கள் `மதுரை வீர'னைத் திரையில் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

Madurai Veeran, MGR
Madurai Veeran, MGR

தியேட்டர்களெல்லாம் திருவிழாக் கோயில்களாயின. மக்கள் அருகிலிருந்த நகரங்களுக்கு மதிய சாப்பாட்டை முடித்ததும் மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு ஆறு மணி காட்சியைப் பார்க்க வந்தனர். தியேட்டரைச் சுற்றியிருந்த பகுதிகளில் 100, 150 வண்டிகளில் குடும்பம் குடும்பமாக அழைத்து வந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு, சரித்துவிடப்பட்ட வண்டிக்கருகே காளை மாடுகள் வைக்கோலை மென்றுகொண்டிருந்தன.

1958-ல் வெளிவந்த `சம்பூர்ண ராமாயணம்' சென்னையில் 26 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. ராமராவ் ராமனாகவும், சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்திருந்தனர். படைப்பை முன்னே நிறுத்தி சிவாஜி எனும் ஆளுமை பரதனாக பின்னே நின்றார். `சக்கரவர்த்தி திருமகன்' என ராமாயணத்தை எழுதிய ராஜாஜி, `பரதனைக் கண்டேன்' எனப் படத்தைப் பெரிதும் பாராட்டினார்.

கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். சிவாஜியின் நாடககால நண்பர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

ஏ.பி.நாகராஜன்
ஏ.பி.நாகராஜன்

அப்போதைய அரசியல் சூழலில் தி.மு.க-வில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவே, சிவாஜி கணேசன் அங்கிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். அவர் தன் நண்பரான பீம்சிங்க்குடன் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார். அதன் பின் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். 

`வீரபாண்டிய கட்டபொம்மன்', `கப்பலோட்டிய தமிழன்' உள்ளிட்ட தேசப்பக்திப் படங்களிலும், பீம் சிங்கின் `பா' வரிசைப் படங்களிலும் நடித்துப் பெரும்புகழ் பெற்றார்.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் ஹாலிவுட் படங்களான 'டென் கமாண்ட்மென்ட்ஸ்', `பென்ஹர்', `கிளியோபாட்ரா' போன்ற புராணம் மற்றும் வரலாற்றுப் படங்கள் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தன.

ரவிவர்மா சிவன் - பார்வதி - விநாயகர், லட்சுமி, சரஸ்வதி என ஓவியங்களில் கடவுள்களைப் படைத்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். எல்லோரது வீட்டுப் பூஜையறையில் இன்றும் ரவிவர்மா வரைந்த லட்சுமி, சரஸ்வதி படங்களே ஆட்சி செய்கின்றன. 

அப்படியொரு தாக்கத்தைத் திரையில் ஏற்படுத்திக் காட்டியவர், ஏ.பி.நாகராஜன். `திருவிளையாடல்', `சரஸ்வதி சபதம்', `கந்தன் கருணை', `திருவருட்செல்வர்', `திருமால் பெருமை', `அகத்தியர்', `கிருஷ்ண லீலா' ஆகிய படங்கள் இந்துக் கடவுள்களை மக்களின் கண்முன் நிறுத்தின. பட வெளியீட்டின்போது திரையில் தோன்றிய கடவுள்களுக்கு, விளக்கேற்றி பூஜை செய்தார்கள் ரசிகர்கள்.

கர்ணன்
கர்ணன்

குறிப்பாக, `திருவிளையாடல்' திரைப்படம் எக்காலத்தையும் வென்று தனித்துவம் பெற்று இன்றளவும் திகழ்கின்றது. எல்.பி ரெக்கார்டுகளில், கிராமபோன் இசைத்தட்டில் `திருவிளையாடல்' கதை, வசனம் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை என்கிற அளவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

`திருமலை தென்குமரி' எனும் இவரது படம், திருப்பதி தொடங்கி கன்னியாகுமரி வரை பேருந்திலேயே பயணிக்கும் யாத்திரை படமாக அமைந்து, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.

`வீரபாண்டி கட்டபொம்ம'னை இயக்கிய பி.ஆர்.பந்துலு, `கர்ணன்' திரைப்படத்தைத் தயாரித்து, மகாபாரதக் கதைக்குப் புகழ் சேர்த்தார்.  

இந்த நிலையில், எம்.ஜி.ஆரை வைத்துப் பல படங்கள் எடுத்த முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர், `துணைவன்', `தெய்வம்', `திருவருள்' எனப் பல படங்களைத் தயாரித்து, பக்திப் பயிர் வளர்த்தார்.  

`கற்பகம்', `பணமா பாசமா' போன்ற குடும்பப் பாங்கான படங்களை இயக்கி வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் சாமிப் படங்களின் மீது பார்வை திரும்பியது.

சாண்டோ சின்னப்பா தேவர்
சாண்டோ சின்னப்பா தேவர்

`ஆதிபராசக்தி' படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. பெண்கள் திரள் திரளாகப் புறப்பட்டுவந்து `ஆதிபராசக்தி'யை வழிபட்டுச் சென்றனர். 80-களின் மத்தியில் ஶ்ரீமன் நாராயணனின் பத்து அவதாரங்களையும் `தசாவதாரம்' எனும் பெயரில் இயக்கினார், படம் பெரும் வெற்றி பெற்றது. 

இந்த நேரத்தில் `அன்னக்கிளி', `16 வயதினிலே', `உதிரிப்பூக்கள்', `மவுன கீதங்கள்' போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை நவீன சினிமாவை நோக்கி நகர்த்தின. எம்.ஜி.ஆர் அரசியலுக்குச் சென்றுவிட்டார். சிவாஜிக்கும் அத்தனை சிறப்பான படங்கள் அமையாத நேரம்.

1978-ல் கே.சங்கர் இயக்கிய `வருவான் வடிவேலன்' திரைப்படம் புராணப் படமாக இல்லாமல், நடப்பு வாழ்க்கையில் முருகக் கடவுள் தன் பக்தைக்கு எப்படி உதவினார் என்பதை மலேசியா வரை சென்று பறைசாற்றியது. பக்திப் படங்களில் பெரும் வெற்றியைக் குவித்த படம் இது. பிறகு இவரின் இயக்கத்தில் வெளிவந்த `தேவி தரிசனம்', `தாய் மூகாம்பிகை', `மீனாட்சி திருவிளையாடல்', ராஜரிஷி', `ஆயிரம் கண்ணுடையாள்', `முப்பெரும் தேவியர்', `வெற்றி விநாயகர்' எனப் பல பக்திப் படங்களை இயக்கினார்.

வருவான் வடிவேலன்
வருவான் வடிவேலன்

படங்கள் மட்டுமின்றி, அதில் இடம்பெற்ற பக்திப் பாடல்களும் கிராமத் திருவிழாக்களைப் படமாக்கியது. அதில் முக்கிய அங்கமாக பக்திப் பாடல்கள் இருந்தன. 1993-ல் வெளிவந்த `புருஷ லட்சணம்' திரைப்படத்தில் வந்த `ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்' பாடலுக்குத் தியேட்டர்களில் தாய்மார்கள் பக்திப் பரவசம் அடைந்த காலமும் உண்டு.

`ஆடி வெள்ளி'யின் மூலம் 90-களில் பக்திப் படம் தந்தார், ராம.நாராயணன். தொடர்ந்து `துர்கா', `அன்னை காளிகாம்பாள்', `நாகேஸ்வரி' போன்ற படங்களைத் தந்தார்.

அனேகமாக 90-களில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த பக்தித் திரைப்படம் சௌந்தர்யா நடித்த `அம்மன்' திரைப்படமாகத்தான் இருக்கும். அந்தப் படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல அம்மன் படங்கள் வரத்தொடங்கின. ஆனால், அவற்றில் பக்தி மணத்தைவிட கிராஃபிக்ஸ் நெடியே தூக்கலாக இருந்தது.

மணி ரத்னம், ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் படங்கள் தமிழ் ரசிகர்களின் மனத்தில் வேறுபல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பக்திப் படங்கள் தயாரிப்பையே திரைத்துறையினர் கடந்த பத்தாண்டுகளில் கைவிட்டுவிட்டனர்.

ஆடிவெள்ளி
ஆடிவெள்ளி

சினிமாத்துறையில் கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்திடம் பக்திப் படங்களின் வருகை குறைந்துபோனது பற்றிக் கேட்டோம்.

``நான்கூட சிவாஜி சாரை வெச்சு `ராஜரிஷி'ங்கிற விசுவாமித்திரரின் வாழ்க்கையைப்  பெரும் பொருள்செலவில் தயாரித்தேன். ஆனால், அப்போதே சிவாஜி `இப்போது இதெல்லாம் ஓடுமா, சமூகக் கதையை எடுக்கலாமே' என்றார். நான்தான் பிடிவாதமாக எடுத்தேன். அவர் கூறியது போலவே படம் சரியாகப் போகவில்லை. 

80-களில் ஆக்‌ஷன் ஹீரோ படங்கள், சமூகப் படங்கள் மற்றும் கிராமியப் படங்களை நோக்கி ரசிகர்கள் சென்றுவிட்டனர். அத்தி பூத்தாற்போல வந்த பக்திப் படங்களும் சுத்தமாக ஓடவில்லை.

ஆடிவெள்ளிக்குப் பால்குடம் தூக்குகிற பெண்கள்தான் பக்திப் படங்களுக்குக் கை கொடுப்பவர்கள். அவர்கள் அனைவரும் டிவி முன்பாக உட்கார்ந்துவிட்டனர்.
கலைஞானம்
கலைஞானம்
கலைஞானம்

தியேட்டருக்கு வரும் இளைஞர்கள் ஆக்‌ஷன், அடிதடி, க்ரைம், ஹியூமர், த்ரில்லர் எனப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும், தெய்வ நம்பிக்கையும் இப்போதுள்ள இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் குறைவாகவே இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்" என்றார்.  

பக்திப் படங்கள் குறைந்திருப்பது பற்றி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

"இது பக்திப் படங்கள் செய்வதற்கு மிகவும் ஏற்ற தருணம்தான். என்ன காரணம் என்று தெரியவில்லை. அத்தகைய முயற்சிகள் இல்லாமல் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் வருகின்றன. சினிமாவிலும் அப்படிப்பட்ட முயற்சிகள் செய்யலாம். டெக்னிக்கலாக இப்போது நம்மிடம் வசதிகள் அதிகமிருக்கிறது. சிஜி-யிலேயே பெரிய பிரமாண்டங்களை நம்மால் கொண்டுவர முடியும். தெலுங்கில் இத்தகைய கதைகளுக்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சுரேஷ் கிருஷ்ணா
சுரேஷ் கிருஷ்ணா

ராமாயணத்தைத் தற்போதுள்ள சூழலில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். மலையாளத்தில் மகாபாரதத்தைப் பெரும் பொருள்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். மணிரத்னம்கூட `பொன்னியின் செல்வ'னை இயக்கத் திட்டமிட்டுள்ளார். நானும் தெலுங்குப் படமொன்றுக்காக மகாபாரத்தின் துணைக்கதை ஒன்றுக்குத் திரைக்கதை அமைத்து வருகின்றேன். பொறுத்திருப்போம்... விரைவில் அதிக அளவில் புராணப் படங்கள் வரும்!" என்றார், சுரேஷ் கிருஷ்ணா.